நாட்டரசன்கோட்டையில் தீபாவளி பலகாரங்கள் தயாரிப்பு தீவிரம்!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சிவகங்கை அருகே நாட்டரசன்கோட்டையில் செட்டிநாட்டு பலகாரங்கள் தயாரிப்பு தீவிரமடைந்துள்ளது.
சிவகங்கை அருகே நாட்டரசன்கோட்டையில் விறகு அடுப்பில் பலகாரங்கள் தயாரிக்கும் பணியில் ஈடுபட்ட பெண்கள்.
சிவகங்கை அருகே நாட்டரசன்கோட்டையில் விறகு அடுப்பில் பலகாரங்கள் தயாரிக்கும் பணியில் ஈடுபட்ட பெண்கள்.
Published on
Updated on
2 min read

சிவகங்கை: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சிவகங்கை அருகே நாட்டரசன்கோட்டையில் செட்டிநாட்டு பலகாரங்கள் தயாரிப்பு தீவிரமடைந்துள்ளது.

நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை திங்கள்கிழமை (அக். 20) கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. தீபாவளி பண்டிகையில் பட்டாசு, புத்தாடைக்கு அடுத்தது இனிப்பு வகைகள், பலகாரங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. அதிலும் தென் மாவட்டங்களின் செட்டிநாட்டு பலகாரங்களுக்கு தமிழகம் மட்டுமின்றி வெளிநாடுகளிலும் தனி இடம் உண்டு.

தீபாவளி பண்டிகைக்கு 5 நாட்களே உள்ள நிலையில் செட்டி நாட்டு பலகாரங்களான முறுக்கு, அதிரசம், சுசியம், சீடை, தட்டை, காரச்சேவு, மிக்சா், லட்டு, ரவாலட்டு, மைசூா்பாவு, ரசகுல்லா, மில்க் சுவீட்ஸ் உள்ளிட்டவை தயாரிக்கும் பணி தீவிரமடைந்துள்ளது.

பொரித்து எடுக்கப்பட்ட முருக்குகள்
பொரித்து எடுக்கப்பட்ட முருக்குகள்

சிவகங்கை அருகே நாட்டரசன்கோட்டை பகுதியில் சுமார் 20 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் பாரம்பரியமாக செட்டிநாட்டு பலகாரங்களை தயாரித்து வருகின்றனர். இதில் முறுக்கு, அதிரசம், மசாலா முறுக்கு, கைமுறுக்கு, மாவு உருண்டை, சீப்புச் சீடை, உப்பு சீடை, இனிப்புச் சீடை, கார சீடை, தட்டை, தேன்குழல், மனகோலம், லட்டு, ரிப்பன் பக்கோடா உள்பட 16 வகையான பலகார வகைகளை தயாரிக்கின்றனர்.

இந்த பலகாரங்கள் சிவகங்கை, காளையார்கோவில், மானாமதுரை, இளையான்குடி, பரமக்குடி, மதுரை, சென்னை உள்ளிட்ட பகுதிகளுக்கு மட்டும் இல்லாமல் வெளி மாநிலம், சிங்கப்பூர், மலேசியா, துபை போன்ற வெளிநாடுகளுக்கும் ஆர்டர்கள் பெற்று அனுப்புகின்றனர்.

இந்த பலகாரங்கள் அனைத்துமே ஒரு முறை மட்டுமே பயன்படுத்தப்படும் சமையல் எண்ணெய்யைக் கொண்டு தயாரிப்பதால் அதிக சுவையுடன் நீண்ட நாட்களுக்கு கெட்டுப்போகாமல் இருக்கும். மேலும் இந்தப் பலகாரங்கள் அனைத்தும் பெண்களை கொண்டே செய்யப்படுவதால் வீட்டில் செய்யப்பட்ட பலகாரங்களை போலவே சுவை மற்றும் சுகாதாரமும் சாப்பிடுபவர்களுக்கு கிடைக்கிறது. இதன் காரணமாகவே இங்கு தயாரிக்கப்படும் பலகாரங்களுக்கு மக்களிடம் தனி மதிப்பும், வரவேற்பும் எப்போதும் குறையாமல் இருக்கிறது.

இந்நிலையில், தீபாவளி பண்டிகைக்கு குறைந்த நாள்களே உள்ள நிலையில் ஆர்டர்களுக்கும் சில்லரையிலும் விற்பனை செய்வதற்காக பலகாரங்களை செய்யும் பணி தீவிரமடைந்துள்ளது.

எண்ணெய்யில் குளிக்கதயாராக உள்ள தட்டு அடைகள்.
எண்ணெய்யில் குளிக்கதயாராக உள்ள தட்டு அடைகள்.

இதுகுறித்து பலகாரங்கள் தயாரிக்கும் வீரப்பன் கூறியதாவது:

நாட்டரசன்கோட்டையில் 20-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் இந்த இனிப்பு, பலாகரங்கள் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளோம். பண்டிகை நாள்களைத் தவிர்த்து மற்ற நாள்களில் கடைகளுக்கு தயார் செய்து அனுப்புவோம். தீபாவளி பண்டிகைக்கு மட்டும் வெளி மாவட்டம், வெளி மாநிலங்கள், வெளிநாடுகளில் வசிக்கும் தமிழர்களிடம் இருந்து ஆர்டகள் கிடைத்து வருகின்றது. மேலும், மணப்பெண்ணுக்கு தலைத்தீபாவளி சீர் கொடுப்பதற்கும் பலகாரகங்கள் ஆர்டர் கொடுக்கின்றனர்.

எங்களிடம் ரூ. 300, 500-க்கு இனிப்பு கார வகைகள் அடங்கிய பேக்கேஜ் உள்ளது. வாடிக்கையாளர்களின் தேவைகளுக்கு ஏற்ப தயார் செய்து கொடுக்கின்றோம். இவை அனைத்தும் பெண்களை கொண்டும், விறகு அடுப்பிலும் செய்யப்படுவதால் பலகாரங்களுக்கு கூடுதல் சுவையையும் தருகிறது என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com