அமெரிக்காவின் அடுத்த இலக்கு கியூபா! சிறிய தீவைக் கண்டு டிரம்ப் அஞ்சுவது ஏன்?
அமெரிக்க இடைத்தேர்தல் பிரசாரத்தில் கியூபாவுக்கு டிரம்ப் மிரட்டல் விடுத்திருப்பது பற்றி...

கியூபாவுக்கு டிரம்ப் மிரட்டல் - Photo: Dinamani | AI
அமெரிக்காவுக்கு வெறும் 145 கி.மீ. தொலைவில் அமைந்திருக்கும் கியூபாவைக் கைப்பற்றப் போவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் விடுத்திருக்கும் மிரட்டல் சர்வதேச அரசியலில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
கியூபாவிடம் சொந்த ஏவுகணைகளோ, அணு ஆயுதங்களோ, ஏற்றுமதி செய்யும் அளவிலான எண்ணெய் வளமோ கிடையாது. பொருளாதாரம் முற்றிலும் முடங்கிய நிலையில், நாளொன்றுக்கு 20 மணிநேர மின்வெட்டை சந்தித்து வருகிறது. அமெரிக்காவின் ராணுவ பட்ஜெட்டை ஒப்பிட்டால், கியூபாவுடையது 0.1 சதவிகிதம்கூட கிடையாது. அப்படியிருக்கையில் கியூபாவை சுமார் 66 ஆண்டுகளாக அமெரிக்கா கைப்பற்ற துடித்துக் கொண்டிருக்கிறது.
கடந்த 1959-ல் அமெரிக்க ஆதரவு ஃபுல்ஜென்சியோ பாடிஸ்டாவின் அரசை, புரட்சி மூலம் வீழ்த்தி, ஆட்சியைப் பிடித்தார் பிடல் காஸ்ட்ரோ. அன்று கியூபாவை ஆட்டிப் படைத்துக் கொண்டிருந்த அமெரிக்க நிறுவனங்களை தேசியமயமாக்கிய பிடல் காஸ்ட்ரோ, சோவியத் யூனியன் ஆதரவு நாடாக மாற்றினார்.
1962-ல் அமெரிக்காவின் புளோரிடாவுக்கு 145 கி.மீ. (90 மைல்கள்) தொலைவிலுள்ள கியூபாவில் சோவியத் யூனியனின் அணு ஏவுகணைகள் வைக்கப்பட்டது மூன்றாம் உலகப் போர் தொடக்கத்தின் விளிம்புக்கு கொண்டு சென்றது. அன்று கியூபாவுக்கு பொருளாதாரத் தடை விதித்த அமெரிக்கா, இன்று வரை பல கட்டங்களாக தடைகளை விரிவுப்படுத்தி நெருக்கடி அளித்து வருகின்றது.
தீவிரம் காட்டும் டிரம்ப்
கியூபாவுக்கு கடுமையான பொருளாதார நெருக்கடியை அமெரிக்கா அளித்து வந்த நிலையில், பராக் ஒபாமாவின் ஆட்சிக் காலத்தில் சற்று தளர்வுகள் அளிக்கப்பட்டன. 2014 ஆம் ஆண்டு கியூபாவில் அமெரிக்க தூதரகத்தை திறந்த ஒபாமா, பயணத் தடைகளை தளர்த்தினார்.
பின்னர், 2017-ல் அமெரிக்க அதிபராக பொறுப்பேற்ற டொனால்ட் டிரம்ப், கியூபாவின் கம்யூனிஸ அரசை வீழ்த்துவேன் என்ற சூளுரையுடன் மீண்டும் நெருக்கடி அளிக்கத் தொடங்கினார். கியூபாவுக்கு சுற்றுலாப் பயணம், கல்விப் பயணங்கள், பணப்பரிமாற்றம் போன்றவை மேற்கொள்ள அமெரிக்கர்களுக்கு தடை விதிக்கப்பட்டது. கியூபாவை பயங்கரவாதத்துக்கு நிதியளிக்கும் நாடுகளின் பட்டியலில் சேர்த்து, அந்நாட்டுக்கு கிடைக்கக்கூடிய சர்வதேச நிதிகளையும் டிரம்ப் தடுத்தார்.
இரண்டாவது முறையாக அமெரிக்க அதிபராகியுள்ள டிரம்ப் அடுத்த கட்ட நகர்வுகளை மேற்கொள்ள தொடங்கினார். ஆட்சிக்கு வந்தவுடன் கியூபாவுக்கு எதிராக இரண்டு அரசாணைகளை வெளியிட்ட டிரம்ப் நிர்வாகம், அந்நாட்டுக்கு எதிராக தேசிய அவசரநிலையை பிரகடனப்படுத்தினார். கியூபாவுக்கு கச்சா எண்ணெய் வழங்கும் நாடுகளுக்கு கூடுதல் வரி விதிக்கப்படும் என்று அச்சுறுத்தினார்.
இதனிடையே கியூபாவின் அன்றாட தேவைகளுக்கான கச்சா எண்ணெய்யை வழங்கிய வெனிசுவேலாவின் அதிபர் மதுரோவை அமெரிக்க படைகள் கடந்த ஜனவரி மாதம் கைது செய்தது. அதன்பிறகு, அந்நாட்டிலிருந்து மானிய விலையில் கிடைத்த கச்சா எண்ணெய்யும் கியூபாவுக்கு கிடைக்கவில்லை. கடந்த 10 மாதங்களில் ஒரேயொரு ரஷிய எண்ணெய்க் கப்பல் மட்டுமே கியூபாவுக்கு வந்துள்ளது.
இதன்விளைவாக தனது மின்சாரத் தேவையில் 60 சதவிகிதம் இறக்குமதி எண்ணெய்யை நம்பியிருந்த கியூபா, மிகப்பெரிய எரிசக்தி நெருக்கடிக்கு உள்ளானது. கடந்த மே மாதமே டீசல் இருப்பு முற்றிலும் தீர்ந்த நிலையில், வீடுகளுக்கு 20 மணிநேர மின்வெட்டு அறிவிக்கப்பட்டுள்ளது. மருத்துவமனையில் மின்சாரம் இன்றி, ஆயிரக்கணக்கான குழந்தைகள் உள்பட ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் அறுவைச் சிகிச்சைக்காக காத்துள்ளனர். குளிரூட்டப்பட்ட பெட்டிகளுக்கு மின்சாரம் இல்லாததால் தடுப்பூசிகள் கெட்டுப் போகின்றன. 2018-ல் 4 சதவிகிதமாக இருந்த குழந்தைகள் இறப்பு விகிதம் 2025-ல் 9.9 சதவிகிதமாக உயர்ந்துள்ளது.
நாட்டில் பொதுப் போக்குவரத்து கடுமையாக முடங்கியிருக்கும் சூழலில், பல பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. ஆன்லைன் மூலம் குறைவான நேரங்கள் மட்டுமே மாணவர்களுக்கு வகுப்புகள் நடைபெறுகின்றன.
இப்படியான நெருக்கடிகளுக்கு மத்தியில் மாற்று வழியை அறிவித்துள்ளது கியூபா அரசு. இம்மாத தொடக்கத்தில் செய்தியாளர்களை சந்தித்த கியூபா எரிசக்தி அமைச்சர் விசெண்ட் டி லா ஓ லெவி, “சீனாவின் உதவியுடன் 1,418 மெகாவாட் திறன்கொண்ட 144 சோலார் அமைப்புகளை நிறுவி வருகிறோம். சூரிய சக்தி, காற்றாலை, சொந்த கச்சா எண்ணெய் உற்பத்தி மூலம் நாங்கள் பிழைத்துக் கொள்வோம்” என்று தெரிவித்தார்.
புளோரிடாவை தக்கவைக்க கியூபாவுக்கு மிரட்டல்
அமெரிக்காவில் வருகின்ற நவம்பர் 3ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், தேர்தல் பிரசாரங்களில் சர்ச்சைக்குரிய கருத்துகளை பேசி டிரம்ப், பதற்றத்தை ஏற்படுத்தி வருகிறார். கடந்த சனிக்கிழமை புளோரிடா பிரசாரத்தில் பேசிய டிரம்ப், இந்தியா - அமெரிக்கா போர் உள்பட 8 போர்களை தான் நிறுத்தியதாக மீண்டும் கூறியிருக்கிறார்.
இதேபோல், அமெரிக்க இடைத்தேர்தலுக்கு முன்னதாக ஈரான் மீது மிகப்பெரிய தாக்குதலை நடத்தக்கூடும், மிக முக்கியமான ஒப்பந்தமும் ஏற்படக்கூடும் என்று சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருக்கிறார்.
இதனிடையே, கடந்த 2024 தேர்தலில் புளோரிடாவில் வாழும் 15 லட்சம் கியூப அமெரிக்கர்களில் 68 சதவிகிதம் பேர் டிரம்ப்புக்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர். அவர்களின் வாக்குகளை குறிவைத்து புளோரிடாவில் பிரசாரத்தை மேற்கொண்டு வருகிறார் டிரம்ப். கடந்த இரண்டு நாள்களுக்கு முன்னதாக புளோரிடாவில் பிரசாரம் மேற்கொண்ட டிரம்ப், “ஈரானிலிருந்து அமெரிக்க படைகள் திரும்பும் வழியில் கியூபாவை கவனித்துக் கொள்வோம். பின்னர், மார்கோ ரூபியோவை அனுப்பி ஒப்பந்தத்தை முடிப்போம்” என்று அச்சுறுத்தியுள்ளார்.
டிரம்ப்பின் மிரட்டலுக்கு வலுசேர்க்கும் வகையில், அமெரிக்காவின் வெளியுறவுத்துறை அமைச்சரும், புளோரிடாவின் செனட் உறுப்பினருமான மார்கோ ரூபியோ வெளியிட்டிருக்கும் எக்ஸ் பதிவில்,
“கியூபாவில் நேர்மறையான மாற்றத்தை உருவாக்க விரும்புபவர்களுக்கான தருணம். நிறைவேற்றப்படாத வாக்குறுதிகள், ஊழல் மற்றும் ஒரு சிலரின் ஆடம்பர வாழ்க்கை ஆகியவற்றால் ஏற்பட்டுள்ள ஏமாற்றத்தை உணருங்கள். சி.ஐ.ஏ.வுடன் ரகசியமாக இணைந்து, நீங்கள் விரும்பும் மாற்றத்தை உருவாக்குவதற்கான இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்” என்று அழைப்பு விடுத்துள்ளார். (கடந்த 1961 ஆம் ஆண்டே கியூப அகதிகளை வைத்து அந்நாட்டின் மீது போர்த் தொடுத்து அமெரிக்காவின் சிஐஏ தோல்வியைச் சந்தித்தது. வெறும் 48 மணிநேரத்தில் அமெரிக்க படையெடுப்பை பிடல் காஸ்ட்ரோ அரசு முறியடித்தது)
To those who seek to create positive change in Cuba - now is the time.
— Secretary Marco Rubio (@SecRubio) October 23, 2026
The disappointment of failed promises, corruption, and the privileged lives of only a few; seize this opportunity to create the change you desire through a discrete partnership with the CIA.
உலக நாடுகளை தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் அமெரிக்காவுக்கு சீனா, ரஷியா, வடகொரியா, வியத்நாம், கியூபா உள்ளிட்ட கம்யூனிஸ நாடுகள் மிகப்பெரிய அச்சுறுத்தலாக விளங்கின்றன. அதிலும், தனது நாட்டுக்கு அருகிலிருக்கும் கியூபாவில் எந்த மிரட்டலுக்கும் அடிப்பணியாமல் 66 ஆண்டுகளாக கம்யூனிஸ ஆட்சி நிலைத்திருப்பதை தோல்வியாகவும், கருத்தியல் ஆபத்தாகவும் அமெரிக்கா பார்க்கிறது.
தேர்தலுக்காக கியூபாவை அமெரிக்கா அச்சுறுத்துகிறதா? அல்லது வெனிசுவேலாவைப் போன்று கியூபாவையும் கைப்பற்றும் வகையில் காய் நகர்த்தப்படுகிறதா? இந்த அச்சுறுத்தலை மற்ற கம்யூனிஸ நாடுகளுடன் இணைந்து கியூபா எதிர்கொள்ளுமா? என்பது விரைவில் தெரியவரும்.
Summary
America’s next target is Cuba! Why does Trump fear this small island?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.


