அடுத்த திட்டம் என்ன? கார்த்திகேயன் பாண்டியன் மனைவி சுஜாதா விருப்ப ஓய்வு!

ஒடிசாவில் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி கார்த்திகேயன் பாண்டியன் மனைவி சுஜாதாவும் விருப்ப ஓய்வு
சுஜாதா விருப்ப ஓய்வு
சுஜாதா விருப்ப ஓய்வு
Published on
Updated on
2 min read

ஒடிசாவின் முன்னாள் முதல்வர் நவீன் பட்நாயக்கின் வலது கை போல செயல்பட்டு வந்த தமிழகத்தைச் சேர்ந்த முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி வி.கே. பாண்டியன் மனைவியும் தனது ஐஏஎஸ் பதவியை ராஜிநாமா செய்திருப்பது பேசுபொருளாகியிருக்கிறது.

தமிழகத்தைப் போன்றே மொழி உணர்வு அதிகம் கொண்ட ஒடிசாவில், நவீன் பட்நாயக்கின் வலது கையாக ஒரு தமிழர் இருப்பதும், நவீன் பட்நாயக்குக்குப் பின், கார்த்திகேயன் பாண்டியன் எனப்படும் வி.கே. பாண்டியன், பிஜு ஜனதா தளத்தின் தலைமைப் பொறுப்புக்கும் வரலாம், மாநிலத்தையும் ஆளலாம் என்ற எண்ணத்திலேயே, ஐந்து முறை தொடர்ந்து ஆட்சியதிகாரத்தை வழங்கிய மக்கள், கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் பிஜு ஜனதா தளத்தை தோல்வியடைச் செய்திருக்கிறார்கள் என்றும் கூறப்படுகிறது.

எந்த வகையிலும், நவீன் பட்நாயக்கின் படுதோல்விக்கு, கார்த்திகேயன் பாண்டியன்தான் காரணம் என்று மறைமுகமாகவும் நேரடியாகவும் பேசப்பட்டு வந்த நிலையில், அதனை நவீன் பட்நாயக்கும் காதுகொடுத்துக் கேட்டிருப்பார்தானே.

ஒடிசா முன்னாள் முதல்வர் நவீன் பட்நாயக்குடன் கார்த்திகேயன் பாண்டியன்.
ஒடிசா முன்னாள் முதல்வர் நவீன் பட்நாயக்குடன் கார்த்திகேயன் பாண்டியன்.

தேர்தல் முடிவுக்குப் பிறகு, ஒட்டுமொத்தமாக அரசியலிலிருந்து விலகுவதாக வி.கே. பாண்டியன் அறிவித்தார். அதுநாள் முதல் அவர் ஊடகக் கண்களிலிருந்து மறைந்தே இருந்தார். அண்மையில், கோவை விமான நிலையத்தில், ஒடிசா முன்னாள் முதல்வர் நவீன் பட்நாயக்கும், வி.கே. பாண்டியனும் காணப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகின.

இந்த நிலையில்தான், ஒடிசா மாநில நிதித் துறையின் சிறப்புச் செயலர் பதவியிலிருந்து வி.கே. பாண்டியன் மனைவி சுஜாதா கார்த்திகேயன் விருப்ப ஓய்வு பெற்றுக்கொண்டு பதவியிலிருந்து விலகியிருக்கிறார். இவரது பெயரைக் கேட்கும்போது இவரும் ஒரு தமிழகராகத்தானே இருப்பார் என்று கருதலாம். ஆனால், இவர் ஒடிசா மாநிலத்தவர்.

2000ஆம் ஆண்டுப் பிரிவைச் சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரி வி.கே. பாண்டியன், 2023ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் அதாவது ஒடிசா பேரவைத் தேர்தலுக்கு முன்பு விருப்ப ஓய்வு எடுத்துக் கொண்டு பிஜு ஜனதா தளத்தில் சேர்ந்தார். இவரது மனைவி சுஜாதா ஒடிசாவைச் சேர்ந்தவர். தற்போது விருப்ப ஓய்வு எடுத்துள்ளார்.

நன்கறியப்பட்ட சுஜாதா

ஒரு ஐஏஎஸ் அதிகாரியாக சுஜாதா நன்கறியப்பட்டவர். மாவோயிஸ்ட் நிறைந்த மாவட்டங்களில் ஒன்றான சுந்தர்கர் மாவட்டத்தில் பல முன்னேற்றங்களைக் கொண்டு வந்தவர், மாணவிகளுக்கு சைக்கிள் வழங்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தினார், மதிய உணவில் முட்டை வழங்கும் திட்டம் என தமிழகத்தில் செயல்படுத்தப்படும் திட்டங்களை அறிமுகப்படுத்தி வெற்ற கண்டார்.

நவீன் பட்நாயக் ஆட்சிக்காலத்தில், பல்வேறு முக்கியத் துறைகளில் பணியாற்றி வந்த சுஜாதா, பேரவைத் தேர்தலின்போது, தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தபல் செல்வாக்குக் குறைந்த பதவிக்கு தூக்கியடிக்கப்பட்டார்.

அந்தப் பதவியை ஏற்காமல், 6 மாத விடுப்பில் சென்றிருந்த சுஜாதாவின் விடுப்பு நீட்டிப்பை பாஜக அரசு ஏற்காததால், தற்போது அவர் விருப்ப ஓய்வு அறிவித்துள்ளார்.

மிகவும் திறமை வாய்ந்தவரான சுஜாதா, சர்வதேச நிறுவனம் ஒன்றின் ஆலோசகராக பணியாற்றும் வாய்ப்பை ஏற்கலாம் அல்லது அவர் பிஜு ஜனதா தளத்தில் இணையலாம் என்று கூறப்படுகிறது.

படிப்பில் மிகவும் கெட்டிக்காரராக விளங்கிய சுஜாதாவைக் கொண்டு பிஜு ஜனதா தளம் தனது அடுத்தக்கட்ட நகர்வுகளை நகர்த்தும் என்றே பலரும் எதிர்பார்க்கிறார்கள். அடுத்த தேர்தலில் விட்ட இடத்தைப் பிடிக்க பிஜு ஜனதா தளம் சுஜாதாவை முன்னிறுத்தலாம் என்றும் கூறப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com