
சுதிர் சூர்யவன்ஷி
சமுதாயத்தில் நலிவடைந்தோருக்கு அதிகாரம் அளிக்கும் விதமாக மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தேர்வுகளில் இடஒதுக்கீடு அளிக்கப்பட்டு வருகிறது. ஆனால், அரசு தரப்பில் வழங்கப்படும் இதுபோன்ற இட ஒதுக்கீடுகளை தவறான முறையில் பயன்படுத்தி பயனடைவது மன்னிக்க முடியாத குற்றம். இந்தியாவின் மிகவும் கடினமான தேர்வுகளில் ஒன்றான குடிமைப் பணிகளுக்கான தேர்வில் தேர்ச்சி பெற்று ஐஏஎஸ், ஐபிஎஸ் போன்ற அதிகாரிகளாக உருவாக போலியான சான்றிதழ்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான இடஒதுக்கீட்டைத் தவறாகப் பயன்படுத்தி பூஜா கேத்கர் என்பவர் ஐஏஎஸ் அதிகாரியாக தேர்ச்சி பெற்றது நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இதைத் தொடர்ந்து, இதுபோன்ற போலிச் சான்றுகள், பொய்யான தகவல்கள் மூலம் குடிமைப் பணிகளில் இணைந்த மேலும் பலரைப் பற்றிய தகவல்கள் சமூக வலைத்தளங்கள் மூலம் வெளிவந்துகொண்டிருக்கின்றன.
வருமான வரம்பு
மண்டல் குழுவின் பரிந்துரையின்படி, மத்திய மற்றும் மாநில அரசின் கல்வி நிறுவனங்கள் மற்றும் மத்திய, மாநில அரசுப் பணிகளில் 27 சதவிகித இடங்கள் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்காக ஒதுக்கப்பட்டது. மண்டல் குழுவின் இந்த இடஒதுக்கீட்டு பரிந்துரையை நீக்க வலியுறுத்தி உச்சநீதிமன்றத்தில் இந்திரா சஹானி வழக்கு (1992) நடைபெற்றது. இந்த வழக்கில் உச்சநீதிமன்றம் மண்டல் குழுவின் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இடஒதுக்கீட்டு பரிந்துரை செல்லும் என தீர்ப்பளித்தது. ஆனால், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பில் பொருளாதார ரீதியாக நல்ல நிலையில் இருப்பவர்கள் இந்த இடஒதுக்கீட்டின் கீழ் வராமலிருப்பதை உறுதி செய்ய வேண்டும் எனவும் உச்சநீதிமன்றம் தெரிவித்தது. அவ்வாறு செய்வதன் மூலம், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பில் உண்மையில் யாருக்கு இடஒதுக்கீடு தேவைப்படுகிறதோ அவர்கள் பயனடைவார்கள்.
உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்பையடுத்து, மத்திய அரசு இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பில் பொருளாதார ரீதியில் மேம்பட்ட நிலையில் (creamy layer) இருப்பவர்களைக் கண்டறிய நீதிபதி ராம் நந்தன் பிரசாத் தலைமையிலான குழுவினை அமைத்தது. இந்த குழுவின் பரிந்துரையின்படி, இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இடஒதுக்கீட்டின் கீழ் பயன்பெற ஒருவரின் பெற்றோர் முதல் வகுப்பு (குரூப் ஏ) மற்றும் இரண்டாம் வகுப்பு (குரூப் பி) பதவிகளில் நேரடியாக நியமிக்கப்பட்டிருக்கக் கூடாது. அதேபோல அவர்கள் அரசியலமைப்பு பதவிகளான குடியரசுத் தலைவர், குடியரசுத் துணைத் தலைவர், ஆளுநர் போன்ற பதவிகளில் இருக்கக் கூடாது. பெற்றோர் அரசு அதிகாரிகளாக இல்லாமல், அவர்களது ஆண்டு வருமானம் 8 லட்சத்துக்குள் இருக்கும்பட்சத்தில், அவர்களின் குழந்தைகள் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இடஒதுக்கீட்டைப் பெறலாம்.
பொருளார அடிப்படையிலான இடஒதுக்கீட்டு முறை கடந்த 1993 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டபோது, ஆண்டு வருமான வரம்பு ரூ.1 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டது. அதன்பின் 2004 ஆம் ஆண்டு இந்த வரம்பு ரூ. 2.5 லட்சமாகவும், 2008 ஆம் ஆண்டு ரூ.4.5 லட்சமாகவும் மாற்றியமைக்கப்பட்டது. அதன்பின் 2013 ஆம் ஆண்டு இந்த வரம்பு ரூ.6 லட்சமாகவும், 2017 ஆம் ஆண்டு ரூ.8 லட்சமாகவும் திருத்தியமைக்கப்பட்டது. இந்த வருமான வரம்பை நகர்ப்புறங்களுக்கு ரூ.12 லட்சமாகவும், கிராமப்புறங்களுக்கு ரூ. 9 லட்சமாகவும் உயர்த்தக் கோரி மத்திய அரசிடம் கடந்த 2011 ஆம் ஆண்டு முதல் கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது. அதேபோல வருமான வரம்பு ஒவ்வொரு 3 ஆண்டுகளுக்கும் திருத்தியமைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைக்கப்பட்டது.
பயிற்சி ஐஏஎஸ் அதிகாரியான பூஜா கேத்கரின் தந்தை (திலீப் கேத்கர்) கோடீஸ்வரராக இருந்தும், அதனை மறைத்து வருமான வரம்பு சலுகையை அவர் தவறாகப் பயன்படுத்தி ஆட்சியராக தேர்வாகியுள்ளார். திலீப் கேத்கர், மகாராஷ்டிர அரசில் முதல் நிலை அதிகாரியாக பணியாற்றியுள்ளார். அவர் அண்மையில் நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் அகமதுநகர் தொகுதியில் வேட்பாளராக போட்டியிட முயற்சி செய்துள்ளார். தேர்தல் பிரமாணப் பத்திரத்தில் அவரின் சொத்து மதிப்பு ரூ. 40 கோடி எனவும், அவரது ஆண்டு வருமானம் ரூ. 49 லட்சம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
பூஜா கேத்கரின் பெயரில் மகாராஷ்டிரத்தில் ரூ.22 கோடி மதிப்பிலான அசையா சொத்துகள் இருப்பதாக அவரே கடந்த ஆண்டு தெரிவித்துள்ளார். மகாராஷ்டிர அரசுப் பணிக்கான இடஒதுக்கீட்டில் பட்டியலினத்தவருக்கு 13 சதவிகித இடஒதுக்கீடும், பழங்குடியின மக்களுக்கு 7 சதவிகிதமும், இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு 19 சதவிகிதமும், பிற்படுத்தப்பட்ட சிறப்பு வகுப்பினருக்கு 2 சதவிகித இடஒதுக்கீடும் வழங்கப்படுகிறது. பழங்குடியின பிரிவு டி-யைச் சேர்ந்த (வஞ்சாரி பழங்குடியினர்) பூஜா கேத்கர் மத்திய அரசின் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் பட்டியலில் இடம்பெறுகிறார்.
ஐஏஎஸ் தேறி பயிற்சிக்காலத்தில் பூஜா கேத்கர் புணேவில் உள்ள இந்திய விளையாட்டு கழகத்தின் உதவி இயக்குநராக பணிபுரிந்து வந்துள்ளார். அப்போது அங்குள்ளவர்களிடம் மோதல் ஏற்பட அவர் பணியிட மாற்றம் செய்யப்பட்டார். அதன் பிறகே, பூஜா கேத்கர் முறைகேட்டில் ஈடுபட்டிருப்பது வெளிச்சத்துக்கு வரத் தொடங்கியது.
பூஜா கேத்கர் செய்தது என்ன?
கடந்த 2019 ஆம் ஆண்டு குடிமைப் பணித் தேர்வில் பங்கேற்ற பூஜா கேத்கர் அவரது பெயரை கேத்கர் பூஜா திலீப்ராவ் எனக் குறிப்பிட்டுள்ளார். அந்த தேர்வின் தரவரிசைப் பட்டியலில் அவர் 11,244-வது இடத்தை பிடித்தார். இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, பூஜா மனோரமா திலீப் கேத்கர் என்ற பெயருடன் அவர் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பு மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான இடஒதுக்கீட்டை கோரினார். 40 சதவிகிதத்துக்கும் குறைவான குறைபாட்டுக்குரிய மாற்றுத் திறனாளிகளுக்கான இடத்தை அவர் கோரினார். அவருக்கு பார்வைக் குறைபாடு இருப்பதாக சான்றிதழில் கோரப்பட்டது. அடுத்த இரண்டு ஆண்டுகளில் பல்வேறு விதமான குறைபாடுகள் இருப்பதாக பூஜா கேத்கர் சான்றிதழ்கள் பெற்றுள்ளார். அதன்படி, முழங்காலில் 7 சதவிகித குறைபாடு இருப்பதாகவும், மனதளவில் பாதிப்பு இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. பல்வேறு விதமான குறைபாடுகளுடன் தேர்வில் பங்கேற்பவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு. இதன் மூலம், கடந்த 2022 ஆண்டு யுபிஎஸ்சி தேர்வில் பூஜா கேத்கர், இந்திய அளவில் 821-வது இடம் பிடித்துள்ளார்.
குடிமைப் பணிகளுக்கான தேர்வில் 5 வகையான மாற்றுத் திறனாளிகளுக்கு இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது. அவை, பார்வைக் குறைபாடு மற்றும் மங்கலான பார்வை, காது கேளாமை மற்றும் செவித்திறன் குறைபாடு, நடமாட்டத்தில் குறைபாடு, கற்றல் குறைபாடு மற்றும் மனநிலைக் குறைபாடு, ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட குறைபாடுகள் உடையோருக்கு இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது.
கடந்த 2007 ஆம் ஆண்டு மருத்துவக் கல்லூரியில் சேர்வதற்கான சான்றிதழின்படி, பூஜா கேத்கர் உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் நன்றாக இருக்கிறார் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. அதன்பின், அவர் குறைபாடு உள்ளதாகக் கூறி சான்றிதழ்களை பெற்றுள்ளார். போலியான சான்றிதழ்களைப் பெறுவதற்காக அவர் பல்வேறு முகவரிகளைப் பயன்படுத்தியுள்ளார். அதில் அவரது அம்மாவின் பெயரில் இயங்கி வந்த மனோரமா தொழிற்சாலையின் முகவரியும் அடங்கும்.
முறைகேடு
கடந்த 2018 ஆம் ஆண்டு பூஜா கேத்கருக்கு அகமதுநகர் மாவட்ட மருத்துவமனை நிர்வாகம் மாற்றுத்திறனாளி என சான்றிதழ் அளித்துள்ளது. மாற்றுத் திறனாளி என்பதை உறுதி செய்ய தில்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் 6 முறை அழைக்கப்பட்டும் ஒருமுறை கூட பூஜா கேத்கர் செல்லவில்லை. அகமதுநகர் மருத்துவமனையில் மாற்றுத்திறனாளி என சான்றிதழ் பெறுவதற்காக அவர் ரூ.30,000 லஞ்சமாக கொடுத்துள்ளார்.
யுபிஎஸ்சி விதிமுறையும் நடவடிக்கைகளும்
மாற்றுத்திறனாளிகளுக்கான இடஒதுக்கீட்டைக் கோர ஒருவருக்கு கண்டிப்பாக உடலில் குறைந்தது 40 சதவிகித குறைபாடு இருக்க வேண்டும் என யுபிஎஸ்சி கூறுகிறது. அப்படி இருக்கும் தேர்வர்களுக்கு தேர்வு எழுதும் வயது வரம்பு மற்றும் தேர்வு எழுத அனுமதிக்கப்படும் வாய்ப்புகளும் கூடுதலாக வழங்கப்படும். மாற்றுத்திறனாளி என போலியாக பெற்ற சான்றிதழ்களைப் பயன்படுத்தி பூஜா கேக்தர் தேர்வு எழுதும் வாய்ப்புகளை அதிகப்படுத்தியுள்ளார். தேர்வு எழுதும் வாய்ப்புகளை அதிகப்படுத்துவதற்காக பூஜா கேத்கர் போலிச் சான்றிதழ்களை தயார் செய்து முறைகேட்டில் ஈடுபட்டதை யுபிஎஸ்சி கண்டுபிடித்தது. இதன்மூலம், யுபிஎஸ்சி தேர்வில் பூஜா கேத்கர் தேர்ச்சி பெற்றது செல்லாது என அறிவித்ததுடன், அவர் எதிர்காலத்தில் யுபிஎஸ்சி தேர்வில் பங்கேற்கவும் தடை விதித்தது. இந்த சம்பவம் தொடர்பாக தில்லி காவல் துறையிடம் யுபிஎஸ்சி சார்பில் புகாரளிக்கப்பட்டுள்ளது. இந்த புகாரின் அடிப்படையில் தில்லி காவல் துறை விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
வருமானத்தைக் குறைத்துக் காட்டியது எப்படி?
யுபிஎஸ்சி தேர்வின் நேர்காணலில் பூஜா கேத்கர், தனது பெற்றோர் பிரிந்துவிட்டதாகவும், அவரும் அவருடைய அம்மாவும் ஒன்றாக வசித்து வருவதாகவும் கூறியது வைரலானது. பெற்றோர் ஒன்றாக இருக்கும்போது, ஆண்டு வருமானத்தை குறைத்துக் காட்டுவதற்காக பூஜா கேத்கர் இவ்வாறு செய்தது அம்பலமானது. பூஜா கேத்கரின் பெற்றோர் ஒன்றாக வசித்து வருகிறார்கள் என்பது அவரது தந்தையின் தேர்தல் பிரமாணப் பத்திரத்திலிருந்து தெளிவாகத் தெரிகிறது. அவரது தேர்தல் பிரமாணப் பத்திரத்தில் சொத்துகள் மற்றும் நகைகள் அவரது மனைவி பெயரில் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். மேலும், வருமானம் சிலவற்றை மனைவி மற்றும் தனது பெயரில் இணைந்து இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சிக்கியது எப்படி?
பயிற்சி ஐஏஎஸ் அதிகாரியாக பணியாற்றி வந்த பூஜா கேத்கரை அவரது மருத்துவப் பரிசோதனை மற்றும் மாற்றுத்திறனாளி சான்றிதழ் சரிபார்ப்பை முடிக்க யுபிஎஸ்சி வலியுறுத்தியது. ஆனால், அவர் மருத்துவ சான்றிதழ் சரிபார்ப்புக்கு செல்லவில்லை. இதனையடுத்து, மருத்துவ சான்றிதழ் சரிபார்ப்புகளை முடிக்கவில்லையென்றால், பூஜா கேத்கரின் யுபிஎஸ்சி தேர்ச்சி ரத்து செய்யப்படும் என யுபிஎஸ்சி தரப்பில் எச்சரிக்கப்பட்டது. இந்த நிலையில், பூஜா கேத்கர் மத்திய நிர்வாக தீர்ப்பாயத்திடம் இந்த சம்பவம் தொடர்பாக நிவாரணம் தேட அங்கும் அவருக்கு ஏமாற்றமே மிஞ்சியது. இதற்கிடையில், அவர் லால் பகதூர் சாஸ்திரி தேசிய அகாதெமியில் பயிற்சியை முடித்து, மகாராஷ்டிரத்தில் பயிற்சி ஐஏஎஸ் அதிகாரியாக நியமிக்கப்பட்டார். முதலில் அவர் மகாராஷ்டிரத்தில் விதர்பாவில் உள்ள பந்த்ராவில் பணியமர்த்தப்பட்டார். ஆனால், அங்கும் முறைகேட்டில் ஈடுபட்டு தனது சொந்த நகரமான புணேவுக்கு ஒரே நாளில் பணியிட மாற்றம் வாங்கிச் சென்றுள்ளார். யுபிஎஸ்சி விதிமுறைப்படி முதல் முறையாக பயிற்சி ஐஏஎஸ் அதிகாரியாக நியமிக்கப்படும் ஒருவர் அவரது சொந்த ஊரில் நியமிக்கப்படக் கூடாது. ஆனால், பூஜா கேத்கர் ஒரே நாளில் சொந்த நகரமான புணேவுக்கு பணியிட மாற்றம் பெற்று முறைகேட்டில் ஈடுபட்டுள்ளார்.
யுபிஎஸ்சி தேர்வு எழுதுவதில் தொடங்கி வருமான வரம்பு, போலிச் சான்றிதழ்கள், பெற்றோர் பிரிவு, மாற்றுத்திறனாளி இடஒதுக்கீடு மற்றும் சொந்த நகரத்துக்குப் பணியிட மாற்றம் என அனைத்திலும் பூஜா கேத்கர் முறைகேட்டில் ஈடுபட்டிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முறைகேட்டில் ஈடுபட்ட அவருக்கு யுபிஎஸ்சி தக்க தண்டனையை வழங்கியுள்ளது. இருப்பினும், இதுபோன்ற முறைகேடுகளை ஆரம்ப கட்டத்திலேயே கண்டுபிடித்து தக்க நடவடிக்கை எடுத்தால் நேர்மையான தேர்வர்களின் வாழ்க்கை பாதிக்கப்படாமல் இருக்கும்.
இந்த நிலையில், பூஜா கேத்கரைத் தொடர்ந்து, யுபிஎஸ்சி தேர்வுகளில் முறைகேடுகளைச் செய்து தேர்ச்சி பெற்றுப் பதவியில் இருப்பவர்கள் எனத் தெரிவித்து சான்றுகளுடன் சமூக ஊடகங்களில் செய்திகள் வெளிவரத் தொடங்கியுள்ளன, கிணறு வெட்டப் பூதம் கிளம்பியதைப் போல!
தமிழில் - இரா. தமிழ்வேந்தன்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.