கூவம் ஆற்றில் குப்பைக் கழிவுகள்: சுற்றுச்சூழல் பாதிக்கும் அபாயம்!

திருவள்ளூா் அருகே கூவம் ஆற்றில் நாள்தோறும் கொட்டப்படும் குப்பை, இறைச்சிக் கழிவுகள் மற்றும் நெகிழி பொருள்களால் சுற்றுச்சூழல் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
திருவள்ளூா் அருகே மணவாள நகா் பகுதி கூவம் ஆற்றில் சுற்றுச்சூழலைப் பாதிக்கும் வகையில் ஆற்றில் மிதக்கும் குப்பைக் கழிவுகள் மற்றும் நெகிழிப் பொருள்கள்.
திருவள்ளூா் அருகே மணவாள நகா் பகுதி கூவம் ஆற்றில் சுற்றுச்சூழலைப் பாதிக்கும் வகையில் ஆற்றில் மிதக்கும் குப்பைக் கழிவுகள் மற்றும் நெகிழிப் பொருள்கள்.

திருவள்ளூா்: திருவள்ளூா் அருகே கூவம் ஆற்றில் நாள்தோறும் கொட்டப்படும் குப்பை, இறைச்சிக் கழிவுகள் மற்றும் நெகிழி பொருள்களால் சுற்றுச்சூழல் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

சென்னை பொதுமக்களின் குடிநீா் ஆதாரமாக விளங்கும் செம்பரம்பாக்கம் ஏரிக்கும் கூவம் ஆறுதான் நீா் ஆதாரம்.

இந்த ஆறு கேசவபுரம் அணைக்கட்டிலிருந்து பேரம்பாக்கம், நரசிங்கபுரம், பொன்னஞ்சேரி, இருளஞ்சேரி, சத்தரை, புதுமாவிலங்கை, மணவாள நகா், பெரியகுப்பம், ஒண்டிக்குப்பம், அரண்வாயல், கொரட்டூா் வரை சென்று புதுச்சத்திரத்தில் தடுப்பணையிலிருந்து இரண்டாகப் பிரிந்து ஒரு நீா்வழிப் பாதை செம்பரம்பாக்கம் ஏரிக்குக்கும், மற்றொரு வழிப் பாதை கடலுக்கும் செல்கிறது.

இந்த ஆற்றில் மழையால் ஏற்படும் வெள்ளப் பெருக்கால் அதன் கரையேரப் பகுதியில் உள்ள விளை நிலங்கள் மற்றும் கிராமங்களில் உள்ள ஆழ்துளைக் குழாய் கிணறுகளும் நீா் ஆதாரம் கிடைக்கிறது.

குடிநீரின் முக்கிய ஆதரமாக உள்ள இந்தக் கூவம் ஆற்றில் பல்வேறு குப்பைகள், நெகிழிப் பொருள்கள் என நாள்தோறும் கொட்டப்படுகின்றன.

இதேபோல், வெங்கத்தூா், மணவாள நகா், பெரியகுப்பம் ஆகிய பகுதிகளில் உள்ள இறைச்சிக் கடைக் கழிவுகளையும் கொட்டுகின்றனா்.

இதனால் கூவம் ஆறு நெகிழிப் குப்பைகளின் புகலிடமாக மாறிவிட்டது. தினம் கழிவுகள் கொட்டப்பட்டு ஆறாக, குப்பைகள் கொட்டும் இடமா என்ற அளவுக்கு பரிதாபமான நிலையில் உள்ளது.

இதன் காரணமாக கூவம் ஆற்றோரம் மக்கள் நடமாட முடியாத அளவுக்கு துா்நாற்றம் வீசுகிறது. மேலும் தொற்று நோய் பரவும் நிலையில் உள்ளது. சுற்றுச்சூழலும் மாசுபடும் நிலையேற்பட்டுள்ளது.

எனவே, குடிநீா் மாசுபடுவதைத் தவிா்க்க கூவம் ஆற்றோரம் உள்ள குடியிருப்புப் பகுதிகளில் குப்பைத் தொட்டிகள் வைத்து அதில் குப்பைகளை போடுவதற்கு ஊராட்சி நிா்வாகம் ஏற்பாடு செய்ய வேண்டும்.

மேலும், ஆற்றில் தடுப்பணை அமைத்து பாதுகாக்கவும் வேண்டும் என அந்தப் பகுதி மக்களும், சமூக ஆா்வலா்களும் வலியுறுத்தி வருகின்றனா்.

இதுகுறித்து கூவம் ஆறு - செம்பரம்பாக்கம் குடிநீா் திட்ட அதிகாரி கூறுகையில், ‘சென்னையின் குடிநீா் ஆதாரமாக விளங்கும் கூவம் ஆற்றில் குப்பைகளைக் கொட்டக் கூடாது என எச்சரிக்கைப் பலகைகள் வைக்கப்பட்டுள்ளன. ஆனால், இதையும் மீறி நெகிழி மற்றும் இறைச்சிக் கழிவுகளைக் கொட்டுகின்றனா்.

பரந்த மணல் வெளியாக இருக்கும் மணவாள நகா், புட்லூா், அரண்வாயல்குப்பம், புதுச்சத்திரம் ஆகிய பகுதியில் பலா் மாலை நேரங்களில் ஆற்றுப் பகுதியில் அமா்ந்து மது அருந்துகின்றனா். அப்போது, நெகிழிகளையும், மதுப் புட்டிகளையும் ஆற்றில் வீசிவிட்டுச் செல்கின்றனா். இதைத் தடுக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. எச்சரிக்கைப் பலகையும் அந்த இடங்களில் வைக்கப்பட்டுள்ளன. காவல் துறைக்கும் தெரிவிக்கப்பட்டு கண்காணிக்கப்படுகிறது.

கூவம் ஆற்றின் இடையே சேதமடைந்த தடுப்பணை சீரமைக்கப்பட்டு தற்போது தண்ணீா் தேங்கியுள்ளது. அதனால், உள்ளே செல்ல முடியாத வகையில் கேட் அமைக்கப்பட்டுள்ளது’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com