யோகா மனதோடும் உடலோடும் சேர்ந்தது!

யோகா வெறும் ஒரு மூச்சுப் பயிற்சியாகவோ அல்லது உடற்பயிற்சியாகவோ இல்லாமல் வாழ்க்கை முறையாக மனதோடும் உடலோடும் சேர்ந்தது.
யோகா மனதோடும் உடலோடும் சேர்ந்தது!

யோகா வெறும் ஒரு மூச்சுப் பயிற்சியாகவோ அல்லது உடற்பயிற்சியாகவோ இல்லாமல் வாழ்க்கை முறையாக மனதோடும் உடலோடும் சேர்ந்தது. வேத காலம் முதல் நவீன நடைமுறைகளில் இருக்கும் உடற்பயிற்சி மையங்கள் வரை நம்மோடு சேர்ந்து நிற்கிறது யோகா.
 
ஆதிசேஷ அவதாரத்தில் உருவெடுத்து யோக ஞானத்தை உலகிற்கு வித்திட்டவர் பதஞ்சலி முனிவர். ஆனால் யோகா 5000 ஆண்டுகளுக்கு முன்பு உலகில் ஆன்மீக தலைநகர் என அழைக்கப்படும் ரிஷிகேஷில் தோன்றியதாக பலரும் நம்புகின்றனர். மேலும் சில ஆராய்ச்சியாளர்கள் 10,000 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே யோகா பயிற்சிக்கான தடயங்களை கண்டறிந்துள்ளதாக பதிவு செய்கின்றனர். ஆராய்ச்சியாளர்கள், நாகரீகங்கள் வளர காரணமாக இருந்த பல நகரங்களில், யோகாவின் பயன்பாடு இருந்ததாக ரிக் மற்றும் பல வேதங்கள் மூலம் அதன் தொன்மையை தெளிவுபடுத்தி உள்ளனர்.  

மகாபாரதத்திலும் பகவத் கீதையிலும் யோகாவின் வடிவங்கள் குறிப்பிடப்பட்டுள்ளது; ஞான யோகம், பக்தி யோகம், கர்ம யோகம் மற்றும் ராஜ யோகம் போன்ற யோகா முறைகள் அதில் இடம்பெற்றுள்ளது. பல ஆய்வுகளில் இருந்து நமக்கு தெரிய வருவது என்னவென்றால் பண்டைய காலத்தில் யோகா வெறும் ஒரு மூச்சுப் பயிற்சியாகவோ அல்லது உடற்பயிற்சியாகவோ பார்க்கப்படவில்லை, அதை ஒரு வாழ்க்கை முறையாக மனதோடும் உடலோடும் சேர்த்து வைத்துள்ளனர்.

அதன் மகிமையை மீண்டும் உலகிற்கு உணர்த்திய நரேந்திர மோடி, 2014 ஆம் ஆண்டு  ஐ.நா பொதுச் சபையில் யோகாவின் மகிமையையும் அதன் தேவையையும் எடுத்துக் கூறினார். அதன் பிறகு தான் ஐ.நா சபை ஜூன் 21 ஆம் தேதியை சர்வதேச யோகா நாளாக அனுசரித்தது.

யோகாவின் உடல் மற்றும் மனம் ஆரோக்கிய நன்மைகளை அறிந்து உலகம் முழுவதும் இதை பயிற்சி செய்பவர்களின் எண்ணிக்கை மிகப்பெரிய அளவில் அதிகரித்துள்ளது. பணக்காரர்களின் நோயாக அறியப்படும் தூக்கமின்மை, ரத்த அழுத்தம், நீரழிவு நோய், பதட்டம், மனசோர்வு போன்ற பல்வேறு பிரச்னைகளுக்கு யோகா உதவி வருகிறது. எவ்வித ஆடம்பரமும் இன்றி எல்லோரும் இயல்பாக பயிற்சி செய்யும் முறைதான் யோகா. 

கரோனா தொற்று சமயத்தில் யோகா மிகப்பெரிய பலமாக நம்மோடு இருந்தது. மூச்சுப் பயிற்சி முதல் உர்தவ முக ஸ்வன ஆசனம் வரை எல்லா ஆசனங்களும்  கடினமான காலங்களில் நம் உடல் ஆரோக்கியத்தை உறுதி செய்தது.

ஆயுஷ் அமைச்சகமும் மொரார்ஜி தேசாய் தேசிய யோகா நிறுவனமும் இணைந்து 'யோகா மகா உற்சவத்தை' நாடு முழுவதும் ஏற்பாடு செய்துள்ளது. இந்தியா தலைமை தாங்கி நடத்தி வரும் ஜி-20 மாநாட்டில் இந்த ஆண்டுக்கான கருப்பொருள் "வசுதைவக குடும்பம்" என்ற இந்திய கொள்கையின் அடிப்படையில் இருக்கும் "ஒரே உலகம் ஒரே ஆரோக்கியம்" என்று ஒளிர்கிறது .

இந்த முயற்சி மிகப் பெரிய அளவில் உலகளாவிய சமூகத்தை இணைக்க உள்ளது. மேலும் கடந்த ஆறு ஆண்டுகளில், யோகா பயிற்சி செய்பவர்களின் எண்ணிக்கையும் உலக அளவில் 35 கோடியை தாண்டி உள்ளது. 

மருந்துகள் மற்றும் உளவியல் சிகிச்சை போன்ற பிற சிகிச்சைகளுக்கு மத்தியில் யோகாவும் சரிசமமாக உள்ளது என சிறந்த உடல் ஆரோக்கிய வல்லுநர்கள் கண்டறிந்து உள்ளனர். எதார்த்தத்தில் யோகா செய்வதற்கு பெரிய அளவிலான பணம் தேவைப்படுவதில்லை, அதனாலேயே நவீன உடற்பயிற்சி முறைகள் பல வந்தாலும் யோகா நிலையாக நம் சமூகத்தில் நின்று பலரையும் ரட்சித்து வருகிறது.

15 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் சில மருத்துவ கண்டுபிடிப்புகளை நடத்தி உலகிலேயே மருத்துவத்திற்கும் அதன் முன்னேற்றத்திற்கும் ஐரோப்பா நாடுகள் தான் காரணம் என்று போலி பிம்பத்தை கட்டமைப்பவர்கள் மத்தியில், மிக எளிமையாக இந்திய மரபு சார்ந்த எந்த ஒரு பக்கவிளைவுகள் அற்ற உடல் பயிற்சிகளையும் மருத்துவ முறைகளையும் பிற நாடுகளுக்கு எடுத்து சென்று மனித வளத்தை மேன்மை அடைய செய்வதில் ஓர் நவயுக "யோகி"யாக காட்சியளிக்கிறார் நம் போற்றுதலுக்குரிய பிரதமர் நரேந்திர மோடி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com