
திரிபுராவில் நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தல் இறுதிக்கட்டம் சூடுபிடித்துள்ளதால் அரசியல் கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.
அடுத்த ஆண்டு மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அனைத்து மாநிலங்களிலும் அரசியல் கட்சிகள் தங்களது தேர்தல் பணிகளைத் தீவிரப்படுத்தி வருகின்றன. கூட்டணி பேச்சுவார்த்தைகள், பிரசாரங்கள் என நாளுக்குநாள் தேர்தலை நோக்கிய பணிகள் வேகமெடுத்துள்ளன.
நடப்பாண்டு திரிபுரா, மேகாலயம், நாகலாந்து, கர்நாடகம், ராஜஸ்தான், தெலங்கானா உள்ளிட்ட 9 மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது.
இவற்றின் தொடக்கமாக திரிபுரா தேர்தல் பிப்ரவரி 16ஆம் தேதி நடைபெறவிருக்கிறது.
கடந்த தேர்தலில் மொத்தம் உள்ள 60 தொகுதிகளுக்கான தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பாஜக 51 இடங்களிலும், ஐபிஎஃப்டி 9 இடங்களிலும், இடது முன்னணி கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 57 இடங்களிலும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, புரட்சிகர சோசலிஸ்ட் கட்சி மற்றும் அனைத்திந்திய பார்வர்ட் பிளாக் ஆகிய கட்சிகள் தலா ஒரு இடங்களிலும், காங்கிரஸ் கட்சி 59 இடங்களில் தனித்தும் போட்டியிட்டன.
இதில் யாரும் எதிர்பாராத விதமாக பாஜக 36 இடங்களில் வெற்றி பெற்றது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 16 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. எனினும் பாஜக கூட்டணிக்கும் இடது முன்னணி கூட்டணிக்கும் இடையேயான வாக்கு வித்தியாசம் பெரிய அளவில் இல்லை. இவ்விரு கூட்டணிகளுக்குமிடையே 5 தொகுதிகளில் ஆயிரம் வாக்குகளுக்கும் குறைவாகவும், 29 தொகுதிகளில் 5000 வாக்குகளுக்கு குறைவாகவே வாக்கு வித்தியாசம் இருந்தது.
2008 தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் வாக்கு வங்கியை காலி செய்த பாஜக அக்கட்சி வைத்திருந்த 36.38 சதவிகித வாக்குகளை கைப்பற்றி ஆட்சியைப் பிடித்தது.
36 தொகுதிகளை வென்ற பாஜக மொத்த வாக்கு சதவிகிதத்தில் 43.59 சதவிகிதத்தை தன்வசம் வைத்துள்ளது. அதன் கூட்டணிக் கட்சியான ஐபிஎஃப்டி கட்சி கடந்த தேர்தலில் 9 தொகுதிகளில் போட்டியிட்டு 8 தொகுதிகளில் வெற்றி பெற்றது. முந்தைய ஆளும் கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கும், பாஜகவிற்கும் இடையே 0.63 சதவிகித அளவே வாக்கு வித்தியாசம் இருந்த நிலையில் பாஜகவிற்கு கூட்டணிக் கட்சியான ஐபிஎஃப்டியின் இருப்பு ஆறுதல் அளித்தது.
குறிப்பாக பழங்குடியினருக்கு ஒதுக்கப்பட்ட 20 தொகுதிகளில் 18 தொகுதிகளை பாஜக கூட்டணி கைப்பற்றியது அக்கட்சிக்கு வெற்றி வாய்ப்பை உறுதி செய்தது. பாஜக வெற்றி பெற்ற 36 தொகுதிகளில் கிட்டத்தட்ட பாதி தொகுதிகள் பழங்குடியினருக்கான தொகுதிகள் என்பது இங்கு கவனிக்கத்தக்கது.
இந்தத் தொகுதிகளில் செல்வாக்குடன் உள்ள திப்ரா மோர்ச்சா கட்சி இந்தத் தேர்தலில் முக்கியப் பங்காற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது. 2021 பழங்குடியினர் அதிகம் உள்ள மாவட்டங்களில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் பெரும்பாலான இடங்களை கைப்பற்றியது இக்கட்சி பாஜக கூட்டணிக்கு நெருக்கடியைக் கொடுக்கலாம். உள்ளூர் அளவில் குறைந்தபட்ச புரிதலில் திப்ரா மோர்ச்சா கட்சியுடன் இடது முன்னணி - காங்கிரஸ் கட்சி இணைந்து செயல்படும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி தெரிவித்திருப்பது பாஜகவிற்கு சிக்கலை ஏற்படுத்தலாம் என கருதப்படுகிறது.
நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பாஜக 55 தொகுதிகளிலும், ஐபிஎஃப்டி 5 தொகுதிகளிலும், இடது முன்னணி- காங்கிரஸ் கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 43 தொகுதிகளிலும், காங்கிரஸ் கட்சி 13 தொகுதிகளிலும், இதர கட்சிகள் 3 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன. ராம் நகர் தொகுதியில் சுயேட்சை வேட்பாளருக்கு இடது முன்னணி தனது ஆதரவைத் தெரிவித்துள்ளது.
இதுதவிர மம்தா பானர்ஜியின் திரிணமூல் கட்சியும் களத்தில் இறங்கியுள்ளது. தேசிய அளவில் மக்களவைத் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் சார்பில் பொது பிரதமர் வேட்பாளர் நிறுத்தப்பட வேண்டும் என குரல்கள் எழுந்து வரும் நிலையில் இடது முன்னணி-காங்கிரஸ் கூட்டணிக்கு எதிராக மம்தா இறங்கியிருப்பது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. திரிபுராவில் முதல்முறையாக போட்டியிடும் திரிணமூல் கட்சியின் தேர்தல் பங்களிப்பு முடிவுகளுக்கு பிறகே தெரியவரும்.
அதேசமயம் பாஜக கூட்டணிக்கு இந்தத் தேர்தல் சவாலான ஒன்றாகவே இருக்கும் என அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கின்றனர். தனது கடந்த தேர்தலின் வாக்கு வங்கியை தக்க வைக்க அக்கட்சி போராட வேண்டிய சூழலில் குறைவான தொகுதியை ஒதுக்கியதால் தனது கூட்டணிக் கட்சியிடம் எழுந்துள்ள அதிருப்தியை சமாளிக்க வேண்டிய சூழல் அக்கட்சிக்கு ஏற்பட்டுள்ளது.
சட்டப்பேரவைத் தேர்தலில் இணைந்துள்ள இடது முன்னணி - காங்கிரஸ் கட்சி அக்கூட்டணியினரிடையே நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. பழங்குடியினர் தொகுதிகளை குறிவைத்து மேற்கொள்ளப்படும் தேர்தல் பணிகள் கைகொடுத்தால் இக்கூட்டணிக்கு வெற்றி வாய்ப்புகள் அதிகம் என அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர். காங்கிரஸ் கட்சி தனது இழந்த வாக்கு வங்கியை மீட்கும்பட்சத்தில் இந்த ஆண்டின் முதல் சட்டப்பேரவைத் தேர்தலின் வெற்றி இதர மாநிலங்களின் தேர்தல்களில் எதிர்க்கட்சிகளுக்கு நம்பிக்கையளிக்கலாம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.