தர்மம் தலைகாக்கும்..!

என்னதான் காஷ்மீர் பண்டிதர்களின் மீள்குடியேற்றம் சில தடுமாற்றங்களை கண்டாலும், போராட்டங்கள் வன்முறை என நிறைந்திருந்த ஜம்மு மற்றும் காஷ்மீர் இப்போது ஒட்டுமொத்த வளர்ச்சி பாதையை நோக்கி பயணிக்கிறது.
தர்மம் தலைகாக்கும்..!

உலக நாடுகள் மத்தியில் மிகவும் முக்கியமிடம் பிடித்த ஜி-20 மாநாடு காஷ்மீர் பகுதியில் மே மாதம் நடக்க உள்ளது. அறிவித்த நாளிலிருந்து பாகிஸ்தான் இதை எதிர்த்து வருகிறது, ஆச்சரியமில்லை!.. ஆனால் புதிய இந்தியாவின் பார்வையும் பலத்தையும் கண்ணெதிரே கண்ட பிறகும், பாகிஸ்தான் பார்வையில்லாதது போல் நடிப்பது உலக அளவில் அவர்களின் ஆற்றலை மீண்டும் மீண்டும் குறைக்கிறது அவ்வளவுதான். கடையடைப்பு, பள்ளிக்கூட எரிப்பு, கல்வீச்சு என பரபரப்பும் அச்சமும் நிறைந்திருந்த ஜம்மு காஷ்மீர், 2015-க்கு பிறகு பல மாற்றங்களை கண்டது. 

அதில் மிக முக்கியமான முடிவு இந்திய அரசாங்கம்  ஆகஸ்ட் 5 2019 இல், ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தான, பிரிவு 370 ஐ ரத்து செய்தது. அதோடு முடியவில்லை, இந்த முடிவு பல சர்வதேச அரங்குகளில் பலராலும் கேள்விக்குள்ளானது, இது முஸ்லிம்களுக்கு எதிரானது என்ற ஒரு தீர்மானத்திற்கே வந்து விட்டனர். ஆனால், நிதர்சனத்தில் ஜம்மு காஷ்மீரில் அதன் பின் நடந்த முன்னேற்றங்கள் அபாரமானது, அதை தற்போது பலரும் அங்கீகரித்து வருகின்றனர். ஏன், சில மாதங்களுக்கு முன்னர் காஷ்மீர் முதல்முறையாக தனது வெளிநாட்டு முதலீட்டை பெற்றது. துபாயின் எமார் குழுமம் ரூ.500 கோடி மதிப்பிலான ஷாப்பிங் மற்றும் அலுவலக வளாகத்தை கட்ட உள்ளது, இது தவிர 2022-23 நிதியாண்டில் ஜம்மு மற்றும்  காஷ்மீர், முதல் பத்து மாதத்தில் ரூ.15,000 கோடி அளவிலான முதலீட்டுகளை பெற்றது. இதனால் ஜம்மு மற்றும் காஷ்மீரில் வேலைவாய்ப்பும், பொருளாதாரமும் மிகப்பெரிய உயரத்தை தொடவுள்ளது. ஆனால் இத்தனை ஆண்டு கால தாமதம் ஏன்?!
 
காஷ்மீர் பள்ளத்தாக்கின் சிறுபான்மை சமூகமான காஷ்மீர் பண்டிட்கள், பள்ளத்தாக்கிலிருந்து 1990-ஆம் ஆண்டு ஜனவரி, மார்ச் மாதங்களுக்கு இடையில் கூட்டம் கூட்டமாக வெளியேறத் தொடங்கினர். அதற்கு, பயங்கரவாதமும் பிரிவினைவாதமும் அவர்களை பின் தொடர்ந்து கொண்டே இருந்தது தான் காரணம், அந்த சமூகத்தைச் சார்ந்த குழந்தைகள் பெண்கள் ஆண்கள் என அனைவரும் அதற்கு இரையானர்.

மலைகளும் பணிகளும் சூழ காஷ்மீர் பண்டிதர்கள் வசீகரமான வாழ்க்கையை வாழ்ந்து வந்தனர். ஆனால் 1990 களில் அது ஒரு கனவாக மாறியது இன்று நினைத்து பார்த்தாலும் வெளியேறிய அந்நாள் அவர்களுக்கு மிகக்கொடூரமான இரவும் பகலுமாய் இருக்கிறது…

1990-களுக்கு முன்பே காஷ்மீர் பண்டிட்களை பல தீவிரவாத மற்றும் பிரிவினைவாத இயக்கங்கள் குறிவைத்துக்கொண்டே இருந்தன.

1989 ஆம் ஆண்டு, பள்ளத்தாக்கின் பாஜக தலைவர் டிக்கா லால் டாப்லூ (Tika Lal Taploo) செப்டம்பர் 13 அன்று சுட்டுக் கொல்லப்பட்டார். மக்பூல் பட்டுக்கு மரண தண்டனை விதித்த, ஓய்வுபெற்ற நீதிபதி நீல்காந்த் கஞ்சூ, நவம்பர் 4-ம் தேதி ஸ்ரீநகரில் உள்ள ஜம்மு காஷ்மீர் உயர் நீதிமன்றத்திற்கு வெளியே சுட்டுக் கொல்லப்பட்டார். பத்திரிகையாளரும் வழக்குரைஞருமான பிரேம்நாத் பட், டிசம்பர் 27 ஆம் தேதி அனந்த்நாகில் சுட்டுக் கொல்லப்பட்டார். 

பண்டிதர்களின் கொலை எண்ணிக்கை அதிகமாகிக்கொண்டே இருந்தது.  ஹிஸ்-புல்- முஜாஹிதீனிடமிருந்து, பண்டிட்களை வெளியேறச் சொல்லி, உள்ளூர் செய்தித்தாள் செய்தியை வெளியிட்ட பின்னர், அந்தச் சமூகம் பெரிய நெருக்கடிக்கு உள்ளானது.

இதன் விளைவாக  ஜனவரி 20,1990 இல், காஷ்மீர் பண்டிதர் சமூகம், பள்ளத்தாக்கிலிருந்து வெளியேறத் தொடங்கியது.

அடுத்தடுத்து பல காஷ்மீர் பண்டிதர்களின் மரணமும், தீவிரவாதமும், ஸ்ரீநகர் மற்றும் பிற ஜம்மு காஷ்மீர் பகுதியில் தலை தூக்க தொடங்கியது.

டிசம்பர் 27,1992 அன்று 'காஷ்மீர் பிரச்னைக்கு தீர்வு' என்ற பெயரில், பிரிவினைவாதத்தை வலுப்படுத்த, வெறும் 19 வயதே ஆன மிர்வைஸ் உமர் ஃபரூக், எல்லா பிரிவினைவாத கட்சிகளையும் அழைத்து, கூட்டணி பேச்சுவார்த்தை உருவாக்கி, அதன் நீட்சியாக அனைத்து கட்சி  ஹுரியத் மாநாடு (APHC) என்ற பிரிவினைவாத இயக்கத்தை ஜூலை 31, 1993 அன்று தொடங்கினர்.

ஹூரியத் நிர்வாகக் குழுவில் ஏழு வெவ்வேறு கட்சிகளைச் சேர்ந்த சையத் அலி ஷா கிலானி, மிர்வைஸ் உமர் ஃபாரூக், ஷேக் அப்துல் அஜீஸ், மௌல்வி அப்பாஸ் அன்சாரி, அப்துல் கனி பட், யாசின் மாலிக் மற்றும் அப்துல் கனி லோன் ஆகியோர் அடங்கினர்.

இதில் அனைவருமே தீவிரவாதம், பிரிவினைவாத சிந்தனையுடன், தொடர்ந்து பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தையில் இருந்து வந்தனர். இதனால் 'காஷ்மீர் பிரச்னைக்கு' தீர்வு வரவில்லை, வன்முறையும், கல்வீச்சும் தான் கஷ்மீரின் அடையாளமாக மாறியது.

இதில் அப்துல் கனி லோன், 2002ல் தீவிரவாதிகளால் கொல்லப்பட்டார். மேலும் ஷேக் அப்துல் அஜீஸ், 2008-இல் போலீசார் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தார்.

ஹூரியத் சித்தாந்தங்கள் மற்றும் ஆளுமைகளின் இடையே கருத்து வேறுபாடுகள் இருந்ததால் கோஷ்டி  பூசல் ஒரு நிரந்தர அம்சமாகவே இருந்தது. அதனால் 2003இல் ஹூரியத் அமைப்பு இரண்டாகப் பிளவுபட்டது. ஒருபுறம்  'பிரிவினைவாதத்தின் Hardliner' சையத் அலி ஷா கிலானி; மறுபுறம் மிர்வைஸ் உமர் ஃபாரூக் பிரிவினைவாத சிந்தனைகளை அடுத்தகட்டத்திற்கு நகர்த்திச் சென்றனர். 

ஹூரியத் அமைப்புகள், எண்ணிலடங்கா பல பாகிஸ்தான் அமைப்புகளோடு தொடர்பில் இருந்ததால் இந்திய அரசியல் களத்தில் ஓரங்கட்டப்பட்டனர். 2004 இல் தெஹ்ரீக்-இ-ஹுரியத் (Tehreek-e-Hurriyat) என்ற சொந்த கட்சியை கிலானி உருவாக்கினார். இதனிடையே யாசின் மாலிக் தலைமையிலான ஜே&கே விடுதலை முன்னணி வலுப்பெற்றது. ஆயுதப் பயிற்சிக்காக 80களில் பாகிஸ்தானுக்கு சென்ற பல காஷ்மீர் இளைஞர்களில் யாசின் மாலிக்கும் ஒருவர்.

இவர்கள் அனைவருமே விடுதலை (Azadi) என்ற பெயரில் கஷ்மீரில் வன்முறையை வளர்த்து, பல இளைஞர்களின் வாழ்க்கையை அழித்தனர். அடிக்கடி கடையடைப்பு மற்றும் போராட்டங்களை மேற்கொண்டு, பள்ளி கல்லூரிக்கு செல்லும் மாணவ மாணவிகளின் கனவையும் வேரோடு சாய்த்தனர்.

கிலானி, பெருமளவில் தீவிரவாதத்திற்கு ஆதரவாக குரல் கொடுத்தவர். மேலும் 2008 மற்றும் 2010 ஆம் ஆண்டு காஷ்மீர் பள்ளத்தாக்கில் நடந்த கலவரங்களுக்கு மூல காரணமாக இருந்தவர். பயங்கரவாதத்திற்கு ஆயிரக்கணக்கான காஷ்மீர் இளைஞர்கள் மற்றும் குடும்பங்களின் வாழ்க்கை குலைந்ததற்கு, கிலானியே காரணம் என்றும் பல முக்கிய அரசியல் தலைவர்கள் பதிவு செய்துள்ளனர்.

துரதிர்ஷ்டவசமாக பெரும்பாலான அரசியல் ஆர்வலர்கள்  மற்றும் மாற்று சிந்தனையாளர்களுக்கு காஷ்மீர் பண்டிதர்களின்  வெளியேற்றம் காஷ்மீர் பிரச்சினையாக மட்டுமே பார்த்து அந்த மக்களின் பெரும் சோகத்தை ஓரங்கட்டினார். காஷ்மீர் பண்டிதர்களின் தொடர்ச்சியான இடப்பெயர்வு அரசாங்கங்களின் தோல்வி மட்டுமல்ல, பகுத்தறிவாளர்களின் ஒரு குறுகிய பார்வையும் ஆகும்.

மியான்மரில் இருந்து சட்டவிரோதமாக புலம்பெயர்ந்த ரோஹிங்கிய சமூகத்திற்கு கண்ணீர் விட்ட கண்கள்  சொந்த நாட்டில் அகதிகளாக நின்ற காஷ்மீர் பண்டிதர்களுக்கும் ஈழத்தமிழர்களுக்கும் கண்ணீர் விட மறுத்தது.

மத்தியில் உள்ள பாஜக அரசு 2017 இல், பிரிவினைவாதிகளை ஒடுக்க, அஜித் தோவலின்  வியூகத்தை செயல்படுத்தத் தொடங்கியது. மேலும், பிரிவு 370ஐ நீக்கிய பிறகு 3 முன்னாள் முதல்வர்கள் உட்பட 50-க்கும் மேற்பட்ட முக்கிய நபர்களை தடுப்புக் காவலில் வைத்தது; பிற பிரிவினைவாத தலைவர்களை கைது  செய்தது. இன்னும் சிலர் சிறையில் உள்ளனர். மேலும், தகவல் தொடர்பு முடக்கம், காஷ்மீரில் பிரிவினைவாதிகள் மற்றும் அவர்களின் ஆதரவாளர்களை திகைக்க வைத்தது. இதனால் பள்ளத்தாக்கில் பிரிவினைவாத அரசியல் வீழ்ச்சியடையத் தொடங்கியது.

பிரிவினைவாதிகள் மேலும் அதிர்ச்சி அடையும் வகையில் ஜனவரி 29, 2020இல், ஹூரியத் மாநாட்டின் தலைவர் பதவியிலிருந்து விலகுவதாக கிலானி அறிவித்தார். அவரது ராஜினாமா கடிதத்தில், பிரிவு 370ஐ ரத்து செய்தது தான் காரணம் என்று வெளிக்காட்டினார்.

காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை நீக்கிய பிறகு பாஜக அரசு, வளர்ச்சிக்கான பல மாற்றங்களை கஷ்மீரில் கொண்டு வரத் தொடங்கியது. அதனால் நிறைய இளைஞர்கள் 'ஒரே இந்தியா' என்ற கருத்துக்கு வரத்தொடங்கினர். காஷ்மீரில் பிரிவினைவாதம் இறுதி முடிவில் இருக்கும் நேரத்தில் சையத் அலி ஷா கிலானி 2021 செப்டம்பரில் இறந்தார். இவரின் மரணத்தை காஷ்மீரில் இந்தியாவுக்கு எதிரான பிரிவினைவாத அரசியலின் முற்றுப்புள்ளியாக பலரும் பார்க்கின்றனர்.

இப்போது கலவரங்கள், பொதுமக்களின் மீது எறியப்படும் கல்வீச்சு சம்பவங்கள், 93 சதவீதம் குறைந்துள்ளது. கடந்த 30 ஆண்டுகளில் முதல் முறையாக, தீவிரவாதிகளின் எண்ணிக்கை 200-க்கும் குறைவாகவே காணப்படுகிறது.

மேலும், பிரிவு 370ஐ ரத்து செய்ததால் நடந்த மற்றொரு மாற்றம் என்னவென்றால் அங்கு நடைமுறையில் இருந்த பழைய நிரந்தர குடியிருப்பு சட்டத்தை திருத்தியது. இது ஜம்மு, காஷ்மீர் பட்டியலின சமூகத்திற்கும் பெண்களுக்கும் சம உரிமையை வழங்க மறுத்தது. பெண்கள், நிரந்தர குடியிருப்பு உரிமை இல்லாதவர்களை மணந்தால், அவர்களுக்கு மாநில உரிமைகள் மறுக்கப்பட்டு வந்தன.

இந்த புதிய குடியிருப்பு கொள்கை, ஜம்மு காஷ்மீர் பெண்களுக்கு சம உரிமை அளிக்கிறது. ஏனென்றால், அது அவர்களுக்கு திருமண சுதந்திரத்தை அளிக்கிறது. மற்றும் அவரது குடியிருப்பை தக்கவைத்து, சமூகத்தில் சமமாக பங்கேற்பதற்கான உரிமையும் வழங்குகிறது. கூடுதலாக அவர்களது துணைவர்களுக்கும் புதிய குடியிருப்பு கொள்கை பல நன்மைகளை அளிக்கிறது. அதேபோல், முன்பு துப்புரவு பணிகள் மட்டுமே ஒதுக்கப்பட்டிருந்த  பட்டியலினத்தைச் சேர்ந்த வால்மீகி சமூகம் இந்த திருத்தங்களால் தொழில், மருத்துவம், ஆசிரியர்கள் பணி என அடுத்த கட்டத்திற்கு நகர்ந்தனர்.  இதனால் தயக்கமின்றி பலரும் சிறு  வணிக நிறுவனங்களை தொடங்கி, அங்கு சுற்றுலா துறையும் அவர்கள் வசம் திருப்பினர்.

கடந்த ஆண்டு 43% சுற்றுலாப் பயணிகள் ஜம்முவில் உள்ள வைஷ்ணவ் தேவி மற்றும் காஷ்மீரில் உள்ள அமர்நாத் ஆகிய இரண்டு இந்து வழிபாட்டுத் தலங்களுக்கு சென்றுள்ளனர். மேலும் அமர்நாத் யாத்ரீகர்களின் வழியோர கூடாரங்கள், 2018 இல் 20,000லிருந்து 70,000 ஆக உயர்ந்துள்ளது. அரசாங்கம் இப்போது அதிக ரிஸார்ட்களையும் உருவாக்கியுள்ளது. இதனால் சுற்றுலாவை ஊக்கப்படுத்துவதுடன் சுற்றுலாப் பயணிகளுக்கு பயனுள்ளதாகவும் அமைந்துள்ளது. 

என்னதான் காஷ்மீர் பண்டிதர்களின் மீள்குடியேற்றம் சில தடுமாற்றங்களை கண்டாலும், போராட்டங்கள் வன்முறை என நிறைந்திருந்த ஜம்மு மற்றும் காஷ்மீர் இப்போது ஒட்டுமொத்த வளர்ச்சி பாதையை நோக்கி பயணிக்கிறது. அதுவே தீவிரவாதிகளையும் பயங்கரவாதிகளையும் வித்திட்டு வளர்த்த பாகிஸ்தான் இப்போது சிதறி கிடக்கிறது!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com