கேரள நடிகை கடத்தி துன்புறுத்தப் பட்ட வழக்கில் மலையாள நடிகர் திலீப்புக்கு தொடர்பு உண்டா?

கேரள நடிகை கடத்தப்பட்ட வழக்கில் பிரபல மலையாள நடிகர் திலீப்புக்கு தொடர்பிருக்கலாம் என சந்தேகிக்கப் படுகிறது. திலீப் தனது முதல் மனைவியான பிரபல நடிகை மஞ்சு வாரியரை பிரிவதற்கு நடிகை பாவனா தான் காரணமாக இர
Published on
Updated on
2 min read

பிரபல கேரள நடிகை நேற்று முன் தினம் மர்மக் கும்பலால் காரில் கடத்தப்பட்டு பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்ட விவகாரத்தில் ஏழு பேரிடம் சந்தேகத்தின் அடிப்படையில் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

தமிழ், மலையாளப் படங்களில் நடித்துப் புகழ்பெற்ற நடிகை நேற்று முன்தினம் இரவு படப்பிடிப்பு முடித்து கொச்சியிலிருந்து திருச்சூருக்குத் திரும்பிவந்துகொண்டிருந்தார். எர்ணாகுளம் மாவட்டத்தைச் சேர்ந்த அங்காமலி அருகே உள்ள அதானிப் பகுதியில் அவர் கார் வந்துகொண்டிருந்தபோது மர்மக் கும்பல் ஒன்று காரை வழிமறித்தது. வேனில் வந்த அந்தக் கும்பல் நடிகையின் காரை மோதியது. அந்தச் சூழலைப் பயன்படுத்தி காருக்குள் புகுந்தது மர்மக் கும்பல்.

ஓட்டுநர் மார்டினைத் தாக்கி வெளியேற்றி, எதிர்பாராதவிதமாக அந்த நடிகையை அதே காரில் வைத்து கடத்தியது. ஒன்றை மணி நேரம் காரில் நடிகைக்கு பாலியல் ரீதியாகத் துன்புறுத்தல் அளித்தது. பலரிவட்டோம் என்கிற இடம் வருகிறவரை இந்தத் தொல்லை நீடித்துள்ளது. கூடுதலாக நடிகையைப் புகைப்படம் எடுத்தும் வீடியோவில் பதிவு செய்தும் அத்துமீறல் நிகழ்த்தப்பட்டது. பிறகு காரில் இருந்து இறங்கி மற்றொரு காரில் ஏறி தப்பிச் சென்றுள்ளது அந்தக் கும்பல்.

இதையடுத்து காகாநாடில் உள்ள ஓர் இயக்குநரின் வீட்டுக்குத் தானே காரை ஓட்டிச் சென்று உதவி கோரியுள்ளார் அந்த நடிகை. பிறகு இச்சம்பவம் குறித்து காவல்துறையிடம் புகார் அளிக்கப்பட்டது. நடிகையின் முன்னாள் கார் ஓட்டுநர் சுனில் குமார் அந்தக் கும்பலில் இருந்து காருக்குள் நுழைந்ததாக கூறியுள்ளார். மேலும் தற்போது தனக்கு ஓட்டுநராக உள்ள மார்டினுக்கும் இச்சம்பவத்தில் தொடர்பு இருப்பதாக அவர் புகார் அளித்ததையடுத்து கார் ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில் காவல்துறை உயரதிகாரி ஒருவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், ' இந்த சம்பவம் தொடர்பாக ஏழு பேரிடம் விசாரணை நடத்தி வருகிறோம். அவர்களிடம் முறையாக உறுதி செய்த பின்தான் இந்த விவகாரத்தில் அவர்களது பங்கு என்ன என்பது தெரிய வரும்' என்று தெரிவித்தார்.  

கேரளா முதல்வர் பினராயி விஜயன் பேசும் பொழுது இந்த விவகாரத்தில் ஈடுபட்டவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், விரைவில் அவர்கள் கைது செய்யப்படுவார்கள் என்றும் தெரிவித்தார்,.  

கேரள காவல்துறை டி.ஜி.பி லோக்நாத் பெஹெரா இந்த விவகாரத்திற்காக சிறப்பு விசாரணைக் குழு ஒன்று உருவாக்கப்பட்டு உள்ளதாகவும், கோயம்புத்தூர் உள்ளிட்ட இடங்களில் பிற குற்றவாளிகளை தேடும் பணி நடந்து வருகிறது என்றும் தெரிவித்தார்.

பிரபல நடிகைக்கு நேர்ந்த இச்சம்பவத்தால் திரையுலகில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தற்போது நடிகை கடத்தி துன்புறுத்தப் பட்ட வழக்கில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப் பட்டு வருவதாக கேரள காவல்துறையினர் தெரிவித்தனர். மேலும் நடிகை கடத்தப்பட்ட வழக்கில் பிரபல மலையாள நடிகர் திலீப்புக்கு தொடர்பிருக்கலாம் என சந்தேகிக்கப் படுகிறது. திலீப் தனது முதல் மனைவியான பிரபல நடிகை மஞ்சு வாரியரை பிரிவதற்கு அந்த நடிகை தான் காரணமாக இருந்தார் என மலையாளப் பட உலகில் செய்திகள் கசிகின்றன. இதனால் இந்த விவகாரத்தில் நடிகர் திலீப்புக்கும் தொடர்பிருப்பதாக சந்தேகிக்கப் பட்ட நிலையில் திலீப் அதை மறுத்திருக்கிறார்.

நடிகை கடத்தப் பட்ட விவகாரத்தில் மலையாளப் பட உலகோடு தமிழ் திரையுலகினரும் குற்றவாளிகளுக்கு எதிராகக் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். தமிழ், தெலுங்கு, மலையாளம் என பிரபலமாக நடித்துக் கொண்டிருந்த ஒரு இளம் நடிகைக்கே இத்தனை பாதுகாப்பில்லாத நிலை நிலவுகிறது எனில் பிற இளம் பெண்களின் பாதுகாப்பு குறித்து எந்த விதத்தில் நம்பிக்கை கொள்ள முடியும்? இந்தியா முழுவதுமே மூன்று வயதுக்குழந்தை முதல் பிரபல நடிகை வரை பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் அதிகரித்து வருகின்ற நிலையில் பெண் இனத்தின் பாதுகாப்பு குறித்து தற்போது  பரவலான அச்சமும், கடும் கண்டனமும் நிலவி வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com