முடங்கி வரும் ஈத்தல் கூடை முடையும் தொழில்!

மூங்கில் குடும்பத்தைச் சேர்ந்த ஈத்தல் ஏழைகளின் மரம், பச்சை தங்கம் என்று அழைக்கப்படுகிறது.
முடங்கி வரும் ஈத்தல் கூடை முடையும் தொழில்!
Published on
Updated on
2 min read

மூங்கில் குடும்பத்தைச் சேர்ந்த ஈத்தல் ஏழைகளின் மரம், பச்சை தங்கம் என்று அழைக்கப்படுகிறது. மலைப் பகுதிகளில் இயற்கையாக வளரும் ஈத்தலைக் கொண்டு பொதுமக்கள் அன்றாடம் பயன்படுத்தும் தட்டு, முறம், கூடை, காய்கறிக் கூடை, தட்டுக் கூடை, பெட்டிக் கூடை, விசிறி, கல்யாணக் கூடை, சீர்வரிசைக் கூடை, அரிசிக் கூடை, பூக்கூடை உள்ளிட்ட பொருள்கள் தயாரிக்கப்படுகின்றன. 

இந்தப் பொருள்கள் அனைத்தும் இயற்கையானது மட்டுமன்றி, சுற்றுச் சூழலுக்கும் உகந்தது. இருப்பினும், நெகிழிக் (பிளாஸ்டிக்) கூடை உள்ளிட்ட பொருள்கள் குறைந்த விலையில் கிடைப்பதால், அவற்றின் ஆதிக்கம் அதிகரித்து, ஈத்தலால் செய்யப்படும் பொருள்களுக்கான வரவேற்பு குறைந்து வருகிறது.

மூங்கில், ஈத்தல் சார்ந்த பொருள்கள் ஏற்றுமதியில் இந்தியா இரண்டாமிடம் வகித்து வருவதாகப் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. ஆனால், தமிழ்நாட்டைப் பொருத்தவரை இந்தத் தொழில் குறைந்த அளவிலேயே நடைபெற்று வருகிறது. கடந்த 10 ஆண்டுகளில் நகர்ப்புறம் மட்டுமன்றி, கிராமங்களில் கூட வீட்டு உபயோகத்துக்கும், வேளாண் பணிகளுக்கும் பிளாஸ்டிக் பொருள்கள் பயன்படுத்தப்படுவதே இதற்குக் காரணம். இதனால், போதிய வருவாய் இன்றி இந்தத் தொழிலில் ஈடுபட்டுவரும் தொழிலாளர்கள் படிப்படியாக மாற்றுத் தொழிலுக்கு மாறி வருகின்றனர்.

 மதுரை தத்தனேரி, அருள்தாஸ்புரம், காயாம்புப்பள்ளம், அசோக்நகர், அனுப்பானடி வடக்குத் தெரு, அனுப்பானடி அடுக்குமாடிக் குடியிருப்பு ஆகிய பகுதிகள் மட்டுமன்றி, மாவட்டத்தில் திருமங்கலம், சோழவந்தான், கருப்பாயூரணி, உசிலம்பட்டி, வாடிப்பட்டி, அலங்காநல்லூர் ஆகிய பகுதிகளிலும் ஈத்தல் பொருள்கள் தயாரிக்கும் பணியில் பல்லாயிரக்கணக்கானோர் ஈடுபட்டனர். ஆனால், தற்போது நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் மட்டுமே இந்தத் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களும் தற்போது வாழ்வாதாரமின்றி தவித்து வருகின்றனர். 

எனவே, அரசு விழாக்கள், அரசு அலுவலகங்களில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் நெகிழிப் பொருள் பயன்பாட்டுக்குப் பதிலாக, ஈத்தல் மூலம் தயாரிக்கப்படும் பொருள்களைப் பயன்படுத்த வேண்டும் என்பது சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது. 

இதுகுறித்து தத்தனேரி அருள்தாஸ்புரத்தைச் சேர்ந்த ஈத்தல் கூடை முடையும் தொழிலாளர்கள் தமிழ்ச்செல்வி, புவனேஸ்வரி, ராஜேஸ்வரி ஆகியோர் கூறுகையில், "கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக ஈத்தல் பொருள்களைத் தயாரித்து விற்பனை செய்து வருகிறோம். ரூ.80 முதல் ரூ.130 வரை கூடைப் பொருள்கள் விற்பனை செய்யப்படுகின்றன. நெகிழிப் பொருள்களின் வரத்தால் இந்தத் தொழில் நலிவடைந்து வருகிறது.

இதே நிலை நீடித்தால் வருங்காலங்களில் ஈத்தல் கூடை முடையும் பணிக்கு ஆள்கள் இருக்கமாட்டார்கள். எனவே, நெகிழிப் பொருள்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், ஈத்தல் பொருள்களைப் பயன்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றனர். 

ஈத்தல் கூடை முடையும் தொழிலாளர்கள் கூட்டு முயற்சியுடன் விண்ணப்பித்தால் மூலப் பொருள்கள் வாங்குவதற்கு கடனுதவி வழங்கலாம். மேலும், கூட்டுறவுச் சங்கம் அமைப்பது குறித்து அரசு தான் முடிவெடுக்க வேண்டும் என்று மாவட்டத் தொழில் மைய அலுவலர் ஒருவர் கூறினார்.

மகளிர் திட்ட அலுவலர் கூறுகையில், ஈத்தல் கூடை முடையும் தொழில் சிறு தொழில் என்பதால் இதற்கு கடனுதவியும் வழங்கப்படவில்லை. மகளிர் திட்டம் மூலம் மகளிர் சுய உதவிக் குழு உறுப்பினர்களுக்கு போதிய பயிற்சி அளித்து கைவினைப் பொருள்களை உற்பத்தி செய்து வருகின்றனர் என்றார். 

இந்தத் தொழிலில் ஈடுபடுவோர் அமைப்புசாரா தொழிலாளர்கள் நல வாரியத்தில் பதிவு செய்தால் அரசின் சலுகைகள் வழங்கப்படும் என்று தொழிலாளர் நல வாரிய அலுவலர் கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com