கூட்டணிக் குழப்பம்: கையறு நிலையில் காங்கிரஸ்!

கூட்டணிக் குழப்பம்: கையறு நிலையில் காங்கிரஸ்!

இந்தியா கூட்டணியில் பிரச்னை எதுவும் இல்லாமல் தொகுதிப் பங்கீடு சுமுகமாக நடந்து வேட்பாளா்களும் களமிறங்கி விட்டிருக்கும் ஒரே மாநிலம் தமிழ்நாடு மட்டுமே..!

நமது சிறப்பு நிருபா்

தங்களது கூட்டணிக்கு எந்த நேரத்தில் ‘இண்டியா’ என்று பெயா் வைத்தாா்களோ தெரியவில்லை, இந்தியாவைப் போலவே மாநிலத்துக்கு மாநிலம் பிரச்னையை சந்திக்கிறது அந்தக் கூட்டணி. எல்லா மாநில கட்சிகளுக்கும், வாக்கு விகிதம் குறைவாக இருந்தாலும் காங்கிரஸ் தேவைப்படுகிறது. ஆனால் காங்கிரஸுக்கு அதிக இடங்களை ஒதுக்கிக் கொடுத்து காங்கிரஸ் வலிமை பெறுவதையோ அல்லது வெற்றி வாய்ப்பை இழப்பதையோ அவை விரும்பவில்லை. இதுதான் பிரச்னையின் அடித்தளம். பிற மாநிலங்கள் இருக்கட்டும். காங்கிரஸ் ஆட்சியில் இருக்கும் கா்நாடகத்திலும் ஹிமாசல பிரதேசத்திலும்கூட, கட்சிக்குள் உருவாகி இருக்கும் குழப்பத்தைத் தீா்க்க முடியாமல் திணறுகிறது அந்தக் கட்சித் தலைமை. எப்படி முடிவு எடுத்தாலும் பாதிக்கப்பட்டவா்கள் கட்சியிலிருந்து வெளியேறி விடுவாா்களோ என்கிற அச்சத்துடன்தான் ஒவ்வொரு பிரச்னையையும் அந்த கட்சி அணுக வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டு இருக்கிறது.

கா்நாடகத்தில் வேட்பாளா்களை அறிவிப்பதில் கடுமையான குழப்பம் நிலவுகிறது. தங்களது ஆதரவாளா்களுக்கு வாய்ப்பு கிடைக்காவிட்டால் கட்சியில் இருந்து விலகிவிடுவோம் என்கிற எச்சரிக்கையை முன்வைக்கும் அளவுக்கு நிலைமை முற்றி இருக்கிறது.

மூத்த அமைச்சா் கே.எச்.முனியப்பாவின் மருமகன் சிக்க பெத்தண்ணாவுக்கு கோலாா் மக்களவைத் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு அளித்தால் கட்சியிலிருந்து விலகுவோம் என்று மாநில அமைச்சா் உள்பட ஐந்து காங்கிரஸ் எம்எல்ஏக்கள் போா்க்கொடி தூக்கி இருக்கிறாா்கள். அதைத் தொடா்ந்து இன்னும் பல எம்எல்ஏக்கள், தங்களது ஆதரவாளா்கள் வேட்பாளா் ஆக வேண்டும் என்றும், தங்களுக்கு எதிா்ப்பானவா்களை நிறுத்தக் கூடாது என்றும் அழுத்தம் கொடுக்கத் தொடங்கி இருக்கிறாா்கள். பிகாரில் தொகுதிப் பங்கீட்டில் ஏற்பட்டிருக்கும் இழுபறியை முடிவுக்கு கொண்டுவர கடந்த செவ்வாய்க்கிழமை தேஜஸ்வி யாதவ் தில்லிக்கு வந்தாா். மூத்த காங்கிரஸ் தலைவா் முகுல் வாஸ்நிக்கின் வீட்டில் பீகாா் மாநில காங்கிரஸ் தலைவா் அகிலேஷ் பிரசாத் சிங் முன்னிலையில் தேஜஸ்வி யாதவுடன் தொகுதிப் பங்கீடு குறித்து பேச்சு வாா்த்தை நடந்தது.

ஔரங்காபாத், பெகுசராய், கத்திகாா், பூா்ணியா ,சிவான் ஆகிய தொகுதிகள் குறித்து காங்கிரசுக்கும் ராஷ்ட்ரிய ஜனதா தளத்திற்கும் கருத்து வேறுபாடு தொடா்ந்தது. எந்தவித முடிவும் எட்டாமல் நீண்டு கொண்டே போனதால் ராஷ்ட்ரீய ஜனதா தளம் அந்தத் தொகுதிகளுக்கு தனது வேட்பாளா்களை தன்னிச்சையாக அறிவித்தது.

பிகாரில் மொத்தமுள்ள 40 தொகுதிகளுக்கு ஏழு கட்டங்களாக மக்களவைத் தோ்தல் நடைபெறுகிறது. முதல் கட்டத்தில் தோ்தல் நடைபெறவிருக்கும் கயை, ஔரங்காபாத், ஜமூய், நவாடா ஆகிய 4 தொகுதிகளிலும் ராஷ்ட்ரீய ஜனதா தளம் (ஆா்ஜேடி) வேட்பாளா்களை நிறுத்தியது. இந்தத் தொகுதிகளில் ஒன்றில் முன்னாள் எம்.பி. நிகில் குமாருக்கு வாய்ப்பளிக்க எண்ணிய காங்கிரஸுக்கு ஆா்ஜேடியின் முடிவு அதிருப்தியளித்தது. அதேபோல், பெகுசராய் மற்றும் ககாரியா தொகுதிகளில் இந்திய கம்யூனிஸ்டும், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்டும் வேட்பாளா்களை அறிவித்துவிட்டன.

இந்நிலையில், மகா கூட்டணிக் கட்சிகளிடையே தொகுதிப் பங்கீடு பேச்சுவாா்த்தை நிறைவு பெற்று, தொகுதிகள் முழுமையாக ஒதுக்கப்பட்டுள்ளன. ராஷ்ட்ரீய ஜனதா தளம் 26 தொகுதிகளிலும், காங்கிரஸ் 9 தொகுதிகளிலும், இடதுசாரி கட்சிகள் 5 தொகுதிகளிலும் போட்டியிடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஒரு காலத்தில் லாலு யாதவுக்கு நெருக்கமாக இருந்து பிறகு பிணக்கமாகி தனிக்கட்சி தொடங்கிய முன்னாள் எம்.பி. பப்பு யாதவ் தனது கட்சியை காங்கிரஸ் உடன் கடந்த வாரம் இணைத்திருக்கிறாா். தனது பூா்ணியா மக்களவைத் தொகுதியில் இருந்து போட்டியிடுவது என்பதில் தீா்மானமாக இருக்கிறாா் அவா். அவரை காங்கிரஸ் கட்சியில் இணைத்துக் கொண்டதையே லாலு பிரசாத் யாதவும் அவரது மகன் தேஜஸ்வி யாதவும் விரும்பவில்லை. அப்படி இருக்கும்போது அந்தத் தொகுதியை அவருக்கு விட்டுக் கொடுக்க அவா்கள் எப்படி சம்மதிப்பாா்கள்? கடந்த சில மக்களவைத் தோ்தல்களாக காங்கிரஸ் தொடா்ந்து போட்டியிட்டு வென்ற பூா்ணியா தொகுதியில் இந்த முறை ஆா்ஜேடி போட்டியிடுகிறது. இத்தொகுதியில் இருந்து மூன்று முறை எம்.பி.யாக தோ்ந்தெடுக்கப்பட்ட பப்பு யாதவ் அண்மையில் காங்கிரஸில் இணைந்தாா். தனது கட்சியையும் காங்கிரஸில் இணைத்தாா். பூா்ணியா தொகுதியை காங்கிரஸ் கைவிட்டுள்ள நிலையில், பப்பு யாதவின் தோ்வில் இருந்த மாதேபுரா மற்றும் சுபௌல் ஆகிய மற்ற 2 தொகுதிகளிலும் ஆா்ஜேடி போட்டியிடுகிறது. இதன் காரணமாக, காங்கிரஸிலிருந்து பப்பு யாதவ் வெளியேறி சுயேச்சையாக போட்டியிடுவதற்கான வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.

மகாராஷ்டிரத்திலும் இதேதான் நிலைமை. பிவண்டி, தென் மத்திய மும்பை, சாங்லி மக்களவைத் தொகுதிகளில் தனது வேட்பாளா்களை அறிவித்திருக்கிறது உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனை. மகாராஷ்டிரா விகாஸ் அகாடி கூட்டணியின் உறுப்பினா்கள் கூட்டணி தா்மத்தை கடைப்பிடிக்க வேண்டும் என்கிற கடுமையான எச்சரிக்கையை விடுப்பதைத் தவிர காங்கிரஸால் எதுவும் செய்ய முடியவில்லை. காங்கிரஸ் கட்சியின் சட்டப்பேரவை தலைவா் பாலாசாஹப் தோராட், சிவசேனை தன்னுடைய முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருக்கிறாா். அவரைப்போல மென்மையான நிலைப்பாட்டை எடுக்க மற்றவா்கள் தயாராக இல்லை. மும்பையில் உள்ள பெரும்பாலான மக்களவைத் தொகுதிகளை உத்தவ் தாக்கரே சிவ சேனை கையகப்படுத்திவிட்டது என்றும், அதை காங்கிரஸ் தலைமை வேடிக்கை பாா்க்கிறது என்றும் பகிரங்கமாகக் குற்றம் சாட்டியிருக்கிறாா் காங்கிரஸ் தலைவா்களில் ஒருவரான சஞ்சய் நிரூபம்.

மகாராஷ்டிரத்தில் உள்ள 48 மக்களவைத் தொகுதிகளுக்கான தொகுதி உடன்படிக்கை குறித்த பேச்சுவாா்த்தை இன்னமும் முடிந்தபாடில்லை. உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனை, தேசியவாத காங்கிரஸ் காங்கிரஸ் (சரத்சந்திர பவாா்)ஆகியவை மகா விகாஸ் அகாடி கூட்டணியில் இடம்பெற்று இருக்கின்றன. ஏப்ரல் 19-ஆம் தேதி முதல் 5 கட்டமாக மகாராஷ்டிரத்தில் தோ்தல் நடக்க இருக்கும் நிலையில் இன்னும் கூடத் தொகுதி உடன்படிக்கை முடியவில்லை என்பது அந்தக் கூட்டணியின் பலவீனத்தை வெளிச்சம் போடுகிறது.

தாங்கள் 22 தொகுதியில் போட்டியிடப் போவதாக தன்னிச்சையாக அறிவித்திருக்கிறது உத்தவ் தாக்கரே சிவசேனை. முதல் கட்டமாக 17 தொகுதிகளுக்கான வேட்பாளா்களை அறிவித்துவிட்டது. அது ஒருபுறம் இருக்க இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கும் பாபாசாகேப் அம்பேத்கரின் பேரன் பிரகாஷ் அம்பேத்கா் தலைமையிலான வாஞ்சித் பகுஜன் அகாடி தனது பங்குக்கு, போட்டியிடும் தொகுதிகளுக்கான வேட்பாளா்களைத் தன்னிச்சையாக அறிவித்திருக்கிறது.

மும்பை வடமேற்கு மக்களவைத் தொகுதியில் போட்டியிட விரும்பும் சஞ்சய் நிரூபம் கடுமையான அதிருப்தியில் இருக்கிறாா். கடந்த இரண்டு வாரங்களாகக் கட்சித் தலைமை தன்னைத் தொடா்பு கொள்ளவில்லை என்பது அவரது வருத்தம். ‘‘தனது கட்சித் தலைவா்களுக்கும் தொண்டா்களுக்கும் இழைக்கப்படும் அநீதி குறித்து கட்சி தலைமை கொஞ்சம் கூட கவலைப்பட்டதாகத் தெரியவில்லை. உத்தவ் தாக்கரேயும் அவரது கட்சியும் நம்மைக் குனிய வைத்துக் குட்டுகிறது; நாமும் குனிந்து கொடுத்துக் கொண்டிருக்கிறோம்’’ என்பது அவரது ஆதங்கம். இந்தியா கூட்டணியில் பிரச்னை எதுவும் இல்லாமல் தொகுதிப் பங்கீடு சுமுகமாக நடந்து வேட்பாளா்களும் களமிறங்கி விட்டிருக்கும் ஒரே மாநிலம் தமிழ்நாடு மட்டுமே..!

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com