அத்திக்கடவு, அவிநாசி திட்டத்துக்கு ஆரம்ப கட்ட பணிகளுக்கு17 மாதங்கள் தேவை: உயர்நீதிமன்றத்தில் அரசு தகவல்  

Published on
Updated on
1 min read

அத்திக்கடவு, அவிநாசி திட்டத்துக்கு சுற்றுச்சூழல், வனத்துறை அனுமதி போன்ற ஆரம்பகட்ட பணிகளை மேற்கொள்வதற்கு 17 மாதங்கள் தேவைப்படுகிறது என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.  

சென்னை உயர்நீதிமன்றத்தில், அத்திக்கடவு, அவிநாசி திட்டத்தை விரைந்து செயல்படுத்தக் கோரி கோவை மாவட்டத்தைச் சேர்ந்த ஒத்திசாமி என்பவர் தாக்கல் செய்த மனு விவரம்:அண்ணூர், அவிநாசி, திருப்பூர், பல்லடம் உள்ளிட்ட பகுதி மக்களின் குடிநீர், விவசாய தேவையை பூர்த்தி செய்யவும், நிலத்தடி நீர் மட்டம் அதிகரிக்கவும் அத்திக்கடவு- அவிநாசி கால்வாய் திட்டத்தை நிறைவேற்ற வேண்டுமென்ற கோரிக்கை, பல ஆண்டு காலமாக இருந்து வருகிறது. இத்திட்டத்தின் மூலம் கோவை, ஈரோடு, திருப்பூர் மாவட்ட மக்களும் பலன் அடைவர். எனவே, இத்திட்டத்தை விரைவாக முடிக்க உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தார்.

நீதிமன்றம் கண்காணிக்கும்:இந்த மனு தலைமை நீதிபதி எஸ்.கே.கெளல், நீதிபதி ஆர்.மகாதேவன் ஆகியோர் அடங்கிய முதல் அமர்வு முன்பு வெள்ளிக்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக பொதுப் பணித்துறை தலைமை பொறியாளர் எஸ்.தினகரன் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கை விவரம்:அத்திக்கடவு- அவிநாசி கால்வாய் திட்டத்துக்கு சுற்றுச்சூழல் தடையில்லா சான்று, வனச்சான்று, நிலத் திட்ட அட்டவணை தயாரித்தல் உள்ளிட்டவை பெற வேண்டியுள்ளது.மத்திய அரசின் பல்வேறு துறைகளிடம் இருந்து அனுமதி பெற வேண்டியுள்ளது. 

இந்த ஆரம்பகட்ட பணிகளை மேற்கொள்வதற்கு, 17 மாதங்கள் தேவைப்படுகிறது. இந்தத் திட்டத்தை செயல்படுத்துவதற்கான ஆரம்ப கட்ட பணிகளுக்கு, கடந்த பிப்ரவரியில் ரூ. 3.27 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், திட்டத்துக்கான ஆரம்பகட்ட பணிகளை மேற்கொள்வதற்கு கால அவகாசம் வழங்கப்படுகிறது. 

ஆனால், தமிழக அரசு குறிப்பிட்ட கால அட்டவணையின்படி, திட்டத்துக்கான ஆரம்பகட்ட பணிகள் நடைபெறுகிறதா என்பதை இந்த நீதிமன்றம் கண்காணிக்கும் என்று உத்தரவிட்டு விசாரணையை டிசம்பர் 16-ஆம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.

இந்த மனு கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது, இந்தத் திட்டத்தை விரைவாக முடிக்கும் வகையில் காலநிர்ணயம் செய்து அதற்கான அட்டவணையை  மத்திய, மாநில அரசுகள் ஒரு மாதத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தது குறிப்பிடதக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com