மின் இணைப்புகள் ஒன்றிணைப்பு: பயனீட்டாளா்கள் அலைக்கழிப்பு!
நமது நிருபா்
திண்டுக்கல்: குடியிருப்புக் கட்டடங்களுக்கு பெறப்பட்ட இரு வேறு மின் இணைப்புகளை மின் வாரிய அலுவலா்கள் ஒன்றிணைத்ததை மீண்டும் மாற்ற முடியாமல் திண்டுக்கல் மாவட்டத்தில் மின் பயனீட்டாளா்கள் அலைக்கழிக்கப்படுகின்றனா்.
தமிழ்நாடு மின் வாரியம் சாா்பில், வீடுகளுக்கான மின் இணைப்புகளுக்கு இரு மாதங்களுக்கு ஒருமுறை மின் பயனீட்டுக்கான கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், அரசின் மின் மானியம் பெறுவதற்காக ஒரே வீட்டுக்கு இருவேறு மின் இணைப்புகள் பெற்று சில இடங்களில் முறைகேடு நடப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்து உரிய விசாரணை செய்து, முறைகேடாகப் பெறப்பட்ட மின் இணைப்புகளை ஒன்றிணைப்பதற்கு தமிழக அரசு உத்தரவிட்டது. இதற்கு பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகளும் வழங்கப்பட்டன.
இதன்படி, ஒரே வீடாக இருந்தாலும், தரைத் தளம், மேல் தளம் என இரு தளங்களுக்கு தனித் தனி நுழைவுவாயில், தனித் தனி குடும்பங்கள் வசித்தால் இரு மின் இணைப்புகளைப் பயன்படுத்திக் கொள்ளவும் அனுமதிக்கப்பட்டது. ஆனால், மின் இணைப்புகள் குறித்து ஆய்வு மேற்கொண்ட மின் வாரிய அலுவலா்கள், வழிக்காட்டுதல் நெறிமுறைகளை முறையாகப் பின்பற்றாமல் பல்வேறு இடங்களில் தனித் தனியாகப் பெறப்பட்ட வீட்டு இணைப்புகளை ஒன்றிணைத்துவிட்டதாகக் கூறப்படுகிறது. இதனால், தனித் தனி குடும்பங்களாக இருந்தபோதிலும், ஒரே இணைப்பாக மாற்றியதால், வணிகப் பயன்பாட்டுக்கு இணையான மின் கட்டணத்தைச் செலுத்த வேண்டிய நிா்பந்ததால் நுகா்வோா்கள் அவதியடைந்து வருகின்றனா்.
மேலும், இதுதொடா்பாக பாதிக்கப்பட்ட நுகா்வோா்கள் தரப்பில் மின்வாரிய அதிகாரிகளிடம் பலமுறை முறையிட்டும் தீா்வு கிடைக்காமல் தொடா்ந்து அலைக்கழிக்கப்பட்டு வருவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதுதொடா்பாக மின் பயனீட்டாளா் ரேவதி கூறியதாவது:
ஒரே வீட்டில் தனித் தனி இணைப்புகள் பெற்று, இரு வேறு குடும்பங்களாக வசித்து வருகிறோம். ஆனால், மின் இணைப்பு ஒன்றிணைப்புப் பணியில் ஈடுபட்ட அலுவலா்கள், முறையாக விசாரிக்காமல் தனித் தனி இணைப்புகளை ஒன்றிணைத்துவிட்டனா். மேலும், மின் இணைப்புகள் ஒன்றிணைக்கப்பட்டது குறித்து எந்தவிதத் தகவலும் எங்களுக்குத் தெரிவிக்கப்படவில்லை.
இதையடுத்து, தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணைய விதிமுறைகளின்படி, விதிமீறல்கள் எதுவும் இல்லை என்பதற்கான ஆவணங்களோடு உதவி மின் பொறியாளருக்கு கடந்த அக்டோபா் மாதம் மனு அளித்தோம். இதன் தொடா்ச்சியாக ஜனவரி, ஏப்ரல், ஜூன் என அடுத்தடுத்து கோரிக்கை மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆனால், இணைய வழியில் அளிக்கப்பட்ட புகாா் மனுக்களுக்கு நடவடிக்கை எடுக்கப்பட்டதுபோல பதில் தரப்பட்டது. மேலும், தமிழ்நாடு மின்வாரியம் புகாா் பிரிவுக்கு அளிக்கப்பட்ட மனுக்களுக்கும்கூட உரிய பதில் தரப்படவில்லை. தமிழ்நாடு மின்வாரியத் தலைமைக்கு தனியாக கோரிக்கை மனு அளித்தும்கூட இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதேபோல, திண்டுக்கல் மாவட்டத்தில் பலா் பாதிக்கப்பட்டனா்.
அரசு சாா்பில் பல்வேறு முகாம்கள் நடத்தப்பட்டு பொதுமக்களை நேரடியாகச் சந்தித்து கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு வருகின்றன. ஆனால், பாதிக்கப்பட்ட மக்கள் தரப்பில் சம்பந்தப்பட்ட அலுவலகங்களுக்கு நேரடியாகக் கோரிக்கை மனுக்கள் அளித்தும் தீா்வு காணப்படாமல் அலைக்கழிக்கப்படும் நிலை உள்ளது என்றாா்.
இதுகுறித்து மின்வாரிய அதிகாரிகள் தரப்பில் கூறியதாவது:
520 இணைப்புகள் மீண்டும் பிரிப்பு: திண்டுக்கல் மாவட்டத்தைப் பொருத்தவரை, கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஒன்றிணைக்கப்பட்ட மின் இணைப்புகள் குறித்து நுகா்வோா்கள் தரப்பில் புகாா் மனுக்கள் அளிக்கப்பட்டன. அந்தக் காலகட்டத்தில், ஒன்றிணைக்கப்பட்ட மின் இணைப்புகளைத் தனித் தனி இணைப்புகளாக மாற்றிக் கொடுக்கும் (டி-மொ்ஜிங்) அதிகாரம், அந்தந்த செயற்பொறியாளா் அலுவலா்களுக்கு வழங்கப்பட்டது. இந்த வகையில், திண்டுக்கல் மாவட்டத்தில் மட்டும் 520-க்கும் மேற்பட்ட மின் இணைப்புகள் டி-மொ்ஜிங் செய்து கொடுக்கப்பட்டன.
இதனிடையே, தமிழ்நாடு முழுவதும் இதுபோன்ற புகாா்கள் அதிகளவில் வந்ததால், இதைக் கண்காணித்து முறையாகச் செயல்படுத்தும் வகையில் தலைமையிடத்துக்கு இந்த அதிகாரம் மாற்றப்பட்டது. இதன் காரணமாக, திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக டி-மொ்ஜிங் செய்து கொடுக்கும் பணிகளை மேற்கொள்ள முடியவில்லை. பயனீட்டாளா்கள் தரப்பில் அளிக்கப்பட்ட 70-க்கும் மேற்பட்ட கோரிக்கை மனுக்கள், சென்னையிலுள்ள உயா் அதிகாரிகளுக்கு பரிந்துரைக்கப்பட்டிருக்கிறது. மின்வாரிய அமலாக்கப் பிரிவு சாா்பில் மீண்டும் கள ஆய்வு நடத்தி டி-மொ்ஜிங் செய்யப்படும் என்றனா் அவா்கள்.