பரந்தூரில் ரயில் நிலையம்?

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பரந்தூர் வரை ரயில் பாதையை நீட்டிக்க தெற்கு ரயில்வே ஆய்வு மேற்கொண்டு வருகிறது. 
கோப்புப்படம்
கோப்புப்படம்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பரந்தூர் வரை ரயில் பாதையை நீட்டிக்க தெற்கு ரயில்வே ஆய்வு மேற்கொண்டு வருகிறது. 

காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூா் பகுதியில் சென்னையின் இரண்டாவது பசுமை விமான நிலையம் அமைக்க மத்திய - மாநில அரசுகள் திட்டமிட்டு, அதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகின்றன. இதற்கு அப்பகுதியில் உள்ள பரந்தூர், ஏகனாபுரம் உள்ளிட்ட 13 கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். 

இந்நிலையில் பரந்தூரில் ரயில் நிலையம் அமைக்க செங்கல்பட்டு - அரக்கோணம் ரயில் பாதையில் தெற்கு ரயில்வே ஆய்வு செய்து வருகிறது.

ஏற்கெனவே தமிழ்நாட்டில் 390 கிமீ தூரத்திற்கு புதிய ரயில் பாதைகளை அமைக்க தெற்கு ரயில்வே அனுமதி வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. 

ஏற்கெனவே பரந்தூரில் அமையவுள்ள புதிய விமான நிலையத்தை இணைக்க, பெங்களூரு - சென்னை விரைவுச் சாலையுடன் இணைக்க நான்கு வழி தேசிய நெடுஞ்சாலை இணைப்பு முன்மொழியப்பட்டுள்ளது. 

பரந்தூர் விமான நிலைய பகுதி சென்னையில் இருந்து 67 கிமீ தொலைவிலும் அரக்கோணம் - காஞ்சிபுரம் ரயில்பாதையில் உள்ள திருமால்பூர் ரயில் நிலையத்தில் இருந்து 10 கிமீ தொலைவிலும் உள்ளது. 

செங்கல்பட்டு - அரக்கோணம் இடையே 68 கிமீ தூரத்திற்கு இரண்டாவது பாதை அமைப்பதற்கான ஆய்வுக்கு ரயில்வே ஒப்புதல் அளித்துள்ள நிலையில், பரந்தூரில் அமையவுள்ள விமான நிலையத்திற்கு ரயில் இணைப்பு வழங்குவதற்கான கள ஆய்வும் நடத்தப்படும் என்று ரயில்வே வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. 

இத்திட்டத்தில் பாலூரில் இருந்து சிங்கப்பெருமாள் கோயில் அருகே உள்ள பரனூர் வரை புறவழிச்சாலை அமைக்கும் திட்டமும் உள்ளது. 

இது தவிர, அரக்கோணத்தில் இருந்து ஜோலார்பேட்டை வரையிலான மூன்றாவது மற்றும் நான்காவது பாதைகள் அமைப்பதற்கான இட ஆய்வுக்கும் ஒப்புதல்  வழங்கப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் இருந்து பெங்களூரு, மைசூரு, கோவைக்கு கூடுதல் ரயில்கள் செல்லும், இந்த வழித்தடத்தில் நெரிசல் தவிர்க்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

திருச்சி - கரூர் இரட்டைப் பாதை, கூடூர் - சூலூர்பேட்டை 3, 4-வது பாதைகள், கும்மிடிப்பூண்டி - சூலூர்பேட்டை 3, 4-வது பாதைகள், கொருக்குப்பேட்டை - பேசின் பிரிட்ஜ் 3, 4-வது பாதைகள், கடலூர் துறைமுகம் - கடலூர் சந்திப்பு ரயில் சாகர் இடையே என 5 ரயில் பாதைத் திட்டங்களுக்கு ரயில்வே ஒப்புதல் வழங்கியுள்ளது. இந்த திட்டங்கள் நடைமுறைக்கு வர சில ஆண்டுகள் ஆகும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com