கட்டணமில்லா சிகிச்சைக்கு அரசு காப்பீடு பெற விண்ணப்பிப்பது எப்படி?

குறைந்த வருவானம் பெறும் மக்கள் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் உயிர்காக்கும் மருத்துவ சிகிச்சைகளைக் கட்டணமில்லாமல் பெற வேண்டும்
அரசு காப்பீட்டு அட்டை
அரசு காப்பீட்டு அட்டை
Published on
Updated on
3 min read

நாளுக்குநாள் அதிகரித்து வரும் சுற்றுக்குழல், மாறி வரும் உணவுப் பழக்கவழக்கங்கள் இயற்கையின் மாற்றம் போன்ற பல காரணங்களால் மக்களுக்கு புது வகையான பல நோய்கள் வருகின்றன. நோய்கள் அதிகரிப்பதற்கு ஏற்றாற்போல் அதி நவீன சிகிச்சைகளை மக்கள் பெறமுடியாத நிலை உள்ளது. இதற்குக் காரணமாக இருப்பது மருத்துவ சிகிச்சைக்கான செலவு ஏழை எளிய மக்களுக்கு மட்டுமல்லாமல் நடுத்தர வர்க்கத்தினருக்கும் எட்டாக் கணியாக இருப்பதுதான்.

கலைஞர் காப்பிட்டு திட்டம்

குறைந்த வருவானம் பெறும் மக்கள் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் உயிர்காக்கும் மருத்துவ சிகிச்சைகளைக் கட்டணமில்லாமல் பெற வேண்டும் என்ற நோக்கத்தோடு அரசு யோசித்தபோது உருவானதுதான் உயிர் காக்கும் உயர் சிகிச்சைக்கான கலைஞர் மருத்துவக் காப்பீட்டு திட்டம். இதுவரை தனியார் மருத்துவமனைகளை அணுகி சிகிச்சை பெற முடியாமல் தவித்து வந்த ஏழை மக்கள் இந்த திட்டத்தின் கீழ் இலவசமாக சிகிச்சை பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது.

நாட்டிலேயே முதன் முறையாக மக்களுக்கு இலவச மருத்துவக் காப்பீடு அளிக்கும். உயிர் காக்கும் உயர் சிகிச்சைக்கான கலைஞர் காப்பிட்டு திட்டம் என்ற திட்டம் 2009 ஆம் ஆண்டு ஜூலை 23 ஆம் தேதி அமலுக்கு வந்தது.

இந்த திட்டத்தில் முதலில் ஒரு கோடி குடும்பங்கள் பயன்பெற்றனர். இந்தத் திட்டத்தையும் தமிழக அரசுக்காக ஸ்டார் ஹெல்த் இன்சூரன்ஸ் நிறுவனம் செயல்படுத்தி வந்தது. நாட்டிலேயே தமிழகத்தில்தான் முதல்முறையாக மாநிலம் தழுவிய அளவில் இலவச மருத்துவ காப்பீட்டு திட்டம் தொடங்கப்பட்டது.

முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்

இதனைத் தொடர்ந்து மத்திய அரசின் பிரதம மந்திரி மக்கள் ஆரோக்கிய திட்டமும், முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டமும் 2018 செப்டம்பர் 23 ஆம் தேதி முதல் ஒருங்கிணைந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது.

தற்போது இந்த திட்டம் யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனம் மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தமிழக முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தில் ஏறத்தாழ 2 கோடிக்கு மேலான குடும்பங்கள் பயன் பெற்று வருகின்றன.

காப்பீடு பெறுவது எப்படி

முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் பயன்பெற ஒரு குடும்பத்தின் ஆண்டு வருமானம் ரூ.1.20 லட்சம் அல்லது அதற்கும் குறைவாக உள்ள அனைத்து குடும்பங்களும் பயன்பெறலாம். பயன் பெற விரும்பும் நடுத்தர, ஏழை, எளிய மக்கள் வருமானம் குறித்து கிராம நிர்வாக அலுவலர் தரும் வருமானச் சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும்.

இது தவிர, தமிழக அரசு அமைத்துள்ள விவசாய தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகள் நல வாரியம், கட்டுமானத் தொழிலாளர்கள் நலவாரியம், பல்வேறு அமைப்புசாரா தொழிலாளர்கள் நலவாரியங்கள் உள்பட 25 நல வாரியங்களில் உறுப்பினர்களாக உள்ளவர்களும், அவர்களுடைய குடும்பத்தினரும் இத்திட்டத்தில் சேர தகுதியுடையவர்களாவர்.

விதவைகள், ஆதரவற்றவர்கள், முதியோர் ஓய்வூதியம் பெறுபவர்கள், முகாம் வாழ் இலங்கைத் தமிழர்கள் மற்றும் முகாம்களுக்கு வெளியே வசிக்கும் பதிவு செய்யப்பட்ட இலங்கைத் தமிழர்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு வருமான வரம்பு இல்லை.

தகுதிகள் என்ன?

அரசு காப்பீட்டுத் திட்டத்தில் இணைய விண்ணப்பிப்போர் 18 வயது நிறைவடைந்திருக்க வேண்டும். விண்ணப்பத்தாரரின் சட்டப்பூர்வமான மனைவி அல்லது கணவர், இவரது குழந்தைகள், இவர்களைச் சார்ந்த பெற்றோர் ஆகியோர் இந்த திட்டத்தில் சேர்ந்து பயன்பெற முடியும். இவர்களது பெயர்கள் குடும்ப அட்டையில் இடம் பெற்றிருக்க வேண்டும்.

எந்தெந்த நோய்களுக்கு சிகிச்சை

இலவச மருத்துவ சிகிச்சை திட்டம் என்றபோதிலும் இத்திட் டத்தின் கீழும், இதயம், சிறுநீரகம், மூளை, எலும்பு, நரம்பு, கண், இரைப்பை, குடல் காது, தொண்டை, மூக்கு, கருப்பை ஒட் டுறுப்பு உள்ளிட்ட 57 வகை யான நோய்களுக்கு சிகிச்சை பெற முடியும். அதிக செலவு பிடிக்கும் மாரடைப்பு, சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை, புற்றுநோய் சிகிச்சை, விபத்துக்களால் ஏற்படும் எலும்பு முறிவுகள், முடநீக்கு போன்றவற்றிற்கு தனியார் மருத்துவமனை களிலும் இலவசமாக சிகிச்சை பெறலாம்.

இதனால் இலவச சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைகளையே நாடி வந்த பொதுமக்கள், தற்போது அதே சிகிச்சையை தனியார் மருத்துவமனைகளிலும் இலவசமாக பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தில் சேர தகுதியற்றவர்கள் யார்?

அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்கள் மற்றும் தொழிலாளர் ஈட்டுறுதி திட்டத்தின் கீழ் உள்ளவர்கள் இந்த திட்டத்தின் கீழ் பதிவு செய்து கொள்ள தகுதியற்றவர்களாவர்.

யாரெல்லாம் பயன்பெற முடியும்?

இந்தத் திட்டம் பச்சிளம் குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அனைத்து வயதினரும் பயன்பெறும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில், 1,513 மருத்துவம் மற்றும் அறுவை சிகிச்சைகளும், 52 தோல் நோய் பரிசோதனைகளும் அதனுடன் தொடர்புடைய 11 தொடர் சிகிச்சைகளும் 8 உயர் அறுவை சிகிச்சைகளும் சேர்க்கப்பட்டுள்ளன. இந்த சிகிச்சைக்கான மருத்துவப் பட்டியல் www.cmchistn.com இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. அதனை பார்த்து தெரிந்துகொள்ளலாம்..

எங்கெல்லாம் சிகிச்சை பெற முடியும்?

இந்த திட்டத்தில் வரைமுறைப்படுத்தப்பட்ட சிகிச்சைகள் அனைத்தும் திட்டம் தொடங்கப்பட்ட நாள் முதல் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவமனைகள் அனைத்திலும் அளிக்கப்பட்டு வருகின்றன. தற்போது 854 அரசு மருத்துவமனைகள், 975-க்கும் மேற்பட்ட தனியார் மருத்துவமனைகள் என1830-க்கும் மேற்பட்ட மருத்துவமனைகளில் கட்டணமில்லா சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகின்றன.

விண்ணப்பிப்பது எப்படி?

முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு திட்ட உறுப்பினர் விண்ணப்பப் படிவத்தில் ஆண்டு வருமானம் ரூ.1.20 லட்சத்துக்கு கீழ் உள்ளது என்பதை கிராம நிர்வாக அலுவர் மூலமாக பூர்த்தி செய்து கையொப்பம் பெற்றிருக்க வேண்டும். இந்த சான்றிதழுடன் குடும்ப அட்டை, குடும்ப உறுப்பினர்கள் அனைவரது ஆதார் அட்டைகளின் நகல் ஆகியவற்றை இணைக்க வேண்டும். இவற்றை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்ட அட்டை வழங்கும் மையத்தில் அளித்து மருத்துவக் காப்பீட்டு அட்டையை(ஸ்மார்ட் கார்டு) பெற்றுக் கொள்ளலாம். அப்போது, குடும்ப அட்டை, ஆதார் அட்டைகளின் அசல் கையில் வைத்திருக்க வேண்டும்.

கட்டணமில்லா தொலைப்பேசி

இந்த திட்டத்தின் செயல்பாடுகளை தமிழக அரசின் தலைமைச் செயலாளர் தலைமையிலான உயர்மட்டக்குழு மாநில அளவில் கண்காணிக்கிறது. மாவட்ட அளவில் மாவட்ட ஆட்சியர் தலைமையிலான குழு இத்திட்டத்தின் செயல்பாடுகளை கண்காணிக்கிறது.

இந்த திட்டம் குறித்த விவரங்களை அறிவதற்கும், குறைகளைத் தெரிவிப்பதற்கும் 24 மணிநேரம் தொடர்ந்து செயல்படும் கட்டணமில்லா அழைப்பு மைய தொலைப்பேசி எண் 1800 425 3993 இல் தொடர்பு கொண்டு தெரிந்துகொள்ளலாம்.

மேலும் விரிவான விவரங்கள் பெறுவதற்கு www.cmchistn.com என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் சென்று தெரிந்துகொள்ளலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com