'தங்கல்' நடிகை சுஹானிக்கு வந்த நோய் என்ன? அறிகுறிகள் தெரியுமா?

'தங்கல்' நடிகை சுஹானி 19 வயதில் மரணமடைந்தார். அவருக்கு வந்த நோய் என்ன? அறிகுறிகள் குறித்து முதலில் மருத்துவர்களுக்கு முன்னெச்சரிக்கை தேவை
'தங்கல்' நடிகை சுஹானிக்கு வந்த நோய் என்ன? அறிகுறிகள் தெரியுமா?

தங்கல் பட நடிகை சுஹானி பட்நாகர் 19 வயதில் மரணமடைந்தார் என்ற செய்தி திரையுலகினருக்கு மட்டுமல்ல பலருக்கும் அதிர்ச்சிதரும் செய்தியாகத்தான் இருந்தது.

அமீர் கான், சாக்‌ஷி தன்வார் நடிப்பில் நிதேஷ் திவாரி இயக்கத்தில் 2016இல் உருவான படம் தங்கல். இந்தியாவில் 4300 திரையரங்குகளில் ஹிந்தி, தமிழ், தெலுங்கு என மூன்று மொழிகளில் வெளியான தங்கல், வெளிநாடுகளில் 1000 திரையரங்குகளில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது.

இந்தப் படத்தில் பபிதா போஹத்தின் (சான்யா மல்ஹோத்ரா கதாபாத்திரம்) குழந்தை நட்சத்திரமாக நடித்த சுஹானி பட்நாகர் தனது 19வது வயதில் காலமானார். தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் பிப்ரவரி 17ஆம் தேதி அவர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகின.

உயிரைக்கொள்ளும் அளவுக்கு அவருக்கு வந்த நோய் என்ன? அதனை எவ்வாறு கண்டறிவது? வராமல் தடுக்க வழி இருக்கிறதா என்று மருத்துவ நிபுணர்களிடம் கேட்டதற்கு, சுஹானி பட்நாகருக்கு வந்தது தோல் மற்றும் தசை அழற்சி நோய். இதனை ஆங்கிலத்தில் டெர்மடோமையோசிடிஸ் என்று அழைக்கிறார்கள் என்ற தகவல் கிடைத்தது.

நோய்யெதிர்ப்பாற்றலில் ஏற்படும் கோளாறுகளால் வரும் டெர்மடோமையோசிடிஸ் என்ற நோய் குறித்த விழிப்புணர்வு மக்களுக்கும், தோல் மருத்துவர்களுக்கும் கட்டாயம் ஏற்பட வேண்டும் என்பதையே சுஹானியின் மரணம் எடுத்துரைக்கிறது என்கிறார்கள் மருத்துவ நிபுணர்கள்.

நோயெதிர்ப்பாற்றலில் ஏற்படும் கோளாறால் சுஹானிக்கு தோல் மற்றும் எலும்பு தசைகளை பாதிக்கும் டெர்மடோமையோசிடிஸ் என்ற நோய் ஏற்பட்டது. சுஹானிக்கு இந்த நோய்க்கான அறிகுறிகள் ஏற்பட்டு இரண்டு மாதங்களாக அவதிப்பட்டு வருவதாகவும், ஆனால், இந்த நோய்தான் என்பதை இரண்டு வாரங்களுக்கு முன்புதான் கண்டறிந்ததாகவும் கூறுகிறார்கள் உறவினர்கள்.

முதலில், சுஹானிக்கு இடது கையில் லேசான வீக்கம் ஏற்பட்டுள்ளது. பிறகு தோலில் அடிக்கடி பாதிப்புகள் ஏற்பட்டன. அதற்காக பல மருத்துவர்களைப் பார்த்தும் எந்தப் பலனும் கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது. இரண்டு வாரங்களுக்கு முன்புதான், எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். அங்குதான் அவருக்கு டெர்மடோமையோசிடிஸ் என்ற அரிய நோய் பாதித்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டதாக அவரது குடும்ப உறுப்பினர்கள் கூறியுள்ளனர். ஸ்டீரியாய்ட் வகை மருந்துகளைக் கொண்டு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளனது. எனினும், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இது குறித்து எய்ம்ஸ் மருத்துவமனை மருத்துவர்கள் கூறுகையில், இதுபோன்ற நோயெதிர்ப்பாற்றலில் கோளாறு ஏற்பட்டு அதனால் உருவாகும் நோய்கள் குறித்து முன்னெச்சரிக்கை மற்றும் விழிப்புணர்வு அவசியம் என்கிறார்கள். ஏனெனில் பல நோய்களின் அறிகுறிகள், அரிய நோய்களுக்கான அறிகுறிகளாகவும் இருக்கின்றன. ஒரு நோய் வந்ததும், முதலில் தோல் மருத்துவர், நுரையீரல் நிபுணர், நரம்பியல் மருத்துவர், சிறுநீரக மருத்துவர்களை எல்லாம் பார்த்துவிட்டுத்தான் வாத நோய் மருத்துவத்தை அணுகுகிறார்கள். ஆனால், அதற்குள் நோய் முற்றிவிடுகிறது. பல வாத நோய்களின் அறிகுறிகள் இந்த மேற்கண்ட நோய்களின் அறிகுறிகளுடன் ஒத்திருப்பதும் இதற்குக் காரணம் என்கிறார்கள் மருத்துவர்கள்.

இந்த டெர்மடோமையோசிடிஸ் முதலில் தோலை பாதித்தாலும் பிறகு தசைகள், மூட்டுகள், நுரையீரல், இதயம், சிறுநீரகம் போன்றவற்றையும் பாதிக்கிறது. இதனால், நோயாளிகளுக்கு சில நேரங்களில் அழற்சி தடுப்பு மருந்துகளுடன் இன்னும் பிற மருந்துகளும் சேர்த்து அளிக்க வேண்டியதாகிறது.

நோய்யெதிர்ப்பாற்றலில் ஏற்படும் கோளாறு ஒருவருக்கு ஏன் ஏற்படுகிறது என்பது குறித்து தெளிவான புரிதல் எதுவும் இல்லை. இது பல்வேறு காரணிகளால் ஏற்படலாம் என்றே ஆய்வுகள் தெரிவிக்கின்றன. உதாரணமாக நுண்ணுயிர் தாக்குதல், புகைப்பிடித்தல், காற்று மாசுபாடு, உடலுக்கு ஒவ்வாத மருந்துகள், மன அழுத்தம், மரபு ரீதியான நோய் போன்றவையும் இதில் முக்கியப் பங்காற்றுகின்றன என்று கூறுகிறார்கள் மருத்துவர்கள்.

கரோனா உறுதி செய்யப்பட்டபோது பிசிஆர் பாசிட்வ் ஆனவர்களுக்கு நோய்யெதிர்ப்பாற்றலில் கோளாறு ஏற்படும் அபாயம் இருப்பதாகவும் கூறப்படுகிறது. அதேவேளையில், இந்த நோய்யெதிர்ப்பாற்றலில் கோளாறு ஏற்படுவதைத் தடுக்க முடியாது என்றும் ஆனால் உடனடியாக கண்டறிந்து சிகிச்சைபெற்றால் குணப்படுத்தலாம் என்றும் கூறுகிறது மருத்துவ உலகம்.

இதற்கான அறிகுறிகள்..

  • தோலில் தடிமன் போன்ற பாதிப்புகள் கன்னங்கள், நெஞ்சுப்பகுதி, முதுகில் ஏற்படலாம்.

  • தோள்பட்டை தசைகளில் தளர்ச்சி, கைகள், இடுப்பு, தொடைப்பகுதி, கழுத்துகளில் வலி உருவாகலாம்.

  • உட்கார்ந்த நிலையிலிருந்து எழுந்திருப்பது, கைகளை மேலே உயர்த்துவதற்கே சிரமப்படுவது போன்றவை இந்நோய்க்கான அறிகுறிகளாகும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com