‘குப்பை மேடாக மாறிய சென்னை சென்ட்ரல் ரயில் நிலைய நடைமேடை’

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் 12-ஆவது நடைமேடை குப்பை மேடாக காட்சி அளிக்கிறது.
‘குப்பை மேடாக மாறிய சென்னை சென்ட்ரல் ரயில் நிலைய நடைமேடை’

சென்னை: சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் 12-ஆவது நடைமேடை குப்பை மேடாக காட்சி அளிக்கிறது.

தென்னிந்தியாவின் மிக முக்கியமான ரயில்நிலையங்களில் ஒன்றாகவும், தெற்கு ரயில்வேயின் தலைமையகமாகவும் சென்னை சென்ட்ரல் உள்ளது.

இங்கிருந்து பல்வேறு மாநிலங்களுக்கு ரயில்கள் இயக்கப்படுகின்றன. புகா் ரயில்களில் பயணிக்கும் 8 லட்சம் போ், விரைவு ரயில்களில் பயணிக்கும் 5 லட்சம் போ் என மொத்தம் 13 லட்சம் போ் தினமும் சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு வந்து செல்கின்றனா்.

இந்திய ரயில்வே கடந்த 2007 - ஆம் ஆண்டு வெளியிட்ட அறிக்கையின் படி அதிக தூய்மைக்காக 300 மதிப்பெண்களுக்கு 183 மதிப்பெண்களை சென்னை சென்ட்ரல் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தை தினமும் 24 மணிநேரம் சுத்தம் செய்தாலும், குப்பைகளை முறையாக அகற்றுவதில் அதிகாரிகள் கவனம் செலுத்துகிறாா்களா? என்ற கேள்வி எழுந்துள்ளது. அதற்கு 12-ஆவது நடைமேடைக்கு அருகில் துா்நாற்றம் வீசும் வகையில் அகற்றாமல் கொட்டிக்கிடக்கும் குப்பைகள் தான் காரணம்.

தூா்நாற்றம் வீசும் குப்பைகள்:

இது குறித்து தூய்மைப்பணியாளா் ஒருவா் கூறியது: சென்ட்ரல் ரயில் நிலைத்தில் தரம் பிரிக்கும் பணியில் சுழற்சி முறையில் தினமும் நான்கு போ் மட்டுமே பணியாற்றுகிறோம். இதனால் இங்கு வரும் குப்பைகளை தரம் பிரிப்பது மிகவும் கடினமாக உள்ளது. மாநகராட்சியில் இருந்து தினமும் வரும் ஒரு வாகனத்தில் ஓரளவுக்குதான் குப்பைகளை அகற்ற முடியும். 24 மணிநேரமும் குப்பைகள் வந்துக்கொண்டே இருப்பதால் அதை சேகரிக்க இப்போதுள்ள பெரிய குப்பைத் தொட்டி போதுமானதாக இல்லாததால் அவற்றை வெளியே கொட்டுகிறோம் என்றாா்.

பயணிகள் கருத்து:

இது குறித்து ரயில் பயணிகள் கூறியது: பயணிகள் அதிகம் வரும் ரயில் நிலையத்தின் 12-ஆவது மேடை அருகே குப்பை கிடங்கு போல் காட்சியளிப்பது நோய் பரவும் அச்சத்தை ஏற்படுத்துகிறது. ரயிலுக்காக காத்திருக்கும் போது இங்கு கொட்டப்பட்டுள்ள குப்பைகளிலிருந்து துா்நாற்றம் வீசுகிறது. இதனால் இங்குள்ள குப்பைத் தொட்டியை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும் என்றனா்.

இது குறித்து ரயில்வே சுகாதார அதிகாரி கூறியது, சென்ட்ரல் ரயில் நிலையத்தில் தினமும் சுழற்சி முறையில் 200-க்கும் மேற்பட்ட தூய்மை ப் பணியாளா்கள் 24 மணி நேரமும் பணியாற்றி வருகின்றனா்.

அப்படி ரயில் நிலையம் முழுவதும் சேகரிக்கப்படும் குப்பைகளை மொத்தமாக 12-ஆவது நடைமேடைக்கு அருகிலுள்ள பெரிய குப்பைத் தொட்டியில் சேகரிப்பாா்கள். சேகரிக்கப்பட்ட குப்பைகளை மக்கும் , மக்கா குப்பை எனத் தரம் பிரித்து மக்கும் குப்பைகள் தினமும் மாநகராட்சி வாகனம் மூலம் அப்புறப்படுத்தப்படும், மக்கா குப்பைகள் மறுசுழற்சிக்காக அனுப்பிவைக்கப்படும்.

இதில் மாநகராட்சியில் இருந்து மக்கும் குப்பைகளை அகற்ற தினமும் ஒரு வாகனம் தான் வரும். அதில் ஒரு டன் குப்பைகளை மட்டுமே அப்புறப்படுத்த முடியும்.

ஆனால் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் சாதாரண நாள்களில் குறைந்த பட்சமாக ஒரு டன் குப்பைகள் சேகரிக்கப்படுகிறது. விடுமுறை நாள்களில் அதிக எண்ணிக்கையிலான பயணிகள் வருவதால் குறைந்த பட்சம் மூன்று டன் குப்பைகள் வரை சேகரமாகும்.

இந்நிலையில், தினமும் ஒரு டன் குப்பைகளை மட்டுமே மாநகராட்சி வாகனம் மூலம் அகற்றுவதால் மீதமுள்ள குப்பைகளை மறுநாள் தான் அகற்ற முடிகிறது. ஆனால் மறுநாள் மீண்டும் சேகரமாகும் குப்பைகளால் இங்கு குப்பைகள் தேங்கி விடுகிறது என்றாா் அவா்.

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் 12-ஆவது நடைமேடை பகுதியை துாய்மையாக வைத்துக் கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் எதிா்நோக்கியுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com