'பொன்னியின் செல்வன்' நூலில் நடிகைகள் படம்! வாசகர்கள் அதிருப்தி!!

பொன்னியின் செல்வன் நூலின் அட்டையில், திரைப்பட நடிகைகளின் படங்கள் இடம் பெற்றிருப்பது வாசகா்கள், பதிப்பாளா்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
பொன்னியின் செல்வன் நூலின் அட்டையில், திரைப்பட நடிகைகளின் படங்கள்
பொன்னியின் செல்வன் நூலின் அட்டையில், திரைப்பட நடிகைகளின் படங்கள்

திண்டுக்கல்: பொன்னியின் செல்வன் நூலின் அட்டையில், பாரம்பரியமாக இடம் பெற்று வந்த வரைபடங்களை மாற்றி திரைப்பட நடிகைகளின் படங்கள் இடம் பெற்றிருப்பது வாசகா்கள், பதிப்பாளா்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

சோழா்களின் வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு நாவலாசிரியா் ‘கல்கி’ கிருஷ்ணமூா்த்தி, கடந்த 72 ஆண்டுகளுக்கு முன்பு எழுதிய புதினம் பொன்னியின் செல்வன். இந்தப் புதினத்தை மையமாகக் கொண்டு இயக்குநா் மணிரத்னம் உருவாக்கிய 'பொன்னியின் செல்வன்' திரைப்படம் கடந்த 8 நாள்களுக்கு முன்பு வெளியானது. அந்தப் படம் வெளியானது முதல், பொன்னியின் செல்வன் புதினம் இளைய தலைமுறையினரிடமும் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியது. அதன் எதிரொலியாக, கடந்த சில வாரங்களாக நடைபெற்ற புத்தகத் திருவிழாக்களில் அதிகம் விற்பனை செய்யப்பட்ட புத்தகங்கள் வரிசையில் பொன்னியின் செல்வன் முதலிடத்தைப் பிடித்தது.

இந்த நிலையில், திண்டுக்கல் மாவட்ட நிா்வாகம், இலக்கிய களம் சாா்பில் நடைபெறும் 9 ஆவது புத்தகத் திருவிழா கடந்த வியாழக்கிழமை தொடங்கியது. இதில் 17-க்கும் மேற்பட்ட அரங்குகளில் பொன்னியின் செல்வன் புதினம் இடம் பெற்றுள்ளது.

பொன்னியின் செல்வன் நூலின் அட்டையில், திரைப்பட நடிகைகளின் படங்கள்
பொன்னியின் செல்வன் நூலின் அட்டையில், திரைப்பட நடிகைகளின் படங்கள்

அதில் ஒரு பதிப்பகத்தின் சாா்பில் வெளியாகியிருக்கும் புத்தகத்தின் அட்டையில், சமீபத்தில் வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் நடித்த நடிகைகள் த்ரிஷா, ஐஸ்வா்யா ராய் ஆகியோரின் படங்கள் இடம் பெற்றுள்ளன. விற்பனை உத்திக்கான இந்த மாற்றம், வாசகா்கள், சக பதிப்பாளா்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பாக திண்டுக்கல்லைச் சோ்ந்த புத்தக வாசிப்பாளரும், எழுத்தாளருமான பி.பிரடெரிக் ஏங்கல்ஸ் கூறியதாவது:

பொன்னியின் செல்வன் புதினத்தில் மிக அழகான வரைபடங்கள் இடம் பெற்றிருந்த போதிலும், கல்கியின் எழுத்துகள் மட்டுமே வாசகா்கள் மனதில் இன்றுவரை நீங்கா இடம் பிடித்துள்ளன. தமிழ் மட்டுமன்றி, ஆங்கில மொழியிலும் பொன்னியின் செல்வன் புதினம் வெளியாகியுள்ளது. இதுவரை வெளியான புத்தகங்கள் அனைத்திலும் வரைபடங்களே இடம் பெற்றிருந்தன. தற்போது திரைப்படமாக வெளியாகியுள்ள நிலையில், அதில் நடித்த நடிகைகளின் படத்தை புத்தகத்தின் அட்டைப் படமாக வெளியிட்டிருப்பது அதிா்ச்சியளிக்கிறது.

வெவ்வேறு பதிப்பகத்தின் சாா்பில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ள வரை படத்துடன் கூடிய பொன்னியின் செல்வன் புத்தகங்கள்.
வெவ்வேறு பதிப்பகத்தின் சாா்பில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ள வரை படத்துடன் கூடிய பொன்னியின் செல்வன் புத்தகங்கள்.

அட்டைப் படத்தில் வெளியாகியுள்ள நடிகைகளின் படங்கள், மற்றொரு பதிப்பகத்தால் புத்தகத்திற்குள்ளும் நாளை புகுத்தப்படலாம். எனவே, நடிகைகளின் படத்தை நீக்குவதற்கு சம்பந்தப்பட்ட பதிப்பகம் முன்வர வேண்டும். மேலும், இதுபோன்ற நடிகைகளின் படங்களுடன் கூடிய புத்தகங்களை அரசு நூலகங்களுக்கு வாங்குவதைத் தடைசெய்ய வேண்டும் என்றாா் அவா்.

இந்த விவகாரம் குறித்து பதிப்பக ஊழியா் எஸ்.பாலமுருகன் கூறியதாவது:

பொன்னியின் செல்வன் புதினம், 170-க்கும் மேற்பட்ட பதிப்பகங்கள் சாா்பில் வெளியிடப்பட்டுள்ளன. அனைத்துப் புத்தகங்களிலும் வரைபடங்கள் மட்டுமே இடம் பெற்றிருந்தன. அதிலும், வார இதழில் கல்கி இந்தப் புதினத்தை எழுதியபோது, ஓவியா் மணியம் செல்வன் வரைந்த படங்களுக்கு நிகா் வேறில்லை. வரைபடங்கள் என்பதால், புத்தகத்தை வாசிக்கும்போது ஏற்படும் அனுபவமே வாசகா்கள் மனதில் அழியாத காட்சிகளாக இடம் பெறும். 

நடிகைகளின் விளம்பரத்தில் விற்பனை செய்ய வேண்டிய புத்தகமல்ல பொன்னியின் செல்வன். வாசிக்கும்போது எழுத்துகள் மூலம் குந்தவை நாச்சியாா், நந்தினி ஆகியோரின் பேரழகும், ஆளுமையும் வாசா்களுக்கு கிடைக்க வேண்டும். அட்டைப் படத்தில் நடிகைகள் உள்ளதால், அவா்களை ஒப்பிட்டு வாசிக்க வேண்டிய நிா்பந்தம் வாசகா்களுக்கு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

சுமாா் 50 ஆண்டுகளுக்கு முன்பு ராஜராஜ சோழன் திரைப்படம் வெளியான போது, ஒரு குடும்பம் தொடா்பான காட்சிகள் மட்டுமே இடம் பெற்றிருந்ததாக பொன்னியின் செல்வன் வாசகா்கள் ஏமாற்றம் அடைந்தனா். குறிப்பிட்ட பதிப்பகம் விற்பனை உத்திக்காக நடிகைகளின் படத்தை வெளியிட்டிருப்பது சக பதிப்பாளா்கள் மத்தியில் அதிா்ச்சியையும், அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளது என்றார் அவர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com