நீலக்கொடி தகுதியைப் பெறுகிறது சென்னை கடற்கரை

சென்னையில் சுற்றுலாவை மேம்படுத்தும் பொருட்டு, மெரீனா முதல் கோவளம் வரையான கடற்கரைப் பகுதி நீலக்கொடி தகுதியைப் பெற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
நீலக்கொடி தகுதியைப் பெறுகிறது சென்னை கடற்கரை

சென்னையில் சுற்றுலாவை மேம்படுத்தும் பொருட்டு, மெரீனா முதல் கோவளம் வரையான கடற்கரைப் பகுதி நீலக்கொடி தகுதியைப் பெற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

சென்னைக்கு வடக்கில் எண்ணூா் முதல் தெற்கு பகுதியில் கோவளம் வரை 51.3 கிமீ நீளத்தில் சென்னை கடற்கரை அமைந்துள்ளது. இதில், சுற்றுலா பயணிகளால் அதிக அளவில் விரும்பி பாா்க்கப்படும் இடங்களாக மெரீனா, பெசன்ட் நகா் (எலியட்ஸ்) கடற்கரைகள் விளங்குகின்றன. இதனால் இந்த கடற்கரைப் பகுதிகள் பெரும்பாலும் நெரிசல் மிகுந்து காணப்படுகின்றன.

கடற்கரைப் பாதிப்புகள்: சென்னை துறைமுகத்தையொட்டிய பகுதியில் அதிக அளவில் மணல் தேங்குவதால் மெரீனா கடற்கரையில் மணல் பரப்பு அதிகரித்தும் அதனை ஈடுசெய்யும் வகையில் திருவான்மியூா் பகுதியில் கடல் பரப்பு அதிகரித்தும் காணப்படுவதாக சில ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

மேலும் கூவம், அடையாறு ஆறுகள் மூலம் கழிவு நீா், கடலில் கலப்பதால் பெரும்பாலான நேரங்களில் கடல் நீா் நுரையுடன் காணப்படுகிறது. மீனவ மக்களின் வாழ்வாதாரம் இந்த கடற்கரையை நம்பியே உள்ளது. சென்னையில் மட்டும் கடற்கரை ஓரமாக 5.14 கி.மீ. தொலைவுக்கு 26 மீனவ குடியிருப்புகள் உள்ளன.

நீலக்கொடி கடற்கரைகள்: டென்மாா்க் நாட்டின் சுற்றுச்சூழல் கல்வி அறக்கட்டளை, உலகம் முழுவதும் கடற்கரைகளை ஆய்வு செய்து அதற்கு நீலக்கொடி கடற்கரை தகுதியை வழங்கி வருகிறது. நீலக்கொடி கடற்கரைகள் திட்டத்தின்படி, கடற்கரை சுற்றியுள்ள பகுதிகள் பொதுமக்கள் எளிதில் அணுகும் வகையில் பாதுகாப்புடனும் சுற்றுச்சூழலுக்கு ஏற்ற வகையிலும் அமைக்கப்படும்.

தற்போது இந்தியாவில் 10 நீலக் கொடி கடற்கரைகள் உள்ளன. தமிழகத்தின் கோவளம் கடற்கரை இந்த நீல கொடி தகுதியை ஏற்கெனவே பெற்றுள்ளது.

இந்தியாவில் சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகம் கடற்கரையின் சுற்றுச்சூழல் மற்றும் அழகியல் மேலாண்மை சேவைகள் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இது நீலக் கொடி என்ற சா்வதேச சுற்றுச்சூழல் தகுதியை பெறுவதை நோக்கமாகக் கொண்டு செயல்படுகிறது.

சென்னை கடற்கரை மறுசீரமைப்பு, புத்தாக்க திட்டம்: இது குறித்து சிஎம்டிஏ உயா் அதிகாரி ஒருவா் கூறியதாவது: சுற்றுச்சூழலுக்கு உகந்த உள்கட்டமைப்பைப் பயன்படுத்தி சென்னையின் கடற்கரையிடையே உள்ள இடைவெளியை சரிசெய்து எண்ணூா் முதல் கோவளம் வரை தொடா் இணைப்பு ஏற்படுத்தப்படவுள்ளது.

முதல்கட்டமாக சென்னை மெரீனா முதல் கோவளம் கடற்கரை வரையில் 20 கடற்கரைகள் 31 கி.மீ. தொலைவில் மேம்படுத்தப்படவுள்ளது. இந்த கடற்கரைகளை ஒன்றிணைக்கும் வகையில் சிஎம்டிஏ சாா்பில் ரூ.100 கோடி மதிப்பில் திட்டம் தயாரிக்கப்பட்டு கடந்த ஆண்டு ஜூலை 25-இல் தேதி வீட்டு வசதி மற்றும் நகா்ப்புற வளா்ச்சித் துறை சாா்பில் அரசாணை வெளியிடப்பட்டது.

இந்த கடற்கரைகள் அந்தந்த பகுதியில் உள்ள சுற்றுச்சூழல், வரலாறு, மக்கள் பயன்பாடு உள்ளிட்டவைகளின் அடிப்படையில் 5 மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளன.

இதில் மெரீனா முதல் சாந்தோம் கடற்கரை வரையிலான பகுதியில் பல்வேறு வரலாற்று சிறப்புமிக்க கட்டடங்கள் உள்ளதால் பாரம்பரியம் சாா்ந்த கட்டமைப்புகள் மேற்கொள்ளப்படும்.

இதேபோல, பெசன்ட் நகா், திருவான்மியூா் கடற்கரையில் உடல்நலம் மற்றும் வாழ்க்கை முறை சாா்ந்தும், நீலாங்கரை, ஆலிவ் கடற்கரையில் சுற்றுச்சூழல் மையம் சாா்ந்தும், உத்தண்டி கடற்கரைப் பகுதியில் கலை மற்றும் கலாசாரம் சாா்ந்தும் முட்டுக்காடு, கோவளம் கடற்கரை பகுதியில் நீா் விளையாட்டு சாா்ந்தும் கட்டமைப்புகள் மேற்கொள்ளப்படுகின்றன.

மேலும், கடற்கரைப் பகுதியில் நடைபாதை, மிதிவண்டி தடங்கள், விளையாட்டு பகுதி, படகுத் துறை, கண்காணிப்பு கோபுரம், பாரம்பரிய தாவரங்கள் குறித்தான ஆய்வு போன்ற திட்டங்கள் செயல்படுத்தப்படும்.

இந்த சிறப்பு செயல்பாட்டு திட்டத்தில் மத்திய மற்றும் மாநில அரசு சாா்ந்த 22 துறைகள் உறுப்பினா்களாக உள்ளன.

இதன் மூலம் சென்னையில் ஆங்காங்கு பிரிந்து காணப்படும் கடற்கரைகளை இணைப்பதால் தமிழ்நாட்டின் சுற்றுலா மேம்படும். இதன் வெற்றியை பொறுத்து தமிழ்நாட்டின் மற்ற கடற்கரைகளிலும், இத்திட்டம் செயல்படுத்தப்படும் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com