உண்மையான அன்புக்கு கிடைத்த வெற்றி

"தி எலிஃபன்ட் விஸ்பெரர்ஸ்' ஆவண குறும்படத்துக்கு ஆஸ்கர் விருது கிடைத்தது உண்மையான அன்புக்கு கிடைத்த வெற்றி என்று பொம்மன் தெரிவித்துள்ளார்.
உண்மையான அன்புக்கு கிடைத்த வெற்றி
Updated on
2 min read

"தி எலிஃபன்ட் விஸ்பெரர்ஸ்' ஆவண குறும்படத்துக்கு ஆஸ்கர் விருது கிடைத்தது உண்மையான அன்புக்கு கிடைத்த வெற்றி என்று பொம்மன் தெரிவித்துள்ளார்.

நீலகிரி மாவட்டம், முதுமலை காப்பகத்தில் யானை பராமரிப்பாளர்களாகப் பணியாற்றும் காட்டுநாயக்கர் பழங்குடி இனத்தைச் சேர்ந்த பொம்மன், பெள்ளி தம்பதியைப் பற்றிய "தி எலிஃபன்ட் விஸ்பெரர்ஸ்' என்ற ஆவண குறும்படம் ஆஸ்கர் விருதை வென்றுள்ளது.

இந்த மகிழ்ச்சியான தருணத்தில், எதையும் எதிர்பார்க்காமல் கடமையே கண்ணாக, தருமபுரி மாவட்டம், பாலக்கோடு வட்டம், மாரண்டஅள்ளி அருகே மின்சாரம் பாய்ந்து இறந்த யானைகளின் குட்டிகளை வனத் துறையினருடன் சேர்ந்து தேடும் பணியில் பொம்மன் திங்கள்கிழமை ஈடுபட்டிருந்தார். 

அவர் கைப்பேசியில் "தினமணி' செய்தியாளருக்கு அளித்த பேட்டியில் தெரிவித்திருப்பதாவது: 

கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு தாயைப் பிரிந்து, உடலில் காயங்களுடன் வால் வெட்டுப்பட்டு, இறக்கும் நிலையில் இருந்த ஒரு குட்டி யானை காட்டுக்குள் மீட்கப்பட்டு காட்டுநாயக்கர் பழங்குடியான என்னிடம் ஒப்படைக்கப்பட்டது.
அதைக் காப்பாற்றி வளர்த்தெடுப்பது கடினமான காரியம் என பலரும் நினைத்த நிலையில் என்னால் காப்பாற்ற முடியும் என்று கூறி அந்த யானைக் குட்டியை பராமரிக்கத் தொடங்கினேன்.

அந்த யானைக் குட்டிக்கு "ரகு' என பெயர் சூட்டி எங்கள் குழந்தையைப்போலவே பராமரித்து வந்தோம். நான் சொன்னதுபோலவே அந்தக் குட்டியை இயல்பான உடல்நிலைக்குத் தேற்றினோம். அதன் பின்னர், ரகுவுக்குத் துணையாக "பொம்மி' என்ற பெண் குட்டி யானையைப் பராமரிக்க வனத் துறையினர் கொடுத்தனர்.

ஒரே கிராமத்தைச் சேர்ந்த நானும் பெள்ளியும் 50 வயதைக் கடந்தவர்கள். யானை பராமரிப்பில் ஒன்றாக ஈடுபட்டு வந்தோம். ஒரு கட்டத்தில் திருமணம் செய்து கொண்டோம். பொம்மன், பெள்ளி, ரகு, பொம்மி என நால்வரும் ஒரு குடும்பமாக மாறினோம். 

நாங்கள் யானைகளின் மீது கொண்டிருக்கும் நிபந்தனையற்ற அன்புதான் "தி எலிஃபன்ட் விஸ்பெரர்ஸ்' ஆவண குறும்படத்தின் அடித்தளமாக அமைந்துள்ளது. ஆஸ்கர் விருது பெற்றதை உண்மையான அன்புக்கு கிடைத்த வெற்றியாகப் பார்க்கிறோம். இத்தனை பெரிய வரவேற்பும், விருதும் எங்கள் கதைக்கு கிடைக்கும் என இருவருமே எதிர்பார்க்கவில்லை.

இயக்குநர் கார்த்திகியும், அவருடைய நண்பர்களும் முதுமலைக்கு அடிக்கடி வருவார்கள். அப்படி ஒருமுறை ரகுவை நான் எடுத்து வளர்க்கத் தொடங்கிய காலத்தில் வந்தனர். அப்போதுதான் இந்த குட்டி யானையுடன் சேர்த்து உங்களை வைத்து ஒரு படம் எடுக்கிறோம் எனக் கூறி இந்த ஆவண குறும்படத்தின் படப்பிடிப்பைத் தொடங்கினர். 2 ஆண்டுகள் படப்பிடிப்பை மேற்கொண்டனர்.

எங்களுக்கு ஆஸ்கர் விருது பற்றியெல்லாம் தெரியாது. ஆனால், எங்களைப் பலரும் சந்தித்துப் பாராட்டி பேசும்போது புதிராக இருக்கிறது. இதற்காக இயக்குநர் கார்த்திகிக்கு நன்றி தெரிவித்துக்கொள்ள விரும்புகிறோம். 

தற்போது குட்டி யானைகள் ரகு, பொம்மி ஆகியவற்றை வேறு பாகன்களின் பராமரிப்பில் வனத் துறையினர் விட்டுள்ளனர். அந்த குட்டிகளை நினைக்கும்போதெல்லாம் எங்கள் குழந்தைகளை இழந்ததுபோல வேதனை அடைகிறோம் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com