மௌனமாகும் சென்னை சென்டிரல் ரயில் நிலையம்: என்னதான் செய்வார்கள் பயணிகள்?

சுமார் 150 ஆண்டுகள் பழமையான டாக்டர் எம்ஜிஆர் ராமச்சந்திரன் மத்திய ரயில் நிலையம் எனப்படும் சென்னை சென்டிரல் ரயில் நிலையம் கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல், அமைதியான ரயில் நிலையமாக மாறியிருக்கிறது.
மௌனமாகும் சென்னை சென்டிரல் ரயில் நிலையம்
மௌனமாகும் சென்னை சென்டிரல் ரயில் நிலையம்


சென்னை: சுமார் 150 ஆண்டுகள் பழமையான டாக்டர் எம்ஜிஆர் ராமச்சந்திரன் மத்திய ரயில் நிலையம் எனப்படும் சென்னை சென்டிரல் ரயில் நிலையம் கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல், அமைதியான ரயில் நிலையமாக மாறியிருக்கிறது.

 இந்தியாவிலேயே முதல் முறையாக, சென்னை சென்டிரல் ரயில் நிலையத்தில், வெளியூர்களுக்குப் புறப்படும் ரயில்கள் பற்றிய அறிவிப்புகள் இனி ஒலிப்பெருக்கி மூலம் அறிவிக்கப்படாது. 

விமான நிலையங்களைப் போல, பயணிகள் டிஜிட்டல் பலகைகளைப் பார்த்து அல்லது தகவல் மையத்தின் மூலம் தான் இனி ரயில்கள் புறப்பாடு பற்றி அறிந்து கொள்ள முடியும். இதற்காக ரயில் நிலையத்தின் பல்வேறு நுழைவாயில்களில் டிஜிட்டல் பலகைகள் பொருத்தப்பட்டுள்ளன. அனைத்தும் நல்ல இயங்கும் நிலையில் உள்ளதாகவும் கூறப்படுகிறது.

சென்னை மத்திய ரயில் நிலையத்தின் மூன்று நுழைவாயில்களிலும் டிஜிட்டல் பலகைகள் வைக்கப்பட்டு, அதில் ரயில்கள் புறப்பாடு நேரம் தமிழ், ஹிந்தி, ஆங்கிலம் என மூன்று மொழிகளிலும் திரையிடப்படுகிறது. இது மட்டுமல்லாமல் கூட்டம் அதிகம் இருக்கும் பகுதிகளிலும் 40 - 60 இன்ஞ் அளவுள்ள டிஜிட்டல் பலகைகள் இடம்பெற்றுள்ளன.

அதேவேளையில், புறநகர் ரயில் நிலையத்தில் ரயில் புறப்பாடு உள்ளிட்ட தகவல்கள் குறித்த அறிவிப்புகள் ஒலிப்பெருக்கிகள் மூலம் அறிவிக்கப்படும் என்றும், மத்திய ரயில் நிலையத்தில் ஒலிப்பெருக்கி அறிவிப்பு அகற்றப்பட்டது சோதனை முயற்சிதான் என்றும் இனி விளம்பரம் தொடர்பான ஆடியோக்களும் ஒலிபரப்பப்படாது என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இது பற்றி பயணிகள் என்ன நினைக்கிறார்கள்?
இந்த மத்திய ரயில் நிலையம் நாள் ஒன்றுக்கு கிட்டத்தட்ட 200 ரயில்களை கையாண்டு வருகிறது. இதில் நாள்தோறும் இயக்கப்படும் 46 இணை ரயில்களும் அடங்கும். இதன் மூலம், நாள் ஒன்றுக்கு சுமார் 5.3 லட்சம் பயணிகள் இந்த ரயில் நிலையத்துக்கு வருகிறார்கள். தமிழில் ரயில்கள் புறப்பாடு குறித்து அறிவித்து வருபவர் கவிதா முருகேசன், ஈரோட்டைச் சேர்ந்த கல்லூரி பேராசிரியர்.

பொதுவாக, ரயில்கள் வரும் நேரம், புறப்படும் நேரம், கால தாமதம், எந்த நடைமேடையில் நிற்கிறது என்பது குறித்த அறிவிப்புகள்தான் வெளியாகும். பொதுவாக வயதானவர்கள் மற்றும் பார்வை மாற்றுத்திறனாளிகளுக்கு இது பேருதவியாக இருக்கும். 

பார்வை மாற்றுத்திறனாளிகளுக்கும் உதவும் வகையில், முக்கிய நுழைவாயிலில் பிரெய்லி முறையிலான வரைபடம் அமைக்கப்பட்டுள்ளது. காது கேட்காதவர்களுக்கு சைகை முறையிலான அறிவிப்புகளைப் பெற பல இடங்களில் க்யூ ஆர் கோடு வசதியும் செய்யப்பட்டுள்ளது.

மேலும், ரயில் நிலையத்தை மேம்படுத்தும் போது, நுழைவாயிலில் மிகப்பெரிய டிஜிட்டல் பலகை அமைக்கப்படும் என்றும், தகவல் உதவி மையங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பயணிகளில் சிலரோ, என்னதான் ஒலிப்பெருக்கியில் அறிவிப்புகள் வந்தாலும், பலரும் டிஜிட்டல் பலகைகள் மூலம்தான் சரியான ரயில்கள் அறிந்து கொள்கிறார்கள். எனவே, தற்போது ஒலிப்பெருக்கி அறிவிப்பு இல்லாததால், ரயில் நிலையமே அமைதியாக இருக்கிறது என்று கூறுகிறார்.

சாதாரண மக்கள் டிஜிட்டல் பலகைகளை மட்டும் வைத்து ரயில்களை கண்டுபிடிப்பது சற்றுக் கடினம். விமான நிலைய பயணிகளோடு, ரயில் நிலைய பயணிகளை ஒப்பிடக் கூடாது. அனைவரும் தகவல் சேவை மையத்தை நாடவும் தயங்குவார்கள் எனவே, இந்த அறிவிப்பு விலக்கல் முடிவு மிக அவசரமாக எடுக்கப்பட்டுள்ளது என்று தெற்கு ரயில்வே பயணிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர் பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.

ரயில் நிலையத்துக்குள் நுழைந்ததும் ரயில்கள் பற்றிய அறிவிப்புகள் காதுகளில் ஒலித்துக் கொண்டே இருக்கும். சிலருக்கு அவசரத்தில் எதுவும் புரியாமல் டிஜிட்டல் பலகையை நோக்கி ஓடும் நிலை ஏற்படும். இதுபோன்ற நேரத்தில் எங்கிருந்தாலும் ஒலிப்பெருக்கி இருந்தால் இருக்கும் இடத்திலிருந்தே விவரங்களை அறிய உதவிகரமாக இருக்கும் என்று கருதுகிறார்கள் வயதானவர்கள்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com