விமான நிலையத்தில் வீல் சேர் இல்லை: நடந்து சென்ற முதியவர் பலி!

மும்பை விமான நிலையத்தில் சக்கர நாற்காலி தட்டுப்பாடு காரணமாக நடந்து சென்ற முதியவர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.
விமான நிலையத்தில் வீல் சேர் இல்லை: நடந்து சென்ற முதியவர் பலி!
DOTCOM

மும்பை விமான நிலையத்தில் சக்கர நாற்காலி தட்டுப்பாடு காரணமாக நடந்து சென்ற முதியவர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.

அமெரிக்காவின் நியூ யார்க் நகரில் இருந்து ஞாயிற்றுக்கிழமை புறப்பட்ட ஏர் இந்தியா 116 விமானம் மும்பை விமான நிலையத்துக்கு திங்கள்கிழமை பிற்பகல் சிறிது தாமதமாக 2.10 மணியளவில் வந்தடைந்தது.

இந்த விமானத்தில் இந்திய வம்சாவளியை சேர்ந்த 80 வயது முதியவர் தனது மனைவியுடன் மும்பைக்கு வந்திருந்தார். வணிக வகுப்பு இருக்கையில் பயணம் மேற்கொண்ட இருவரும், முன்னதாகவே சக்கர நாற்காலியை முன்பதிவு செய்திருந்தனர்.

ஆனால், சக்கர நாற்காலி தட்டுப்பாடு காரணமாக ஒரே ஒரு சக்கர நாற்காலி மட்டும் கிடைத்துள்ளது. அதனை மனைவிக்கு கொடுத்த முதியவர், விமானத்திலிருந்து குடியேற்ற சோதனை மையம் வரை சுமார் 1.5 கிலோ மீட்டர் தூரம் நடந்து வந்துள்ளார்.

இந்த நிலையில், குடியேற்ற சோதனை மையம் அருகே வந்த முதியவருக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. உடனடியாக விமான நிலைய ஊழியர்கள் மருத்துவமனைக்கு முதியவரை அழைத்துச் சென்ற நிலையில், அவர் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து ஏர் இந்தியா விமான நிறுவனம் அளித்த விளக்கத்தில்,

“குறிப்பிட்ட விமானத்தில் பயணம் செய்தவர்களில் 32 பேர் சக்கர நாற்காலி கேட்டிருந்தனர். ஆனால், 15 நாற்காலி மட்டுமே இருந்ததால், அடுத்த சுற்றில் அனுப்பி வைப்பதாக முதியவரிடம் தெரிவித்தோம். ஆனால், வயது மூப்பால் இருவருக்கும் உள்ள உடல் பிரச்னை காரணமாக ஒருவருக்கொருவர் துணையாக இருக்க வேண்டும் எனக் கருதி அவர் தனது மனைவியுடன் நடந்து சென்றார்.” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், “கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு வரை மருத்துவ சான்று வைத்துள்ள பயணிகளை தவிர மற்ற பயணிகள் விமான நிலையங்களில் சக்கர நாற்காலி பயன்படுத்த கட்டணம் வசூலிக்கப்பட்டது. ஆனால், பல்வேறு தரப்பினரிடம் இருந்து வந்த எதிர்ப்பு காரணமாக மருத்துவ சான்று முறை நிறுத்திவைக்கப்பட்டு முதியவர்களுக்கு இலவச நாற்காலி சேவை வழங்கப்பட்டு வருகிறது. இதனால் நடக்க முடிந்தவர்களும் சக்கர நாற்காலியை பயன்படுத்துவதால் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.” என்று விமான நிறுவன அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

நாட்டின் மிகப் பரபரப்பான மும்பை சர்வதேச விமான நிலையத்தில் சக்கர நாற்காலி தட்டுப்பாட்டால் முதியவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com