வாட்டி வதைக்கும் கோடை வெப்பம்... 25 லட்சம் லிட்டராக சரிந்த ஆவின் பால் கொள்முதல்!

வாட்டி வதைக்கும் கோடை வெப்பம்...  25 லட்சம் லிட்டராக சரிந்த ஆவின் பால் கொள்முதல்!

வரலாறு காணாத வகையில் தற்போது வாட்டி வதைக்கும் கோடை வெப்பத்தால் மார்ச் மாதத்தில் நாள் ஒன்றுக்கு 30 லட்சம் முதல் 31 லட்சம் லிட்டர் வரை இருந்த ஆவின் பால் சராசரி கொள்முதல் ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் 25 லட்சம் லிட்டராக சரிந்துள்ளது.

வாட்டி வதைத்து வரும் கோடை வெயிலில் மனிதர்களுக்கு ஏற்படும் பலவிதமான பாதிப்புகள் போல் கால்நடைகளுக்கும் வெப்ப அழுத்தம் ஏற்பட்டு வெப்பத்தை தாங்கும் திறன் கொண்ட உள்நாட்டு கால்நடைகள் மற்றும் கலப்பின, அயல்நாட்டு கலப்பின கறவை மாடுகளின் பால் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், தமிழகத்தில் ஆவின் தினசரி கொள்முதல் செய்யும் பால் அளவு கடந்த 10 நாள்களில் 5 லட்சம் லிட்டர் குறைந்துள்ளது. மார்ச் மாதத்தில் நாள் ஒன்றுக்கு 30 லட்சம் முதல் 31 லட்சம் லிட்டர் வரை இருந்த சராசரி கொள்முதல் ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் 25 லட்சம் லிட்டராக சரிந்துள்ளது.

கடந்த ஆண்டு இதே காலக்கட்டத்தில் நாள் ஒன்றுக்கு 26 லட்சம் லிட்டராக இருந்த பால் கொள்முதலில் ஒரு லட்சம் லிட்டர் மட்டுமே குறைந்ததாக ஆவின் நிறுவனம் கருதினாலும், வரும் நாள்களில் நிலைமை மோசமாகி பால்கோவா, ஐஸ்கிரீம் மற்றும் பால்சார்ந்த இனிப்புகள் போன்ற பொருட்களின் உற்பத்தி பாதிக்கப்படலாம் என்று தொழில்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதுகுறித்து ஆவின் நிர்வாக இயக்குநர் சு. வினீத் கூறுகையில், வெப்பச் சலனம் காரணமாக கால்நடைகளின் பால் கறக்கும் திறன் குறைந்துள்ளது. தருமபுரி மற்றும் திருச்சி மாவட்டங்களில் வெப்பநிலை 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகரித்ததால் பால் கொள்முதல் ஓரளவு குறைந்துள்ளது. ஆனால் அட்டைதாரர்கள் மற்றும் சில்லறை நுகர்வோருக்கு பால் விநியோகம் பாதிக்கப்படவில்லை.

ஏற்கனவே பால் கொள்முதல் சரிவை ஈடுசெய்ய தயாராகிவிட்டதாகவும், போதுமான அளவு பால் பவுடர் கையிருப்பு உள்ளது. கொழுப்பின் அளவை அதிகரிக்க பாலை மறுசீரமைப்பதற்காக ஆவின் நெய்யையும் கொள்முதல் செய்யும்,” என்று அவர் தெரிவித்துள்ளார்.

ஆவின் மற்றும் தனியார் பால்பண்ணையாளர்கள், பால் உற்பத்திக்காக ஜெர்சி மற்றும் ஹோல்ஸ்டீன் ஃப்ரீசியன் பசுக்கள் மற்றும் எருமைகள் போன்ற அயல்நாட்டு இனங்களை பெரிதும் நம்பியுள்ளனர். கூடுதலாக, ஜெர்சி மற்றும் எச்எஃப் வகைகளின் கலப்பினங்களிலிருந்து பால் பெறப்படுகிறது. நாட்டு இனங்கள் மூலம் உற்பத்தி செய்யப்படும் பால் பெரும்பாலும் கால்நடை விவசாயிகளால் உட்கொள்ளப்படுகிறது மற்றும் குறைந்த கொழுப்பு காரணமாக அவை வணிக விநியோகத்திற்கு பயன்படுத்தப்படுவதில்லை.

இது குறித்து ஆவின் கால்நடை மருத்துவர் கூறுகையில், “சொந்த இனங்களுடன் ஒப்பிடும் போது, அயல்நாட்டு மற்றும் கலப்பின கறவை மாடுகளுக்கு வெப்பத்தை தாங்கும் திறன் குறைவு. வெப்ப அழுத்தம் காரணமாக, கறவை மாடுகளின் உணவு உட்கொள்ளும் அளவு கணிசமாகக் குறைகிறது, இதனால் அவற்றின் பால் சுரக்கும் திறனைப் பாதிக்கப்படுகிறது.

‘தனியார் பால் நிறுவனங்களின் உற்பத்தி குறைந்து வருகிறது’

உள்நாட்டு கால்நடைகள் வெப்பத்தை தாங்கும் திறன் கொண்டவை என்றாலும், கலப்பின மற்றும் அயல்நாட்டு கால்நடைகள் வெப்ப அழுத்தத்திற்கு அதிக உணர்திறன் கொண்டவை. பால்கோவா மற்றும் பிற பொருட்கள் உள்ளிட்ட பால் பொருட்களின் உற்பத்தியில் பயன்படுத்தப்படும் எருமை பால், வெளிநாட்டு மாடுகளை விட குறைவான வியர்வை சுரப்பிகள் காரணமாக வெப்ப அழுத்தத்திற்கு ஆளாகின்றன, மேலும் அதிக சூரிய கதிர்வீச்சு மற்றும் குறைவான வியர்வை சுரப்பிகளை உறிஞ்சும் கருப்பு தோல் கொண்ட எருமைகளும் பாதிக்கப்படுகின்றன என்று கூறினார்.

தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் நலச் சங்கத்தைச் சேர்ந்த எம்.ஜி.ராஜேந்திரன் கூறும்போது, “ மாநிலம் முழுவதும் தனியார் பால் பண்ணைகளின் பால் உற்பத்தியும் ஓரளவு குறைந்துள்ளது. மூன்று தலைமுறைகளுக்கு முன்பு, பால் பண்ணையாளர்கள் ஆவின் மற்றும் கால்நடை பராமரிப்புத் துறையின் மூலம் ஆண்டு முழுவதும் கால்நடைகளுக்கு தேவையான உதவியைப் பெற்றனர், ஆனால் இப்போது இந்தப் பணியிடங்கள் (கால்நடை மருத்துவர்கள்) அவுட்சோர்சிங் செய்யப்பட்டு வருகின்றன.

இதனால் கால்நடை மருத்துவமனைகளில் போதிய எண்ணிக்கையில் கால்நடை மருத்துவர்கள் இல்லாததால் கால்நடை சிகிச்சைக்காக விவசாயிகள் கூடுதல் செலவு செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

கால்நடைகளை வெப்பத்தின் தாக்கத்தில் இருந்து இப்படியும் பாதுகாக்கலாம்

கோடை காலங்களில் கறவை மாடுகளுக்கு வெப்ப அயற்சியின் தாக்கத்தால் தீவனம் உட்கொள்ளும் திறன் குறைந்துவிடும். இதன் காரணத்தால், மாடுகளின் பால் உற்பத்தி திறன் குறையும்.

மேலும், கருவில் வளரும் கன்றின் வளா்ச்சிக்குத் தேவையான ஊட்டச்சத்து கிடைக்காமல் ஆரோக்கியமான கன்று ஈனுவதில் சிரமம் ஏற்பட வாய்ப்புள்ளது.

எனவே,

- வெயிலின் தாக்கத்திலிருந்து பாதுகாக்க பகல் நேரத்தில் காற்றோட்டமான மற்றும் திறந்த வெளி நிழல் அதிகம் இருக்கும் இடங்களில் வைத்து கறவை மாடுகளை பராமரிக்க வேண்டும்.

- மாடுகளின் சோா்வை குறைக்க தாது உப்புக் கலந்த குடிநீரை வழங்கலாம்.இதன் மூலம் கால்நடைகளின் உடல் வெப்பத்தை சீரான நிலையில் இருக்கும்.

- பசுந்தீவனங்களை கொடுப்பதால் நீர்ச்சத்து அளவு அதிகரிக்கும்.

- கோடைகாலத்தில் கறவை மாடுகளுக்கு கோமாரி, அம்மை, அடைப்பான் போன்ற நோய்கள் தாக்க வாய்ப்புள்ளதால், கால்நடை மருத்துவரின் ஆலோசனைப்படி உரிய தடுப்பூசிகளை உடனடியாக செலுத்த வேண்டும்.

- கால்நடைகளை செயற்கை கருவூட்டல் செய்யும் நேரத்தில் நிழலில் கட்டி வைக்க வேண்டும்.

- காற்றோற்றமில்லாத கொட்டகையில் அடைத்து வைப்பது தவிர்க்க வேண்டும்.

- கடுமையான வெயிலில் மேய்ச்சலுக்கு கொண்டு செல்வதை தவிர்க்க வேண்டும். அப்படி கொண்டு செல்லும்போது

நாடித்துடிப்பு பலவீனமாகவும், சில நேரங்களில் கருச்சிதைவு ஏற்படவும் வாய்ப்பு உள்ளது.

- கால்நடைகளுக்கு ஏற்படும் வெப்ப பாதிப்பை தடுக்க அடிக்கடி உடலில் தண்ணீர் தெளிக்க வேண்டும்.

- ஊறுகாய் புல், உலா்புல் போன்ற பதப்படுத்திய பசுந்தீவனங்களை மாடுகளுக்கு வழங்குவதன் மூலம் தீவனப் பற்றாக்குறையை ஈடுசெய்ய முடியும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com