பிகா​ரில் ஆட்சி​யைத் தீர்மானிக்கும் பெண் வாக்காளர்கள்!

பிகா​ரில் ஆட்சி​யைத் தீர்மானிக்கும் பெண் வாக்காளர்களைப் பற்றி...
விவசாயத்தில் ட்ரோன்களைப் பயன்படுத்த ஊரக பெண்கள் சுய உதவிக் குழுக்களுக்கு உதவும்
"ட்ரோன் தீதி' திட்டத்தை தொடங்கி வைத்த பிரதமர் மோடி.
விவசாயத்தில் ட்ரோன்களைப் பயன்படுத்த ஊரக பெண்கள் சுய உதவிக் குழுக்களுக்கு உதவும் "ட்ரோன் தீதி' திட்டத்தை தொடங்கி வைத்த பிரதமர் மோடி. (கோப்புப் படம்)
Published on
Updated on
2 min read

எதிர்வரும் நவம்பர் 6 மற்றும் 11-இல் இரண்டு கட்டங்களாக நடைபெறவுள்ள பிகார் சட்டப்பேரவைத் தேர்தலில் பெண் வாக்காளர்களின் பங்கு, அங்கு நிலவி வரும் ஜாதிய ஆதிக்கத்தைவிட மிக முக்கியமானதாக இருக்கப் போகிறது.

இதற்கு முன்புவரை பிகாரில் ஜாதி, மதம் அல்லது குடும்ப செல்வாக்கின் அடிப்படையில் வாக்களிக்கும் பிரிவினர் வகைப்படுத்தப்பட்டு வந்தனர். இம்முறை பெண்கள் சுதந்திரமான மனநிலையுடன் வாக்குரிமை செலுத்துவதற்கான வாய்ப்புகள் அங்கு அதிகம் தென்படுகிறது.

பிகார் அரசியல் என்பது எப்போதுமே சமூகம் மற்றும் ஜாதிய சமன்பாடுகள் நிறைந்த களமாகும். ஒரு காலத்தில், விவசாயிகள் போராட்டங்கள், மாணவர் இயக்கங்கள் மற்றும் ஜாதி அடிப்படையிலான மோதல்களுக்காக பெயர் பெற்றிருந்தது பிகார், கடந்த 10 ஆண்டுகளில் அங்குள்ள சூழ்நிலை முற்றிலும் மாறுபட்டுள்ளது.

ஒரு காலத்தில் சமையலறைக்குள்ளும் வீடுகளுக்குள்ளும் முடங்கியிருந்த பிகாரி பெண்கள், இப்போது பஞ்சாயத்துகள், உள்ளூர் குழுக்கள், வணிகத் துறை மற்றும் சமூக சேவையில் வலுவான இருப்பைக் கொண்டவர்களாகத் திகழ்கின்றனர்.

பெண்களின் பங்களிப்பை அதிகரிக்க இரட்டை என்ஜின் (மத்தியிலும் மாநிலத்திலும் ஒரே கூட்டணி ஆட்சி) அரசாங்கம் ஏராளமான திட்டங்களை செயல்படுத்தியுள்ளன. உஜ்வலா திட்டம், எரிவாயு சிலிண்டர் பயன்பாட்டை அதிகரித்துள்ளது.

இதனால், அடுப்பூதும் நிலை கிட்டத்தட்ட குறைந்தேவிட்டது. குழாய் நீர் திட்டம் ஒவ்வொரு வீட்டிலும் சுத்தமான தண்ணீரை உறுதி செய்துள்ளது. பிரதமரின் வீட்டுவசதித் திட்டம் கோடிக்கணக்கான குடும்பங்களுக்கு வீடுகளை வழங்கியுள்ளது. இலவச மின்சாரம் மற்றும் ஓய்வூதிய பலன்கள் வயதான பெண்களின் பொருளாதார வாழ்வை மேம்படுத்தியுள்ளன. பெண் கல்வி மற்றும் அரசியல், சமூக மாற்றத்தின் ஒரு பகுதியாக மாறியுள்ளன.

பொருளாதார பங்கேற்பு: பெண்களின் பொருளாதார பங்கேற்பும் கணிசமாக உயர்ந்துள்ளது. வாழ்வாதாரக் குழுக்கள் மற்றும் சுயதொழில் திட்டங்கள் மூலம், பெண்கள் பால், காய்கறி, கைவினைப்பொருட்கள் மற்றும் சிறு தொழில்களை நடத்தி வருகின்றனர்.

தர்பங்காவைச் சேர்ந்த மதுபனி ஓவியக் கலைஞர்கள் இப்போது தங்கள் தயாரிப்புகளை சர்வதேச அளவில் விற்பனை செய்து வருகின்றனர். சத்தீஸ்கர் மற்றும் பிகாரில், "லாக்பதி தீதி' மற்றும் "ட்ரோன் தீதி" போன்ற திட்டங்கள், பெண்களுக்கு அதிகாரமளித்தல் மற்றும் புதுமைக்கான எடுத்துக்காட்டுகளாக மாறியுள்ளன.

"ட்ரோன் தீதி' போன்ற பெண்கள் தொழில்நுட்பத்தை ஏற்றுக்கொள்வதன் மூலம் விவசாயத்தில் புதிய வாய்ப்புகளை உருவாக்குகிறார்கள். இதன் காரணமாகவே பிகார் தேர்தலில் பெண் வாக்காளர்களின் பங்கு வழக்கமான ஜாதிய காரணிகளை விட முக்கியமானது என்று அரசியல் ஆய்வாளர்கள் நம்புகின்றனர்.

சவால்கள்: பெண்களுக்கு அதிகாரமளிப்பதால் ஏற்பட்டுள்ள இந்த எழுச்சி அவர்களின் எதிர்காலத்துக்கு ஊக்கமளிப்பதாக இருந்தாலும், நடைமுறை சவால்களையும் அவர்கள் எதிர்கொள்கின்றனர். காரணம், அங்கு இன்னும் ஆணாதிக்க மனநிலை, மனித வளங்களின் பற்றாக்குறை மற்றும் கிராமப்புறங்களில் எண்ம பயன்பாட்டுக் கல்வியறிவு குறைவாக இருப்பது போன்றவை பெண்கள் முழு சுதந்திர நிலையை எட்டுவதற்கான தடங்கல்களாக உள்ளன.

பிகாரில் மாநில அளவில் அதிக பெண்கள் பிரதிநிதித்துவத்தைத் தடுக்கும் பல காரணிகளை ஆராய்ச்சியாளர்கள் அடையாளம் கண்டுள்ளனர். குறிப்பாக சில கட்சிகள் "உறுதியாக வெல்லக்கூடிய" தொகுதிகளில் பெண்களை நிறுத்துவதில்லை என்கின்றனர் ஆய்வாளர்கள்.

கட்டுப்பாடுகள்: பிரசார செலவு, பணப்பின்புலம் இல்லாத நிலைமை போன்றவை நேரடி அரசியல் களத்துக்கு பெண்கள் வர முடியாமல் போக முக்கிய காரணங்களாகும். இவற்றுடன், ஆழமாக வேரூன்றிய சமூகம் மற்றும் கலாசார பின்னணியும் அரசியலில் பெண்களின் வரவை கட்டுப்படுத்துகின்றன, இதனால் பல இடங்களில் பெண்கள் அதிகாரத்துக்கு வந்தாலும் அவர்கள் வீட்டில் உள்ள ஆண்களே பெண் பிரதிநிதியைக் கட்டுப்படுத்துபவர்களாக உள்ளனர்.

அண்மையில் பிகார் தேர்தலையொட்டி சிறப்புத் தீவிர திருத்தம் (எஸ்ஐஆர்) செய்யப்பட்ட வாக்காளர் பட்டியலை இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டது. அந்தத் தரவு, பெண் வாக்காளர்களின் எண்ணிக்கையில் குறிப்பிடத்தக்க சரிவைக் காட்டுகிறது.

அதாவது, ஜனவரி 1, 2025 அன்று 7.8 கோடியாக இருந்த மொத்த வாக்காளர்கள் இறுதிப் பட்டியலில் சுமார் 38 லட்சம் குறைந்து 7.4 கோடியாகக் குறைந்துள்ளது. ஆண் வாக்காளர்கள் 3.8 சதவீதம் (15.5 லட்சம்) குறைந்துள்ளனர். கோபால்கஞ்சில் பெண் வாக்காளர்கள் அதிக அளவில் நீக்கப்பட்டதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. கடந்த ஜனவரியில் 10.3 லட்சமாக இருந்த எண்ணிக்கை, இறுதிப் பட்டியலில் 15.1 சதவீதம் அல்லது 1.5 லட்சமாக குறைந்துள்ளது.

மதுபனி தொகுதி இரண்டாவது மிக உயர்ந்த பெண் வாக்காளர்களின் சரிவை பதிவு செய்துள்ளது. அங்கு 1.3 லட்சம் பெண்களின் பெயர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. பூர்வி சம்பாரனில் 6.7 சதவீதம் அல்லது 1.1 லட்சம் வாக்காளர்கள் குறைந்துள்ளனர்.

சரண் மற்றும் பாகல்பூரில் தலா சுமார் 1 லட்சம் பெண் வாக்காளர்கள் குறிப்பிடத்தக்க அளவில் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

இந்த தடங்கல்களுக்கு மத்தியில்தான், பெண் வாக்காளர்கள் அங்கு ஆட்சியில் அமரும் கட்சியைத் தீர்மானிக்கக் கூடியவர்களாக விளங்குகின்றனர்.

2020 பிகார் சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகளின் அடிப்படையில், மொத்த முள்ள 243 உறுப்பினர்களைக் கொண்ட சட்டப்பேரவையில் 26 பெண்கள் உள்ளனர். இது 10.7% பிரதிநிதித்துவம் மட்டுமே.

சமீபத்திய தேர்தல்களில் பெண் வாக்காளர் எண்ணிக்கை அதிகரித்துள்ள போதிலும், பேரவையில் பெண்களின் பிரதிநிதித்துவம் குறைவாகவே உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com