பழகும் பஞ்சவர்ணக் கிளிகள்!

பஞ்சவர்ணக் கிளிகளைப் பழக்குவதைப் பற்றி...
Indonesian motorbike mechanic became a macaw trainer
வண்ணம் பல வண்ணம்...ஏபி
Published on
Updated on
2 min read

பச்சைக் கிளிகள் பேசும், பழகும், இறக்கைகளைக் கத்தரித்து விட்டால் வீட்டில் கூண்டுக் கிளிகளாகவோ, வரவேற்பறைக் கிளிகளாகவோ வளையவும் வரும். ஆனால், இதே கிளிக் கூட்டத்தைச் சேர்ந்த பஞ்சவர்ணக் கிளியைப் பழக்க முடியுமா?

இந்தோனேசியாவில் டெபோக் நகரில் அல்பி அல்பர் ரம்லி என்கிற மெக்கானிக், இந்த பஞ்சவர்ணக் கிளிகளை (Macaw - மக்காவ்) பழக்குகிறார்; கேட்டுக்கொள்வோருக்கு பழக்கியும் தருகிறார். வீட்டிலிருந்து மோட்டார் பைக்கில் அருகேயுள்ள திறந்த வெளியில் பயிற்சியளிப்பதற்காகச் செல்லும் அவருடனேயே அமர்ந்து செல்கின்றன இரண்டு  கிளிகள்.

செல்லும்போது, பின் இருக்கையில் கட்டப்பட்டுள்ள கூண்டில் பயிற்சி பெறுவதற்காக மேலும் ஆறு பஞ்சவர்ணக் கிளிகள் இருக்கின்றன. அருகேயுள்ள திறந்தவெளித் திடலில் இவரைப் போன்ற அருகேயுள்ள மேலும் சில பஞ்சவர்ணக் கிளி ஆர்வலர்களும் தங்கள் கிளிகளுடன் திரள்கின்றனர்.

பஞ்சவர்ணக் கிளிகளுக்கு இடையே நடைபெறவுள்ள ஆணைகளுக்குக் கட்டுப்படுவது போன்ற போட்டியில் பங்கேற்பதற்காக இந்தத் திடலில் பறவைகள் பறக்கவும், மூன்று நிமிஷங்களுக்குள் விசிலடித்தால் திரும்பிவரவும் கற்றுத் தருகின்றனர்.

பறவைகளின் மீது பெரும் நேசம் கொண்டிருப்பவர் ரம்லி. 2018-ல் பச்சைக் கிளிகளுடன்தான் பழகிக் கொண்டும் பழக்கிக் கொண்டும் இருந்தார். அதன் பிறகுதான் இன்னும் கொஞ்சம் பெரிதாகச் சிந்தித்தவர், பஞ்சவர்ணக் கிளிகளைப் பழக்கினால் என்ன என்று நினைத்தார். இதுபற்றிய காணொலிகளை சமூக ஊடகங்களில் பார்த்தார். மோட்டார் சைக்கிள் மெக்கானிக் வேலையைத் தூக்கிப் போட்டுவிட்டுப் பறவைப் பழக்குநர் என்ற புதிய பாதைக்கு மாறிவிட்டார்.

2020-ல் அவர் கனவு, நனவானது. முதன்முதலாக பறவை ஆர்வலர் ஒருவர் ஒப்படைத்த ஸோரோ என்ற பஞ்சவர்ணக் கிளியை வெற்றிகரமாகச் சொன்னபடி கேட்கப்  பழக்கினார்.

இன்றைக்கு தெற்கு ஜாகர்த்தாவிலுள்ள கிராமப்புறத்தில் சிறு குடும்பத்துடன் வசிக்கும் அவருடைய வீட்டையொட்டி 18 பஞ்சவர்ணக் கிளிகள் இருக்கின்றன. கிட்டத்தட்ட ஒரு பள்ளிக்கூடத்தைப் போலவே நடத்துகிறார்.

ஒவ்வொரு பஞ்சவர்ணக் கிளிக்கும் ஒரு பெயர், ஒருவித ஆளுமை. எல்லாவற்றையும் ரம்லிக்கு நன்றாகத் தெரியும். எல்லா கிளிகளுக்கும் ரம்லியையும் தெரியும். இவற்றில் இரு உயர் இனக் கிளிகளும் இருக்கின்றன.

ஒவ்வொரு நாளும் இந்தப் பஞ்சவர்ணக் கிளிகளுக்குத் தீனி வைத்துப் பார்த்துக் கொள்வது மட்டுமல்ல ரம்லியின் வேலை. இரண்டு முறை கூண்டுகளைச் சுத்தப்படுத்துகிறார். அவற்றின் இறகுகளைச் சீர்செய்கிறார்.

இந்த பந்தம் காரணமாகப் போட்டிகளில் எவ்வளவு தொலைவுக்குப் பறந்து சென்றாலும்கூட வழி கண்டுபிடித்து, கூட்டத் தலைவரைப் போல ரம்லி இருக்கும் இடத்துக்குத் திரும்பி வந்துவிடுகின்றன இந்தக் கிளிகள்.

“மனிதர்களுக்கும் இவற்றும் பெரிய வித்தியாசமில்லை. நாம் என்ன சொல்கிறோம், என்ன ஆணையிடுகிறோம் என்பதை சில கிளிகள் மிக வேகமாகப் புரிந்துகொண்டுவிடுகின்றன; சில கிளிகளுக்குச் சற்று நேரமாகும்” என்கிறார் ரம்லி.

ஒவ்வொரு பஞ்சவர்ணக் கிளியையும் பழக்கித் தருவதற்காகக் குறிப்பிட்ட கட்டணம் என வரையறுத்து எதையும் வசூலிப்பதில்லை ரம்லி. கிளிகளின் உரிமையாளர்கள் விரும்பிக் கொடுப்பதை வாங்கிக்கொள்கிறார்.

இரு நண்பர்கள் உதவியுடன் ஜாகர்த்தாவில் நடைபெறும் போட்டிகளிலும் தன் பஞ்சவர்ணக் கிளிகளுடன் ரம்லி பங்கேற்றிருக்கிறார். வெற்றி பெற வேண்டுமென்பதற்காக மட்டும் அல்ல; எப்படியெல்லாம் இந்தக் கிளிகளை அவர் பராமரிக்கிறார் என்பதையும் அறிவிப்பதாக இருக்கிறது இந்தப் பங்கேற்பு.

“பறவைகளை நான் மிகவும் நேசிக்கிறேன். அவற்றுடன் எனக்கு சிறப்புப் பிடிப்பு இருக்கிறது. பிறகு இன்னொரு விஷயம், விலைமதிப்பு மிக்க இந்தப் பஞ்சவர்ணக் கிளிகளைப் பராமரிக்கிறோம் என்பதில் பெருமையும் இருக்கிறது” என்கிறார் ரம்லி.

ஐந்து வண்ணங்கள் மட்டுமல்ல; பல வண்ணங்களைக் கொண்ட இறகுகளுடன் நீண்ட வாலும் கொண்ட இந்தப் பஞ்சவர்ணக் கிளிகளின் தாயகம் தெற்கு, மத்திய அமெரிக்கா மற்றும் வட அமெரிக்காவில் மெக்சிகோ. பெருங்காடுகளில் குறிப்பாக மழைக்காடுகளிலும் இருப்பவை. சாதாரண காடுகளிலும் புல்வெளிகளிலும்கூட  இருக்கின்றன.

இந்தியாவில் வீடுகளில் பஞ்சவர்ணக் கிளிகளை வளர்க்கலாம். ஆனால், உரிய துறையிடம் பதிவு செய்துகொள்ள வேண்டும்.

நம்மூர்ப் பச்சைக்கிளிகளைப் போலவே பஞ்சவர்ணக் கிளிகளும் பயிற்சியின் மூலம் சில சொற்களைப் பேசும், சில ஒலிகளையும் எழுப்பும். மனிதர்களுடன் பழகும்.

பறவைகளில் நீண்ட ஆயுளைக் கொண்டவை இவை. சராசரியாக 60 ஆண்டுகள் வரை உயிர் வாழும்; நல்ல வாழ்நிலை இருந்தால் 100 ஆண்டுகள்கூட இருக்குமாம்.

பழக்கினால் தலைமுறை தாண்டியும் கிளிப் பேச்சு கேட்கலாம்.

Summary

Photos show how an Indonesian motorbike mechanic became a macaw trainer

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com