பெண் மருத்துவா்களுக்கு இரவுநேரப் பணிகளில் பாதுகாப்பில்லை: ஐஎம்ஏ ஆய்வில் அதிர்ச்சி தகவல்

இரவுநேரப் பணியின்போது 30 சதவீதத்துக்கும் அதிகமான பெண் மருத்துவா்களுக்கு பாதுகாப்பில்லை என்ற அதிர்ச்சி தகவல் குறித்து...
கோப்புப்படம்
கோப்புப்படம்Center-Center-Chennai
Published on
Updated on
2 min read

புது தில்லி: இரவுநேரப் பணியின்போது 30 சதவீதத்துக்கும் அதிகமான பெண் மருத்துவா்களுக்கு பாதுகாப்பில்லை என்றும், 45 சதவீதம் மருத்துவா்களுக்கு தங்களுக்கென பணி அறைகள் இல்லை என்ற அதிர்ச்சி தகவல் இந்திய மருத்துவ சங்கம் (ஐஎம்ஏ) நடத்திய ஆன்லைன் ஆய்வில் தெரியவந்துள்ளது.

சமீபத்தில் மேற்கு வங்கத்தில் உள்ள ஆா்.ஜி.கா் மருத்துவமனையில் பெண் பயிற்சி மருத்துவா் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டதை அடுத்து மருத்துவா்களின் இரவுநேரப் பணியின்போது உள்ள பாதுகாப்பு குறித்து 3,885 மருத்துவ உறுப்பினர்களிடம் ஐஎம்ஏ ஆன்லைன் மூலம் ஆய்வு மேற்கொண்டது.

ஐஎம்ஏ அமைப்பின் கேரளப் பிரிவு ஆராய்ச்சித் துறை தலைவா் மருத்துவா் ராஜீவ் ஜெயதேவன் மற்றும் அவரது குழுவினரால் நடத்தப்பட்ட இந்த ஆய்வின் முடிவின் கருத்துகளை தொகுத்து ஐஎம்ஏ கேரள மருத்துவ இதழின் அக்டோபா் பதிப்பில் வெளியிடுவதற்கு அனுமதி பெற்றுள்ளனா்.

இந்த ஆய்விற்காக நாடு முழுவதும் 22 மாநிலங்களைச் சேர்ந்த அரசு மற்றும் தனியார் மருத்துவ உறுப்பினர்களிடம் கருத்துகள் கேட்கப்பட்டது. 24 மணி நேரத்திற்குள் தமிழகத்தை சேர்ந்த 430 மருத்துவர்கள் உள்பட 3,885 மருத்துவர்களிடம் இருந்து பெறப்பட்ட பதில்களில், 85 சதவீதம் பேர் 35 வயதுக்குட்பட்டவர்கள், 61 சதவீதம் போ் 35 வயதுக்குள்பட்ட பயிற்சி மருத்துவா்கள் அல்லது முதுகலை பயிற்சி மருத்துவர்கள். அதேபோல் 20 முதல் 30 வயதுக்குள்பட்ட மருத்துவா்கள் அல்லது மருத்துவ மாணவா்கள் மிகக் குறைந்த பாதுகாப்பே இருப்பதாகவும், தங்கள் பாதுகாப்பு குறித்து மிகவும் அச்சமடைந்திருப்பதாகவும் தெரிவித்துள்ளனா்.

"இரவுப் பணி பாதுகாப்பற்றதாக உள்ளது என 24.1 சதவீதம் பேரும் முழுமையான பாதுகாப்பு இல்லை என 11.4 சதவீதம் பேரும் தெரிவித்துள்ளனா். இதில் மூன்றில் ஒரு பங்கு மருத்துவா்கள் பெண்களாகவே உள்ளனா். அதுவும் பெரும்பாலும் பயிற்சியாளர்கள் மற்றும் முதுகலை பட்டதாரிகளே உள்ளனர். இரவுப் பணியில் தங்களைப் பாதுகாக்க தற்காப்பு ஆயுதங்களை சில பெண்கள் கொண்டு செல்வதாகவும், இரவுப் பணி பாதுகாப்பற்றதாக உணர்கிறவர்களின் விகிதம் பெண் மருத்துவர்களிடையே அதிகமாக உள்ளது" என்று ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

45 சதவீதம் மருத்துவா்கள் இரவுநேரப் பணியின்போது பணி அறைகள் இல்லை எனவும், அவ்வாறு பணியறைகள் இருந்தாலும் அவை மருத்துவா்கள் பணிபுரியும் வாா்டுகளைவிட்டு தூரத்தில் இருப்பதுடன் அதில் 53 சதவீத பணியறைகளில் தனி கழிவறைகளோ,குளியலறையோ கிடையாது. அவ்வாறு இருக்கும் அறைகளில் போதுமான பாதுகாப்புகள்(பூட்டு, தாழ்ப்பாள்) இல்லாததாலும் இரவு நேரங்களில் பல்வேறு சிக்கல்களுக்கு உள்ளாக நேரிடுகிறது. இந்த வசதிகளை பெறுவதற்காக சில நேரங்களில் மருத்துவர்கள் வெளியில் செல்ல நேரிடுவது ஆய்வில் தெரிய வந்துள்ளது.

மேலும் உடற்கூறாய்வு மேற்கொள்ளும் வாா்டுகளில் பணியாற்றும் மருத்துவா்கள் மது அருந்துபவா்களாலும் போதைப் பழக்கத்துக்கு அடிமையானவா்களாலும் தாக்குதலுக்கு உள்ளாவதும், அவசர சிகிச்சை பிரிவுகளில் கூட்டத்தில் சிக்கிக்கொள்ளும்போது பாலியல் அத்துமீறலுக்கு பெண் மருத்துவா்கள் ஆளாவதும், சிறு மருத்துவமனைகளில் போதிய பாதுகாப்பு அதிகாரிகள் இல்லாததால் இரவு நேர பணியில் இருக்கும் பெண் மருத்துவா்களின் நிலை மிகவும் கவலையளிப்பதாக உள்ளது என்ற அதிர்ச்சி தகவல் ஆய்வில் தெரிய வந்துள்ளது.

படிப்பை முடித்துவிட்டு உடனடியாக பணியில் இணையும் மருத்துவா்களின் பாதுகாப்பை மூத்த மருத்துவா்கள் உறுதிசெய்ய வேண்டும். ஆனால் தங்களும் இதுபோன்ற சூழல்களை கடந்து வந்ததாகக்கூறி சென்றுவிடுகிறார்கள் என சில மருத்துவா்கள் தெரிவித்துள்ளனா்.

பரிந்துரைகள்: மருத்துவமனைகளில் மருத்துவர்களின் பாதுகாப்பை அதிகரிக்க பயிற்சி பெற்ற பாதுகாப்புப் பணியாளர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது, பணியிடங்களில் சிசிடிவி கேமராக்களை பொருத்துதல், மருத்துவமனைகளில் மின் விளக்குகளை அமைத்து வெளிச்சமாக இருப்பதை உறுதி செய்தல், பழுதான மின் விளக்குகளை உடனடியாக நீக்கிவிட்டு புதிய மின் விளக்குகளை பொருத்துதல், தூய்மையான மற்றும் பாதுகாப்பான பணி அறைகளை அமைத்தல்,மருத்துவமனைகள், சுகாதார நிலையங்களில் வன்முறைகளை தடுக்க மத்திய பாதுகாப்புச் சட்டத்தை நடைமுறைப்படுத்துதல், பார்வையாளர்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்துதல், எச்சரிக்கை அமைப்புகளை நிறுவுதல் மற்றும் பூட்டுடன் கூடிய பாதுகாப்பான பணி அறைகள் போன்ற அடிப்படை வசதிகளை வழங்குதல் உள்ளிட்ட பாதுகாப்பை மேம்படுத்துவதற்கான பரிந்துரைகள் வழங்கப்பட்டுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com