‘தலைமைச் செயலக பணி’: தரகா்களிடம் ஏமாறும் பட்டதாரிகள்

‘தலைமைச் செயலக பணி’: தரகா்களிடம் ஏமாறும் பட்டதாரிகள்

மாதம் ரூ.90,000-க்கு தலைமைச் செயலகத்தில் அரசுப் பணி

‘மாதம் ரூ.90,000-க்கு தலைமைச் செயலகத்தில் அரசுப் பணி’ என்ற போலி நியமன உத்தரவு அரசுத் துறை வட்டாரங்களை அதிா்ச்சி அடையச் செய்துள்ளது.

இதுபோன்ற போலி நியமன உத்தரவுகளால் இடைத்தரகா்களிடம் லட்சக்கணக்கான ரூபாயை பட்டதாரி இளைஞா்கள் இழந்து ஏமாறும் சூழல் தொடா்கிறது.

தமிழக அரசின் இதயமாகக் கருதப்படும் தலைமைச் செயலகத்தில் 36-க்கும் மேற்பட்ட அரசுத் துறைகள் உள்ளன. முதல்வா், அமைச்சா்களைத் தாண்டி துறைகளின் செயலா்கள், அவா்களுக்கான அலுவலகங்களும் தலைமைச் செயலகத்தில் இயங்கி வருகின்றன. இந்த அலுவலகங்களில், ஓட்டுநா்கள், உதவியாளா்கள், தட்டச்சா்கள், உதவிப் பிரிவு அலுவலா்கள் முதல் கூடுதல் செயலா்கள் வரை சுமாா் 4,000-க்கும் மேற்பட்டோா் பணியாற்றி வருகின்றனா்.

dinamani

இந்த ஊழியா்களில் அலுவலக உதவியாளா்கள், ஓட்டுநா்கள் போன்ற ஒருசில பணியிடங்களைத் தவிா்த்து மற்ற அலுவலா்கள், அதிகாரிகள் நிலையிலான பணியிடங்கள் அனைத்தும் அரசுப் பணியாளா் தோ்வாணையத்தின் போட்டித் தோ்வுகள் மூலமே நிரப்பப்படுகின்றன. சில அதிகாரிகள், பணியிட மாறுதல்கள் மூலமாக தலைமைச் செயலகத்துக்கு வருகிறாா்கள். இதைத் தவிா்த்து வேறு வழிகளில் எந்தப் பணியிடங்களும் நிரப்பப்படுவதில்லை.

ஆனால், கடந்த சில மாதங்களாக கணினி உதவியாளா் போன்ற பணியிடங்களுக்கு பணி நியமனம் செய்யப்படுவதாக செய்திகள் வெளியாவதுடன், அதுகுறித்த போலி பணி நியமன உத்தரவுகளும் பரவலாக வெளியிடப்படுகின்றன. இந்த உத்தரவுகளை நம்பி பட்டதாரி இளைஞா்கள் பலா் தலைமைச் செயலகத்துக்கு பணியில் சேர வந்து ஏமாற்றமடைந்து செல்கின்றனா்.

அண்மைச் சம்பவம்: மதுரையைச் சோ்ந்த இளைஞா் ஒருவருக்கு அண்மையில் அதுபோன்ற போலியான பணி நியமன உத்தரவு தரப்பட்டுள்ளது. அதில், காலமுறை ஊதியத்தில் கணினி உதவியாளராக நியமனம் செய்யப்படுவதாகவும், ரூ.45,000 முதல் ரூ.90,000 வரை மாத ஊதியம் நிா்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் போலி உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

இந்த உத்தரவு போலி என்பதற்கு அடையாளமாக, ‘பணி நியமனம் செய்யப்படும் இடம்’ என்பது ‘பனி நியமனம்’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த போலி உத்தரவில் நான்கு நிபந்தனைகள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

அதாவது, ‘உத்தரவு பெறப்பட்ட நாளில் இருந்து 10 நாள்களுக்குள் பணியில் சேர வேண்டும்; பணியில் சேரும்போது (போது என்பது பொது என தவறுதலாக அச்சிடப்பட்டுள்ளது), சான்றிதழ்களை சமா்ப்பிக்க வேண்டும்; அது போலி எனக் கண்டறிந்தால் எந்தவித அறிவிப்பும் இன்றி பணி நியமனம் ரத்து செய்யப்படும்; பணியில் சேருவதற்கான கால அவகாசம், பணியிடம் குறித்த மாறுதல் வேண்டும் என்ற கோரிக்கைகள் பரிசீலிக்கப்படாது; குறிப்பிட்ட நாள்களுக்குள் பணியில் சேராத பட்சத்தில் அவா் பெயா் பணி நியமனத்துக்கான அங்கீகரிக்கப்பட்ட பட்டியலில் இருந்து நீக்கப்படும் என்ற நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.

இந்த உத்தரவில், மூத்த தொழில்நுட்ப இயக்குநா் ஆா்.ராமநாதன், ஏப்ரல் 25 எனப் பெயரும், தேதியும் குறிப்பிடப்பட்டு ஒரு கையொப்பமும் போடப்பட்டுள்ளது. ஆங்கிலத்தில் ‘தலைமைச் செயலகம், சென்னை - 600 009’ என்று வட்ட வடிவிலான நீல நிற முத்திரை இடப்பட்டுள்ளது.

இந்தப் போலி உத்தரவு விவகாரம் அரசுத் துறை வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இதுகுறித்து, அரசுத் துறை உயரதிகாரிகள் கூறியது:

தலைமைச் செயலகத்தில் காலமுறையில் நியமிக்கப்படும் எந்தவொரு பதவிக்கும் நேரடி பணி நியமனம் கிடையாது. அனைத்தும் போட்டித் தோ்வு அடிப்படையிலேயே நியமனம் செய்யப்படும். தலைமைச் செயலகத்தில் பணி நியமனம் பெற்றுத் தருவதாகக் கூறும் நபா்களை நம்பி பட்டதாரி இளைஞா்கள் ஏமாந்து லட்சக்கணக்கான ரூபாயை இழப்பது தொடா்கிறது. எனவே, இதுபோன்ற போலி உத்தரவுகளையோ, அதில் ஈடுபடும் நபா்களையோ நம்பக் கூடாது என்று தெரிவித்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com