

கரூர் பலி தொடர்பான விசாரணையை ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையிலான 3 பேர் கொண்டு குழு கண்காணிக்கும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. யார் இந்த அஜய் ரஸ்தோகி..?
கரூரில் கடந்த செப். 27 ஆம் தேதி நடைபெற்ற தவெக பிரசாரக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியாகினர். இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், ஐ.ஜி. அஸ்ரா கர்க் தலைமையில் சிறப்பு விசாரணைக் குழுவை அமைத்ததன் அடிப்படையில் அந்த குழு விசாரணை மேற்கொண்டு வருகிறது.
இதற்கு எதிராக தவெக தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவில், கரூர் சம்பவம் தொடர்பான வழக்கை சிபிஐ விசாரணை நடத்த உச்ச நீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது.
உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையில் 3 பேர் கொண்ட குழு கண்காணிக்கும் என்றும் இந்த கண்காணிப்புக் குழுவில் தமிழ்நாடுப் பிரிவைச் சேர்ந்த இரண்டு ஐபிஎஸ் அதிகாரிகள் இடம்பெற வேண்டும் என்றும் ஆனால் அவர்கள் தமிழகத்தை பூர்வீகமாகக் கொண்டவர்களாக இருக்கக் கூடாது என்றும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஜே.கே. மகேஷ்வரி, என்.வி. அஞ்சாரியா அமர்வு குறிப்பிட்டுள்ளது.
யார் இந்த அஜய் ரஸ்தோகி?
ஜல்லிக்கட்டு, முத்தலாக் உள்ளிட்ட பல்வேறு முக்கிய தீர்ப்புகளுக்கு பெயர்போன அஜய் ரஸ்தோகி, 1958 ஜூன் 18ல் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் பிறந்தார். அவரது தந்தை ஹரிஷ் சந்திர ரஸ்தோகி ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்தில் சிவில் வழக்கறிஞராக இருந்தார்.
அதே நீதிமன்றத்தில் அஜய் ரஸ்தோகியும் 1982 மார்ச்சில் தனது பணியைத் தொடங்கி 2004ல் கூடுதல் நீதிபதியாகவும் 2006ல் உயர்நீதிமன்ற நீதிபதியாகவும் பதவி உயர்வு பெற்றார். 2016ல் ஏப்ரல் - மே மாதங்களில் ராஜஸ்தான் உயர்நீதிமன்றத்துக்கு பொறுப்பு தலைமை நீதிபதியாக இருந்தார். பின்னர் 2018ல் திரிபுரா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவி வகித்தவர். அந்த ஆண்டே உச்சநீதிமன்ற நீதிபதியாகி 2023 ஜூன் 17 ஆம் தேதி ஓய்வு பெற்றார்.
இதனிடையே ராஜஸ்தான் உயர்நீதிமன்ற பார் கவுன்சில் அமைப்பின் தலைவர் உள்ளிட்ட பொறுப்புகளையும் வகித்துள்ளார்.
2013 - 2016 கால கட்டத்தில் ராஜஸ்தான் மாநில சட்ட சேவைகள் ஆணையத்தின் நிர்வாகத் தலைவராகப் பணியாற்றியபோது அந்த ஆணையம் தொடர்ந்து மூன்று ஆண்டுகள் தேசிய விருதைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.
வழங்கிய தீர்ப்புகள் என்னென்ன?
கடந்த 2020 ஜூன் மாதம் முதல் அப்போதைய தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் மற்றும் நீதிபதி ஹேமந்த் குப்தாவுடன் இணைந்து முதல்முறையாக பேப்பர் இன்றி லேப்டாப்பில் குறிப்புக்கள் எடுத்து வழக்கு நடத்தியவர். அதன்பின்னரே மற்ற நீதிபதிகள் இதனை பின்பற்றி வருகின்றனர். 506 அமர்வுகளில் மொத்தமாக 158 வழக்குகளுக்கு தீர்ப்பு வழங்கியுள்ளார்.
அரசியலமைப்பு, நிர்வாகம், பாலின சமத்துவ பிரச்னைகள் குறித்த இவரது தீர்ப்புகள் பெயர்பெற்றவை.
தமிழகத்தில் மிகப்பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்திய ஜல்லிக்கட்டு போராட்ட வழக்கில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தீர்ப்பு வழங்கிய நீதிபதி கே.எம். ஜோசப் தலைமையிலான 5 நீதிபதிகள் அமர்வில் அஜய் ரஸ்தோகியும் ஒருவர். 2017-ம் ஆண்டு ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த அனுமதிக்கும் சட்டம் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டதற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் ஜல்லிக்கட்டு போன்ற பாரம்பரிய விளையாட்டுகளை அனுமதிக்கும் வகையில் சட்டம் இயற்ற அனைத்து மாநில அரசுகளுக்கும் அதிகாரம் உண்டு என்று தீர்ப்பு வழங்கப்பட்டது.
2020 பிப்ரவரியில் போர் அல்லாத பகுதிகளில் பெண் அதிகாரிகளை நிரந்தரமாக நியமிக்கவும், கட்டளையிடும் பதவிகளை வழங்கவும் இந்திய இராணுவத்திற்கு உத்தரவிட்ட அமர்வில் ரஸ்தோகியும் இருந்தார். குறுகிய ஆண்டுகள் பதவியில் இருந்த பெண் அதிகாரிகள் இந்த தீர்ப்பின் மூலமாக ஓய்வு பெறும் வரை நிரந்தரமாக பணியமர்த்தப்பட்டனர். ஒரு மாதத்திற்குப் பிறகு இந்திய கடற்படையில் உள்ள பெண் அதிகாரிகளுக்கும் இந்த உத்தரவு நீட்டிக்கப்பட்டது.
இந்திய தேர்தல் ஆணையர் நியமனம் தொடர்பான 5 பேர் கொண்ட அமர்வில் இடம் பெற்றிருந்தார் ரஸ்தோகி. தலைமைத் தேர்தல் ஆணையரைத் தேர்வு செய்யும் குழுவில் பிரதமர், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர், தலைமை நீதிபதி ஆகியோர் இடம் பெற வேண்டும் என்பதே இந்த வழக்கின் தீர்ப்பு. உச்சநீதிமன்ற நீதிபதியை நீக்கும் வழிமுறைகளையே, தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கவும் பின்பற்ற வேண்டும் என்று கூறியவர்.
அங்கன்வாடி பணியாளர்களுக்கு பணிக்கொடை வழங்க வேண்டும், முத்தலாக் மசோதாவை ஆய்வு செய்யும் உத்தரவு ஆகிய தீர்ப்புகளிலும் இவரது பங்கு உண்டு.
2018ல் கருணைக் கொலைக்கு ஆதரவாக உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய நிலையில் அதன் விதிகளை எளிமைப்படுத்தி உத்தரவிட்ட குழுவில் ரஸ்தோகி இடம்பெற்றிருந்தார்.
2021 கரோனா தொற்றுநோய் காலத்தில் யுபிஎஸ்சி முதல்நிலைத் தேர்வுக்கான கடைசி வாய்ப்பு இருந்தவர்கள் தங்களுக்கு மேலும் ஒரு வாய்ப்பு வழங்க கோரிய தேர்வர்களின் மனுவை, 'இதில் நாடாளுமன்றத்துக்கே அதிகாரம்' என்று கூறி நிராகரித்தார்.
2022ல் குஜராத் கலவரத்தின்போது பில்கிஸ் பானு என்று கர்ப்பிணி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு அவரது 3 வயது குழந்தை உள்பட குடும்பத்தினர் 7 பேர் கொல்லப்பட்ட சம்பவத்தில், குற்றவாளி ஒருவரின் முன்கூட்டிய விடுதலையை பரிசீலனை செய்யுமாறு குஜராத் அரசுக்கு உத்தரவிட்ட 3 நீதிபதிகளில் அஜய் ரஸ்தோகியும் ஒருவர். இவரது உத்தரவின் அடிப்படையிலேயே இந்த வழக்கில் 11 குற்றவாளிகளையும் குஜராத் அரசு விடுவித்தது. பின்னர் இந்த வழக்கில் நீதிபதி பி.வி. நாக ரத்னா குற்றவாளிகளின் விடுதலையை ரத்து செய்தது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.