இன்று கோவை, திருவள்ளூா் உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு ‘ஆரஞ்சு’ எச்சரிக்கை ராமேசுவரம் - எழும்பூருக்கு இன்று சிறப்பு விரைவு ரயில் தாம்பரம் - விழுப்புரம் மெமு ரயில் நாளை பகுதி ரத்து லாஸ் ஏஞ்சலீஸ் மேயா் தோ்தல்: கேரள வம்சாவளி பெண் முன்னிலை பிரதமா் மோடி டிசம்பரில் கனடா பயணம்

மதுரை பன்னாட்டு விமான நிலையத்தில் மலிவு விலை உணவு அங்காடி அமைக்கப்படுமா?

சென்னை பன்னாட்டு விமான நிலையத்தில் செயல்பட்டு வருவதுபோல, மதுரை விமான நிலையத்திலும் மலிவு விலை உணவு அங்காடியை அமைக்க வேண்டும் என பயணிகள் எதிர்பார்க்கின்றனர்.

சென்னை பன்னாட்டு விமான நிலைய வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள மலிவுவிலை உணவு அங்காடி. - படம் - தினமணி

Updated On :

- நமது நிருபர்

சென்னை பன்னாட்டு விமான நிலையத்தில் செயல்பட்டு வருவதுபோல, மதுரை விமான நிலையத்திலும் மலிவு விலை உணவு அங்காடியை அமைக்க வேண்டும் என பயணிகள் எதிர்பார்க்கின்றனர்.

மதுரை விமான நிலையம் கடந்த 2011-ஆம் ஆண்டு ரூ.145 கோடியில் புதிய முனையத்துடன் நவீன வசதிகளுடன் அமைக்கப்பட்டது. ஏரோ பிரிட்ஜ் உள்ளிட்ட வசதிகளுடன் 24 மணி நேரமும் இயங்கும் இந்த விமான நிலையம், கடந்த சில மாதங்களுக்கு முன்பு சர்வதேச விமான நிலையமாகவும் தரம் உயர்த்தப்பட்டது.

இங்கிருந்து சென்னை, பெங்களூரு, ஹைதராபாத், தில்லி, மும்பை உள்ளிட்ட நகரங்களுக்கு உள்நாட்டு விமான சேவைகளும், இலங்கை, அபுதாபி போன்ற நாடுகளுக்கு வெளிநாட்டு விமானச் சேவைகளும் அளிக்கப்படுகின்றன. மதுரை மாவட்ட மக்கள் மட்டுமின்றி, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர் உள்ளிட்ட தென் மாவட்டங்களைச் சேர்ந்த மக்களும் இந்த விமான நிலையத்தைப் பயன்படுத்தி வருகின்றனர்.

பயணிகள் வருகை அதிகரிப்பு: தினசரி சராசரியாக 16 முதல் 20 விமானங்கள் இயக்கப்படும் நிலையில், மாதந்தோறும் சுமார் 1.15 லட்சம் முதல் 1.25 லட்சம் பேர் பயணிக்கின்றனர். ஆண்டு முழுவதும் சுமார் 13.8 லட்சம் முதல் 15.8 லட்சம் பயணிகள் உள்நாடு, வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொள்கின்றனர். குறிப்பாக, தொழிலதிபர்களைக்காட்டிலும் சாமானிய, நடுத்தர மக்களே அதிகளவில் இந்த விமான நிலையத்தைப் பயன்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

பொதுவாக, உள்நாட்டு விமான சேவையைப் பயன்படுத்தும் பயணிகள் விமானம் புறப்படுவதற்கு ஒரு மணிநேரத்துக்கு முன்பாகவும், வெளிநாட்டு விமான சேவையைப் பயன்படுத்தும் பயணிகள் 2 மணி நேரத்துக்கு முன்பாகவும் விமான நிலையத்தில் இருக்க வேண்டும். அவ்வாறு வரும் பயணிகளின் வசதிக்காக விமான நிலையத்தில் சிற்றுண்டிக் கடைகள் அதிகளவில் திறக்கப்பட்டுள்ளன.

மதுரை விமான நிலையத்தில் பயணிகளின் வசதிக்காக சிற்றுண்டி, உணவகங்கள் செயல்பட்டு வந்தாலும், அங்கு விற்கப்படும் பொருள்களின் விலை சாமானியர்களை மலைக்க வைக்கும் வகையில் இருப்பதாகப் புகார்கள் எழுந்துள்ளன. மதுரை விமான நிலையத்தின் உள்ளே செயல்படும் சிற்றுண்டிக் கடைகளில் ஒரு குவலை தேநீர் அல்லது காபி குறைந்தபட்சம் ரூ.80 முதல் ரூ.240 வரை விற்கப்படுகிறது. இதேபோல, ஒரு லிட்டர் குடிநீர் புட்டி ரூ.80 வரை விற்பனை செய்யப்படுகிறது. வெளியில் ரூ.10-க்குக் கிடைக்கும் சிற்றுண்டி (வடை) வகைகள் கூட இங்கு ரூ.40 முதல் ரூ.60 வரை விற்கப்படுவதாக பயணிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.

இதனால், விமான நிலையத்தைப் பயன்படுத்தும் சாமானிய மக்களுக்கு இது பெரும் பொருளாதாரச்சுமையை ஏற்படுத்துவதால், பெரும்பலானோர் இந்த அதிகவிலை உணவகங்களைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கின்றனர். இருந்தாலும், சில நேரங்களில் வேறு வழியின்றி அவசியத் தேவைகளுக்காக அதிக விலை கொடுத்து வாங்கும் நிலைக்கு அவர்கள் தள்ளப்பட்டுள்ளனர். பயணிகளின் இத்தகைய இன்னலைப் போக்கும் வகையில், மத்திய அரசு, நாட்டின் பல்வேறு விமான நிலையங்களில் மலிவு விலை உணவு அங்காடியை அமைத்து வருகிறது. இதேபோல, மதுரை விமான நிலையத்திலும் மலிவு விலை உணவு அங்காடியை (உடான் யாத்ரி கபே) அமைக்க வேண்டும் என்பதே பயணிகளின் கோரிக்கையாக உள்ளது.

சென்னை பன்னாட்டு விமான நிலையத்தில் மாற்றுத்திறனாளிகள் மூலம் இயக்கப்படும் இந்த மலிவு விலை அங்காடிகளில், குடிநீர் புட்டி ரூ.10-க்கும், தேநீர் ரூ.10, காபி ரூ.20, சிற்றுண்டி ரூ.20 (வடை, சோமாஸ், இனிப்பு கேக் வகைகள்) என மிகக் குறைந்த விலையிலும் விற்பனை செய்யப்படுகின்றன. இது தங்களைப் போன்ற சாமானியப் பயணிக்கு மிகப்பெரிய வரப்பிரசாதமாக உள்ளதாக பயணிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.

எனவே, சென்னை, மும்பை, ஹைதராபாத் விமானநிலையங்களில் உள்ளது போல மதுரையிலும் மலிவு விலை உணவு அங்காடியைத் திறக்க மதுரை விமான நிலைய அதிகாரிகள், சம்பந்தப்பட்ட துறையிடம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள், சமூக ஆர்வலர்கள் பெரிதும் எதிர்பார்க்கின்றனர்.

இதுகுறித்து விமானப் பயணி ஒருவர் கூறியதாவது: ’சென்னை விமான நிலையத்தில் உள்ள மலிவு விலை உணவகம் சாமானியப் பயணிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.

இதேபோன்ற அங்காடியை மதுரையிலும் தொடங்கினால், சாமானியப் பயணிகளுக்கு பெரும் நிம்மதியாக இருக்கும். இதற்கு அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.