கொழும்பு துறைமுகத்தில் ரூ. 4,600 கோடியில் சரக்குப் பெட்டக முனையம்! அமெரிக்கா அறிவிப்பு, சீனாவுக்குப் போட்டி!

கொழும்பு துறைமுகத்தில் ரூ. 4,600 கோடியில் ஆழ்கடல் சரக்குப் பெட்டக முனையத்தை உருவாக்குகிறது அமெரிக்கா!
கொழும்பு துறைமுகம்...
கொழும்பு துறைமுகம்...

இலங்கையில் கொழும்புத் துறைமுகத்தில் 553 மில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் சுமார் ரூ. 4,600 கோடி) செலவில் ஆழ்கடல் சரக்குப் பெட்டக முனையத்தை உருவாக்கும் திட்டத்தை அமெரிக்கா அறிவித்துள்ளது.

இலங்கையில் ஏற்கெனவே பன்னாட்டு முதலீட்டுத் திட்டத்தின் கீழ் சீனா ஏராளமாக முதலீடு செய்துவரும் நிலையில் தற்போது போட்டியாக அமெரிக்காவும் இலங்கையில் களம் இறங்கி முதலீட்டைத் தொடங்கியிருக்கிறது.

உலகளாவிய சந்தைகள் பெருகும் சூழலில் இலங்கைக்குத் திறமான கட்டமைப்பு வசதிகளை வழங்குவதன் மூலம் பெரும் வணிகக் கப்பல் தடத்திலுள்ள கொழும்பு துறைமுகத்தை உலகத் தரத்திலான சரக்குப் பெட்டக முனையமாக மாற்ற அமெரிக்கா திட்டமிடுவதாக அமெரிக்கா பன்னாட்டு வளர்ச்சி நிதி நிறுவனம்  (யு.எஸ். இன்டர்நேஷனல் டெவலப்மென்ட் பைனான்ஸ் கார்ப்பரேஷன்) குறிப்பிட்டுள்ளது.

இலங்கையைக் கடன் சுமையில் தள்ளாத வகையில், கொழும்பு துறைமுகத்தின் திறனை அதிகரிப்பதிலும் வளர்ச்சியைக் கொண்டுவருவதிலும், இந்தப் பகுதியில் தங்கள் கூட்டு நாடுகளை வலுப்படுத்தும் வகையில் இந்தக் கடன் அமையும் என்று, கொழும்பில் புதன்கிழமை திட்டத்தை அறிவித்த, நிதி நிறுவனத்தின் தலைமைச் செயல் அலுவலர் ஸ்காட் நாதன் தெரிவித்துள்ளார்.

கடுமையான நிதிச் சுமையிலும் பொருளாதார நெருக்கடியிலும் இலங்கை சிக்கித் தவித்துக்கொண்டிருக்கும் நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.

2021-லிருந்து தன் முழுத் திறனளவும் கொழும்பு துறைமுகம் செயல்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில், வங்கக் கடலில் வளரும் பொருளாதார சூழலை புதிய முனையம் முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ளும்.

இந்தக் கடனை முனையத்தின் மேம்பாட்டுக்கான அமைப்புக்கு நேரடியாக நிதி நிறுவனம் வழங்கும். இந்த அமைப்பின் பங்குகளில் 51  சதவிகிதத்தை இந்தியாவின் அதானி குழுமம் வைத்திருக்கிறது. இலங்கையின் ஜான் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் 34 சதவிகித பங்குகளையும் இலங்கைத் துறைமுக ஆணையம் மீதியுள்ள 15 சதவிகித பங்குகளையும் வைத்திருக்கின்றன.

கேள்வியொன்றுக்குப் பதிலளிக்கிறார் ஸ்காட் நாதன். அருகே (இடது) இலங்கை வெளியுறவுத் துறை அமைச்சர் அலி சாப்ரி.
கேள்வியொன்றுக்குப் பதிலளிக்கிறார் ஸ்காட் நாதன். அருகே (இடது) இலங்கை வெளியுறவுத் துறை அமைச்சர் அலி சாப்ரி.

தங்கள் நிதி நிறுவனத்தைப் பொருத்தவரை இந்திய – பசிபிக் பிராந்தியத்தில் இந்தியாவுக்கு அடுத்தபடியாக இரண்டாவது இடத்தில் இலங்கை இருக்கும். இந்தப் பிராந்தியத்தில் முனைப்பாகச் செயல்பட வேண்டும் என்பதை அமெரிக்கா அதிமுக்கியமானதாகக் கருதுகிறது என்றும் புதிய முனையத்துக்கான இடத்தைப் பார்வையிட்ட பின் செய்தியாளர்களுடன் பேசிய ஸ்காட் நாதன் தெரிவித்துள்ளார்.

உலகளவில் கட்டமைப்புகளை உருவாக்குவதில் பெருமெடுப்பில் இறங்கிய சீனா,  சுற்று மற்றும் சாலை முன்னெடுப்பு என்ற தன்னுடைய திட்டத்தின் மூலம், வளரும் நாடுகளில் தனக்கான ஆதரவையும் நல்லெண்ணத்தையும் உறுதிப்படுத்திக்கொள்ளும் விதத்தில் சாலைகள், ரயில் பாதைகள், துறைமுகங்கள், விமான நிலையங்கள் உருவாக்கப் பல்லாயிரம் கோடி டாலர்களைச்  செலவிட்டுக் கொண்டிருக்கிறது.

இந்த நிலையில்தான், ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர், அமெரிக்காவும் இதேபோன்ற நோக்கத்துடன் இந்தப் பன்னாட்டு வளர்ச்சி நிதி நிறுவனத்தை  உருவாக்கியுள்ளது.

சீனாவின் இத்தகைய திட்டங்களில் சிலவற்றால் பெரும் சர்ச்சைகளும் ஏற்பட்டன, ஏற்பட்டு வருகின்றன. இவற்றில் இலங்கையின் ஹம்பந்தோட்டா துறைமுகப் பிரச்சினையும் ஒன்று. இந்தத் துறைமுகத்துக்காக சீனாவிடமிருந்து பெருமளவு கடனை இலங்கை பெற்றது. இதையொட்டி, நகரத்தையும் விமான நிலையத்தையும்கூட இலங்கை உருவாக்கியது. எல்லாமே சீனக் கடனில்தான். ஆனால், கடன்களைத் திருப்பிச் செலுத்தும் அளவுக்கு இந்தத் திட்டங்களில் வருவாய் கிடைக்கவில்லை. தொடர்ந்து, 2017-ல் ஹம்பந்தோட்டா துறைமுகத்தை  சீனாவுக்கே 99 ஆண்டுக் குத்தகைக்கு விட்டுவிட்டது இலங்கை.

சீனக் கடனிலிருந்து இலங்கையால் மீள முடியாத நிலையில், கடன்கள் மூலம் நாடுகளைத் தன் பிடிக்குள் சிக்க வைப்பதில் சீனா ஈடுபடுவதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தன. எனினும், இந்தக் குற்றச்சாட்டை சீனா மறுத்துள்ளது.

இலங்கையில் தங்கள் செல்வாக்கைத் தக்கவைத்துக் கொள்வதில் இந்தியாவும் சீனாவும் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுவருகின்றன. இரு நாடுகளுமே இலங்கையில் துறைமுக விரிவாக்கப் பணிகளில் முதலீடுகளைச் செய்திருக்கின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com