சந்திரயான் திட்டத்தின் இயக்குநர்களாக தமிழக விஞ்ஞானிகள்!

நிலவுக்கு விண்கலத்தை அனுப்பும் திட்டம் எப்போது உதித்ததோ, அப்போதே, அந்த திட்டத்துடனான தமிழர்களின் பங்கும் தொடங்கிவிட்டிருந்தது.
சந்திரயான் - 3 விண்கலம்
சந்திரயான் - 3 விண்கலம்

நிலவுக்கு விண்கலத்தை அனுப்பும் திட்டம் எப்போது உதித்ததோ, அப்போதே, அந்த திட்டத்துடனான தமிழர்களின் பங்கும் தொடங்கிவிட்டிருந்தது.

அதாவது, சந்திரயான் 1 மற்றும் சந்திரயான் 2 விண்கலன் திட்டங்களின் தலைவர்களாக இருந்த மயில்சாமி அண்ணாதுரை மற்றும் எம். வனிதா இருவருமே தமிழர்கள்.  வெள்ளிக்கிழமை  பிற்பகலில் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்ட சந்திரயான் - 3 விண்கலம் திட்டத்தின் தலைவராக இருப்பவர் பி.  வீரமுத்துவேல். இவர் தமிழகத்தின் விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர். 

ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவண் ஆய்வு மையத்தின் இரண்டாவது தளத்திலிருந்து சரியாக பிற்பகல் 2.35 மணிக்கு சந்திரயான்-3 விண்கலத்தைச் சுமந்து கொண்டு எல்விஎம்-3 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.

சந்திரயான் விண்கலத்தைச் சுமந்துகொண்டுச் சென்ற எல்பிஎம் 3- எம்4 ராக்கெட்டின் இரண்டு அடுக்குகளும் திட்டமிட்டபடி வெற்றிகரமாக பிரிந்த நிலையில், தற்போது மூன்றாவது அடுக்கும் வெற்றிகரமாக பிரிந்துவிட்டது.

பிறகு வெற்றிகரமாகப் பயணித்து பூமியிலிருந்து 179 கி.மீ. தொலைவில், நீள் வட்டப்பாதையில் சந்திரயான் - 3 விண்கலம் நிலைநிறுத்தப்பட்டுள்ளதாக இஸ்ரோ அறிவித்துள்ளது.

ஸ்ரோ தலைவர் சோம்நாத் தலைமையின் கீழ் இயங்கும் சந்திரயான் - 3 விண்கலம் திட்டத்தின் இயக்குநராக இருப்பவர் 46 வயதாகும் வீரமுத்துவேல். பிஎச்.டி. பட்டம் பெற்ற வீரமுத்துவேல், சென்னை ஐஐடியில் கல்வி பயின்றவர்.

இஸ்ரோ தலைவராக இருந்த போது செயல்படுத்தப்பட்ட சந்திரயான் - 2 விண்கலம் திட்டத்தின் இயக்குநராக இருந்த வனிதாவுக்குப் பின், அவரது பொறுப்பை வீரமுத்துவேல் ஏற்றுள்ளார். இஸ்ரோ வரலாற்றிலேயே, திட்ட இயக்குநராக பதவி வகித்த முதல் பெண் என்ற பெருமையையும் பெற்றிருந்தவர் நமது தமிழகத்தைச் சேர்ந்த வனிதா என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

வீரமுத்துவேல்

வீரமுத்துவேல், தெற்கு ரயில்வேயில் பொறியாளராக பணியாற்றி வந்த பழனிவேலின் மகனாவார். விழுப்புரம் ரயில்வே பள்ளியில் படிப்பை முடித்து, தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படித்தவர். இவருக்கு விண்வெளி துறையில் இருந்த விருப்பம் காரணமா, அதில் சாதிக்க வேண்டும் என்ற ஆர்வம் பிறந்தது. வேலையிலிருந்து வெளியேறி, மீண்டும் பொறியியல் படிப்பில் சேர்ந்து பிறகு மேல் படிப்பை ஐஐடி சென்னையில் முடித்து, விண்வெளி துறைக்குத் தேர்வானார்.

1989ஆம் ஆண்டு, தனது கடின உழைப்பால், இஸ்ரோ விஞ்ஞானியாக தேர்வானார். எத்தனையோ பெரிய வேலை வாய்ப்புகள் இவரை தேடி வந்தாலும், அவற்றை எல்லாம் ஏற்காமல், இஸ்ரோவில் இணைந்தார்.

2016ஆம் ஆண்டு, விண்கலத்தின், வைப்ரேஷன் கன்ட்ரோல் சிஸ்டம் குறித்து ஆய்வுக் கட்டுரையை சமர்ப்பித்தார். இந்த ஆய்வு, நிலவில், விண்கலம் தரையிறங்குவதற்கான தொழில்நுட்பம் மற்றும் ரோவர் பகுதியை கட்டுப்படுத்துவதில் பெரும் பங்கு வகித்தது. சுமார்  30 ஆண்டுகள் பல்வேறு திட்டங்களில் பணியாற்றிய அனுபவத்துடன், இஸ்ரோ விஞ்ஞானியாக கடின உழைப்பு மற்றும் பொறுப்புடன் பணியாற்றும் திறன் போன்றவை அவரை சந்திரயான் - 3 விண்கலத்தின் இயக்குநராக உயர்த்தியது.

2008ஆம் ஆண்டு சந்திரயான் விண்கலத்தை நிலவுக்கு அனுப்பும் முதல் திட்டத்தின் இயக்குநராக இருந்தவர் மயில்சாமி அண்ணாதுரை. இவர் இந்தியாவின் நிலவு மனிதர் என்று அழைக்கப்பட்டார். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com