மோனா லிசாவின் மற்றொரு ரகசியம்!

மற்றொரு ரகசியத்தையும் தற்போது வெளிப்படுத்தியிருக்கிறாள் மோனா லிசா!
மோனா லிசா!
மோனா லிசா!

மற்றொரு ரகசியத்தையும் தற்போது வெளிப்படுத்தியிருக்கிறாள் மோனா லிசா!

புகழ்பெற்ற ஓவியரான லியோனார்டோ டா வின்சி தீட்டிய புன்னகை பூக்கும் பெண்மணி ‘மோனா லிசா’வின் ஓவியத்துக்குள் இன்னும் எத்தனை ரகசியங்கள்தான் புதைந்துகிடக்கின்றனவோ?

இறவா வரம் பெற்ற இந்த ஓவியத்தின் வேதியியல் கட்டமைப்பு பற்றி எக்ஸ் ரே கதிர் கொண்டு ஆய்வு செய்ததில், ஓவியத்தில் லியோனார்டோ டா வின்சி பயன்படுத்தியுள்ள நுட்பங்கள் பற்றிய புதிய வெளிச்சங்கள் கிடைக்கப் பெற்றுள்ளன.

பதினாறாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் மோனா லிசா ஓவியத்தை வரையத் தொடங்கும் காலத்தில் குறிப்பிட்ட சோதனை முயற்சியை மேற்கொள்வதில் இத்தாலியின் மாபெரும் கலைஞரான டா வின்சி ஆர்வம் கொண்டிருந்திருக்கிறார் என்பது ஆய்வின்வழி தெரியவந்துள்ளதாக இதுபற்றிய கட்டுரையை வெளியிட்டுள்ள அமெரிக்க வேதியியல் கழக இதழ் குறிப்பிட்டுள்ளது.

ஓவியத்துக்கான வரைபலகையின் மீது அடிப்படை வண்ணமாக – முதலடுக்குப் படிவாக (பேஸ் லேயர்) தீட்டப்பட்ட நெய்வண்ணத்தின் செய்முறை மற்றவற்றிலிருந்து மோனா லிசா ஓவியத்தைப் பொருத்தவரை மாறுபட்டிருக்கிறது. இதற்கென வித்தியாசமான வேதியியல் கலவை பயன்படுத்தப்பட்டிருப்பதாக பிரான்ஸ் மற்றும் பிரிட்டனிலுள்ள அறிவியலாளர்களும் வரலாற்றாளர்களும் கண்டறிந்துள்ளனர்.

அவர் எப்போதும் பரிசோதனைகள் செய்து பார்ப்பதில் மிகவும் ஆர்வம் கொண்டிருந்திருக்கிறார்; அவருடைய ஒவ்வொரு ஓவியமும் முற்றிலும் மாறுபட்ட நுட்பங்களைக் கொண்டிருக்கிறது என்று குறிப்பிடுகிறார், இந்த ஆய்வுக் குழுவின் தலைவரும் பிரான்ஸின் உயர் ஆய்வு அமைப்பான தேசிய அறிவியல் ஆய்வு மைய வேதியியலாளருமான விக்டர் கோன்சாலே.

புகழ்பெற்ற லியோனார்டோ டா வின்சி, ரெம்ப்ராண்ட் மற்றும் பலருடைய எண்ணற்ற ஓவியங்களின் வேதிப்பொருள் கலப்புகளைப் பற்றி கோன்சாலே ஆராய்ந்திருக்கிறார். 

மோனா லிசா ஓவியத்துக்கு மட்டும் ஆதாரமான வண்ணம் தீட்டலுக்கு ஒரு குறிப்பிட்ட நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது என்பதை அறிய வியப்பாக இருக்கிறது என்றும் நேர்காணலொன்றில் கோன்சாலே தெரிவித்துள்ளார்.

குறிப்பாக, மிகவும் அபூர்வமான கலவையை, ப்ளம்போனாக்ரைட், டா வின்சி பயன்படுத்தியுள்ளார்.

ஓவியத்தைத் தீட்டத் தொடங்குமுன், அடர்த்தியாக்கவும் நெய்வண்ணத்தைக் காயச் செய்யவும் காரீய ஆக்ஸைடு தூளை டா வின்சி பயன்படுத்தியிருக்கலாம் – என்று இதுவரையிலும் வெறும் கணிப்பாக மட்டுமே கலை வரலாற்றாளர்கள் கூறிவந்ததை இந்தக் கண்டுபிடிப்பு உறுதி செய்துள்ளதாகத் தெரிவிக்கிறார் கோன்சாலே.

இத்தாலிய கலைகளில் விற்பன்னரும் நியு யார்க் மாநகர அருங்காட்சியகக் காப்பாட்சியருமான கார்மன் பேம்பக் - இந்த ஆய்வில் பங்குபெறாவிட்டாலும் - இந்த ஆய்வு மிகவும் உற்சாகமூட்டுவதாகவும் டா வின்சியின் ஓவியங்கள் தொடர்பாக அறிவியல்ரீதியாக உறுதிசெய்யப்படும் எந்தவொரு நுட்பம் பற்றிய கண்டுபிடிப்பும் கலை உலகத்தையும் உலகையும் பொருத்தவரை மிகவும் முக்கியமான செய்தி என்றும் குறிப்பிட்டுள்ளார்.

மோனா லிசாவில் ப்ளம்போனாக்ரைட்டை அவர் பயன்படுத்தியிருப்பது அவருடைய முனைப்பையும் தொடர்ச்சியான முயற்சிகளையும் காட்டுகிறது என்றும் பேம்பக் தெரிவித்துள்ளார்.

ஓவியத்தில் வெறுங்கண்களால் பார்க்கத் தெரியாத அளவில், மனித முடியின் விட்டத்தைவிடக் குறைவான தடிமனில் தீட்டப்பட்டுள்ள இந்த அடிப்படை வண்ணத்தை ஆய்வுக்கு எடுத்துக்கொண்டனர். எக்ஸ் ரே கதிர்களின் உதவியுடன் இந்த வண்ணத் தீட்டலின் அணுக் கட்டமைப்பை ஆய்வு செய்ததில் புதிய முடிவுக்கு வந்தனர்.

காரிய ஆக்ஸைடின் துணைப் பொருள்தான் ப்ளம்போனாக்ரைட். இப்போதுதான் வேதியியல்ரீதியாக இந்தப் பொருள் பயன்படுத்தப்பட்டிருப்பது முதல்முறையாக உறுதி செய்யப்பட்டுள்ளது என்றும் கோன்சாலே குறிப்பிட்டுள்ளார். லியோனார்டோ டா வின்சிக்குப் பிறகு, பதினேழாம் நூற்றாண்டில் ஓவியர் ரெம்ப்ராண்ட்டும் இதைப் பயன்படுத்தியிருக்கலாம். இவருடைய ஓவியங்களிலும் ப்ளம்போனாக்ரைட் பயன்படுத்தப்பட்டுள்ளதை கோன்சாலேயும் பிற ஆய்வாளர்களும் ஏற்கெனவே கண்டறிந்துள்ளனர்.

பல நூற்றாண்டுகள் கடந்தும் நிலைத்திருக்கும் இந்த நெய் வண்ணக் கலவை மிகச் சிறப்பானவொன்று. ஆளிவிதை அல்லது வால்நட் எண்ணெய்யில் ஆரஞ்சு வண்ணம்கொண்ட காரீய ஆக்ஸைடு தூளைக் கலந்து அதைச் சூடாக்குவதன் மூலம் அடர்த்தியை அதிகரிக்கவும் விரைவில் உலரக் கூடிய கலவையாகவும் டா வின்சி செய்திருக்கலாம் எனக் கருதப்படுகிறது. இந்தத் தயாரிப்பிலிருந்து, தேனைப் போல வழிந்தோடுகிற, மென்மையான தங்க நிற எண்ணெய்யைப் பெற முடியும். 

பிளாரன்டைனைச் சேர்ந்த பட்டு வணிகரின் மனைவியான லிசா கிரார்தீனியைத் தீட்டியதுதான் எனக் கருதப்படும் ஓவியமான மோனா லிசாவும் லியோனார்டோ டா வின்சியின் பிற ஓவியங்களும் இன்னமும்கூட சொல்வதற்கு ஏராளமான ரகசியங்களைப் புதைத்து வைத்திருக்கின்றன.

நிச்சயமாக, இன்னமும் நிறைய, நிறைய கண்டுபிடிக்கப்பட வேண்டும். இப்போது வெறுமனே மேற்பரப்பைத்தான் சுரண்டிக் கொண்டிருக்கிறோம் என்று குறிப்பிடும் விக்டர் கோன்சாலே, அறிவுப் பரப்பில் இதுவொரு சிறிய நகர்வு என்றார்.

பிரான்ஸில் பாரிஸ் நகரின் லூவர் மியூசியத்தில் கண்ணாடி சட்டகத்துக்குள் அடைக்கப்பட்டுக் காக்கப்படும், உலகமே உற்று உற்று நோக்கிக் களித்துக் கொண்டிருக்கும் மோனா லிசாவின் புன்னகைக்குப் பின் இன்னும் என்னவெல்லாம்தான் இருக்கப் போகின்றனவோ?

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com