இந்திய அஞ்சலக வங்கியில் விபத்து காப்பீடு எடுத்துவிட்டீர்களா?
By DIN | Published On : 17th October 2022 03:37 PM | Last Updated : 17th October 2022 04:15 PM | அ+அ அ- |

சாமானிய மக்களுக்கும் விபத்து காப்பீட்டுத் திட்டத்தின் பலன்கள் சென்றடையும் வகையில், நாட்டின் மூலைமுடுக்கெல்லாம் உள்ள அஞ்சலகங்கள்(தபால்காரர்,கிராம அஞ்சல் ஊழியர்கள்) மூலம் மிகக் குறைந்த பிரீமியம் தொகையுடன் விபத்து காப்பீட்டுத் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
கிராம மக்களுக்கு எளிதாக வங்கி சேவைகளை வழங்கும் வகையில் அஞ்சல் துறையில், ‘இந்தியா போஸ்ட் பேமென்ட்ஸ் பேங்க்’ திட்டத்தை பிரதமர் மோடி கடந்த 2018 ஆம் ஆண்டு தொடங்கி வைத்தார்.
அஞ்சல் துறையின் கீழ் செயல்படும் இந்தியா போஸ்ட் பேமென்ட்ஸ் வங்கியின் மூலம் ஆண்டுக்கு ரூ.399 பிரிமீயத்தில் ரூ.10 லட்சம் மதிப்புள்ள விபத்து காப்பீடு திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
டாடா ஏஜஜி ஜெனரல் இன்சூரன்ஸ், பஜாஜ் அலையன்ஸ் ஜெனரல் இன்சூரன்ஸ் ஆகிய நிறுவனங்களுடன் இணைந்து ந்தியா போஸ்ட் பேமென்ட்ஸ் வங்கி, இந்த திட்டத்தை செயல்படுத்துகிறது.
18 முதல் 65 வயது வரை உள்ளவா்கள் சேரலாம். விண்ணப்ப படிவம், அடையாள , முகவரி சான்றின் நகல்கள் போன்ற எவ்வித காகித பயன்பாடுமின்றி தபால்காரா் கொண்டு வரும் ஸ்மாா்ட் போனில் விரல்ரேகை மூலம் பாலிசி டிஜிட்டல் முறையில் வழங்கப்படுகிறது.
ரூ.10 லட்சம் விபத்து காப்பீடு: விபத்தினால் ஏற்படும் உயிரிழப்பு, நிரந்தர முழு ஊனம், நிரந்தர பகுதி ஊனம், பக்கவாதம் ஆகியவற்றிற்கு ரூ.10 லட்சம் வரை வழங்கப்படுகிறது.
விபத்தினால் ஏற்படும் மருத்துவச் செலவுகள் (உள்நோயாளி செலவுகளுக்கு அதிகபட்சம் ரூ.60 ஆயிரம் வரை, புற நோயாளி செலவுகளுக்கு அதிகபட்சம் ரூ.30 ஆயிரம் வரை) வழங்கப்படுகிறது.
விபத்தினால் மரணம், ஊனம், பக்கவாதம் ஏற்பட்டவரின் குழந்தைகளின் கல்வி செலவுகளுக்கு (அதிகபட்சம் 2 குழந்தைகள்) ரூ.1 லட்சம் வரை வழங்கப்படும்.
விபத்தினால் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் நாள்களுக்கு தினப்படி தொகையாக ஒரு நாளைக்கு ரூ.1000 வீதம் 9 நாள்களுக்கு வழங்கப்படும்.
விபத்தில் பாதிக்கப்பட்டவரை பாா்க்க பயணிக்கும் குடும்பத்தினா் பயண செலவுகளுக்கு அதிகபட்சம் ரூ.25 ஆயிரம் வரை வழங்கப்படும்.
விபத்தினால் உயிரிழக்க நேரிட்டால் ஈமக்கிரியைகள் செய்ய ரூ.5 ஆயிரம் வழங்கப்படும்.
இந்த விபத்து காப்பீட்டுத் திட்டத்தில் இணைவதன் மூலம், எதிர்பாராத விபத்துகளால் ஏற்படும் உடல்நல நெருக்கடிகள், நிதி நெருக்கடிகள், உயிரிழப்புகளால் ஏற்படும் பாதிப்புகளில் இருந்து, குடும்பத்தை பாதுகாக்க முடியும்.
ஆகவே, ஆண்டிற்கு வெறும் ரூ.399 இல், ரூ.396 இல் மேற்கண்ட பல்வேறு பலன்களை வழங்கும் இந்த குழு விபத்து காப்பீட்டு பாலிசியை பொதுமக்கள் அனைவரும் அருகில் உள்ள அஞ்சலகங்கள், தபால்காரர்கள் மூலம் இந்த விபத்து காப்பீட்டுத் திட்டத்தில் இணைந்து பயன்பெறலாம்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...