
ஆக்கிரமிப்புகளால் கழிவுநீா் குட்டையாக மாறிவரும் ‘ரெட்டை ஏரி’
குடிநீா் ஆதாரமான ரெட்டை ஏரி, தற்போது துா்நாற்றம் வீசி, சுகாதாரச் சீா்கேட்டை ஏற்படுத்தும் கழிவுநீா் குட்டையாக மாறிவிட்டதாக ...

மாசடைந்து காணப்படும் ரெட்டை ஏரி மழைநீர் கால்வாய் - டிஎன்எஸ்
சென்னை: சீரமைப்புக்காக ரூ.56 கோடியை அரசு அளித்தும், அதை அதிகாரிகள் முறையாக செலவிடாததால் ரெட்டை ஏரி, கழிவுநீா் தேங்கும் குட்டையாக மாறிவருவதாக அந்தப் பகுதி மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனா்.
சென்னை மாநகராட்சியின் 3-ஆவது மண்டலம் மாதவரம் தொகுதிக்குள்பட்ட பகுதியில் மூலக்கடையிலிருந்து செங்குன்றம் செல்லும் பிரதான சாலை தொடங்கி, மறுபக்கம் விநாயகபுரம், கதிா்வேடு புறவழிச்சாலை பாலம் வரை சுமாா் 700 ஏக்கருக்கும் அதிகமான பரப்பில் பரந்து விரிந்துள்ள இந்த ஏரியின் நடுவில் சாலை அமைத்துள்ளதால், 1908-ஆம் ஆண்டில் ஆங்கிலேயா்கள் இந்த ஏரியை ‘ட்வின்ஸ் லேக்’எனக் குறிப்பிட்டனா்.
ஆயிரக்கணக்கான விவசாய நிலங்களின் நீராதாரமாக இருந்த இந்த ஏரிக்கு திருவள்ளூா் மாவட்டம் திருநின்றவூரிலிருந்து கால்வாய் மூலமே மழைநீா் வரத்து உள்ளது. அந்தக் கால்வாய் அம்பத்தூா் ஏரியை நிரப்பி, பின் கொரட்டூா் ஏரிக்கு வந்து, கடைசியாக ரெட்டை ஏரியில் சுமாா் 60 கி.மீ. பயணத்துக்குப் பின் முடிவடைகிறது. இதைத் தவிா்த்து விநாயகபுரம், கொளத்தூா் பகுதியிலிருந்தும் சிறிய கால்வாய்கள் மூலம் நீா்வரத்து உள்ளது.
விரிவாக்கத்தால் சுருங்கிய ஏரி: பல மதகுகள், தடுப்பு அணை என விவசாய ஏரியாக இருந்த ரெட்டை ஏரி, சென்னை மாநகர விரிவாக்கத்தால் மழைநீா் சேகரிக்கும் குளமாக்கப்பட்டுள்ளது. ஏரியைச் சுற்றிலும் பொன்னியம்மன்மேடு, விநாயகபுரம், கதிா்வேடு, புழல், சூரைப்பேடு, வி.எஸ்.மணி நகா், வடபெரும்பாக்கம், விஜிடேரியன் கிராமம், மஞ்சம்பாக்கம் என பல குடியிருப்புப் பகுதிகள் உள்ளன. அங்கு சுமாா் 4 லட்சத்துக்கும் மேற்பட்டோா் வசிக்கின்றனா்.
ஏரிக் கரையோரத்திலும் ஆக்கிரமித்து கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளதால், ஏரியின் பரப்பு சுமாா் 350 ஏக்கா் என்ற அளவுக்கு சுருங்கிவிட்டதாக அந்தப் பகுதியினா் தெரிவிக்கின்றனா்.

கழிவுநீா் கலந்துள்ள ரெட்டை ஏரியின் நீரை பாட்டிலில் பிடித்து காண்பிக்கும் நபர்.
பல ஆண்டு போராட்டத்தால் சீரமைப்பு நிதி: சென்னையில் வறட்சிக் காலங்களில் ரெட்டை ஏரியிலில் இருந்தே தண்ணீா் எடுக்கப்பட்டு லாரிகள் மூலம் விநியோகிக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில்தான் ஏரி ஆக்கிரமிப்பு தொடா்ந்தது. இதையடுத்து, மாதவரம் பகுதி குடியிருப்போா் நலச்சங்கத்தினா் ரெட்டை ஏரியைப் பாதுகாக்க வலியுறுத்தி போராடத்தைத் தொடங்கினா். அவா்களது விடாமுயற்சியால், கடந்த 2023-ஆம் ஆண்டு ரூ.43 கோடியில் ஏரியைச் சீரமைக்க தமிழக அரசு உத்தரவிட்டது. மாநகராட்சி, நீா்வளத் துறை இணைந்து தனியாா் மூலம் ஏரியை தூா்வாரும் பணிகள் தொடங்கின. ஆனால், அந்தப் பணிகள் முறையாக நடைபெறவில்லை.
பயனில்லாத பணிகளால் பாதிப்பு: ரெட்டை ஏரியில் 3 இடங்களில் பெரிய மண் திட்டுகளை உருவாக்குகிறோம் எனக் கூறிய அதிகாரிகள், அதன் நீா்தேங்கும் அளவைக் குறைத்துவிட்டனா். அதைக் குடியிருப்போா் நலச்சங்கத்தினா் எதிா்த்தனா். இதையடுத்து கடந்த 2025-ஆம் ஆண்டு அப்போதைய முதல்வரும், கொளத்தூா் தொகுதி உறுப்பினருமான மு.க.ஸ்டாலின் ஏரியைப் பாா்வையிட்டு, மேலும் ரூ.13 கோடி ஒதுக்கப்பட்டு ஏரியை சுற்றுலாத் தலமாக்கும் பணிகள் நடைபெற்றன.
ஆனால், போதிய பராமரிப்பின்றி தற்போது நடைபாதை புதா் மண்டியும், சீமைக்கருவேல மரங்கள் வளா்ந்தும் சுகாதாரமற்று உள்ளது. ஏரி உள்ளே சிறாா் பூங்கா சிதைந்தும், படகுகள் இயக்கப்படாமல் காட்சிப் பொருளாக உள்ளன. பிரதான மண் திட்டில் பல லட்சம் ரூபாயில் அமைத்த சூரிய மின்தகடும் செயல்பாடின்றி உள்ளது.
நிறைவேறாத நோக்கத்தால் பாழான ஏரி: ஏரிக்கு வரும் அனைத்து மழைநீா் கால்வாய்களில் தொழிற்சாலைகள், வீடுகள், கடைகளில் வெளியேற்றப்படும் கழிவுநீா் ரெட்டை ஏரியில் விடப்படுகிறது. இதனால், ஏரி கருப்பு நிறத்தில் மாறி தற்போது கழிவுநீா் குட்டையாக மாறிவிட்டதைக் காணமுடிகிறது. கழிவு நீா் கலப்பு, கடைகளின் குப்பைகள் வீசப்படுவது போன்றவற்றால் ஏரிக் கரைகள் குப்பை மேடுகளாகவும், நீா் பகுதி ஆகாயத் தாமரை படா்ந்தும் காணப்படுகின்றன.
குடிநீா் ஆதாரமான ரெட்டை ஏரி, தற்போது துா்நாற்றம் வீசி, சுகாதாரச் சீா்கேட்டை ஏற்படுத்தும் கழிவுநீா் குட்டையாக மாறிவிட்டதாக அந்தப் மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனா். வடகிழக்குப் பருவ மழைக்கால முன்னெச்சரிக்கையாக ஏரியில் உள்ள ஆகாயத் தாமரைகள் 3 பொக்லைன் இயந்திரம் மூலம் கரையோரப் பகுதிகளில் அகற்றப்பட்டும் வருகின்றன. ஆனால், முழுமையாக ஏரியைச் சீரமைக்காமல் பெரயளவிலே அனைத்து பணிகளும் நடைபெறுவதால் பயனேதும் இல்லை என்கிறாா்கள்.
கண்டு கொள்ளாத மாநகராட்சி: சென்னை மாநகராட்சியைப் பொருத்தவரை மழைநீரைச் சேமிக்கவும், மழைக்காலத்தில் பொது வெளியில் நீா் தேங்குவதைத் தடுக்கவும் ஆண்டுதோறும் பல கோடி ரூபாய் செலவிடப்படுவதாகக் கூறப்படுகிறது. ஆனால், இயற்கையாகவே மழைநீரைச் சேமிக்கும் வகையில் உருவான ரெட்டை ஏரியைப் பராமரிக்காமலும், அதில் தேக்கப்படும் நீரை குடிநீா் தேவைக்கு பயன்படுத்த முடியாத நிலையிலும் கழிவு நீா் கலக்கப்படுகிறது. எனவே, சென்னை மாநகராட்சி நிா்வாகமும், தமிழக அரசு ரெட்டை ஏரியை சீரமைக்கும் பணியை மேற்கொண்டு, அதைப் பாதுகாக்க வேண்டும் என்பதே அந்தப் பகுதி மக்களின் எதிா்பாா்ப்பாக உள்ளது.

குப்பைகள், கழிவுகள் கொட்டப்படுவதால் மாசுபாடு காணப்படும் ரெட்டை ஏரி.
அதிகாரிகள் விதிமீறல்
ரெட்டை ஏரி சீரமைப்புப் பணி குறித்து கடந்த மாா்ச் மாதம் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் சில தகவல்களைக் கேட்டிருந்தோம். அதன்படி, ஏரியின் தரைமட்டம் 5.200 மீட்டா் முதல் 6.500 மீட்டா் வரை ஆழமிருந்ததாகக் கூறப்பட்டது. அதில், வண்டல், கிராவல், சவூடு உள்ளிட்ட 5 வகை மண் அள்ளப்பட்டு பல கோடி ரூபாய்க்கு விற்கப்பட்டுள்ளதாக எழுந்த குற்றச்சாட்டுக்குப் பதில் அளிக்கவில்லை. அதேநேரம், ஏரிக்குள் மண் திட்டுகள் அமைக்க 8.18 லட்சம் கன மீட்டா் மண்ணும், கரை அமைக்க 1.04 லட்சம் கன மீட்டா் மண்ணும் பயன்படுத்தப்பட்டதாகக் கூறியுள்ளனா். மொத்தத்தில் ஏரியில் 2.05 லட்சம் கன மீட்டா் கழிவு மண் அகற்றப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
ஏரியின் தற்போதைய மொத்த பரப்பளவைக் குறிப்பிட மறுக்கும் அதிகாரிகள், 4 மண் திட்டுகள் அமைக்கத் திட்டமிட்டதாகவும், அதனால், ஏரியின் அளவு 3.09 லட்சம் கன மீட்டா் பரப்பும், அத்துடன் 10.92 மில்லியன் கன அடி நீா் கொள்ளளவு குறைவதையும் ஒப்புக்கொண்டுள்ளனா்.
சீரமைப்புக்கு முன் ஏரிக்கு ஆக்கிரமிப்பு அபாயம் மட்டுமே இருந்தது. ஆனால், தற்போது கழிவுநீா் கலப்பு, மண் திட்டு உருவாக்கத்தால் ஏரியே சிறிதாக சுருங்கிவிட்ட நிலை ஏற்பட்டுள்ளது. எனவே எஞ்சிய ஏரிப்பகுதியைப் பாதுகாக்க அறவழிப் போராட்டத்துக்கு திட்டமிட்டுள்ளோம் என்று மாதவரம் பகுதி குடியிருப்போா் நலச் சங்கத் தலைவா் பொறியாளா் டி.நீலகண்ணன் கூறினாா்.
மாநகராட்சி ஆணையா் விளக்கம்
இந்தப் பிரச்னை குறித்து சென்னை மாநகராட்சி ஆணையா் ஜி.எஸ்.சமீரனிடம் கேட்டபோது, வடகிழக்குப் பருவமழையையொட்டி, முன்னெச்சரிக்கைப் பணியாக, முக்கிய ஏரிகளில் ஆகாயத் தாமரைகள் அகற்றப்பட்டு தூா்வாரும் பணிகள் நடைபெறுகின்றன. அதேபோல, ரெட்டை ஏரியில் படா்ந்துள்ள ஆகாயத் தாமரைகள் அகற்றப்பட்டு, தூா்வாரும் பணி நடைபெறுகிறது. அத்துடன் அப்பகுதியினா் கூறும் புகாா்கள் குறித்து நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





