

2015 ஆம் ஆண்டு சென்னை பெருவெள்ளச் சேதத்தின் போது சமூக ஆரவலர்களால் முன் வைக்கப்பட்ட பல பிரச்சினைகளில் முதன்மையானது மலம் அள்ளும் துப்புறவுத் தொழிலாளர்களின் நீண்டகால வாழ்நாள் போராட்டம் பற்றியது. சென்னை வெள்ளத்தினால் உண்டான கணக்கற்ற கழிவுகளையும், கால்வாய் அடைப்புகளையும், சுத்தம் செய்ய பெருநகரத்திலிருக்கும் துப்புறவுப் பணியாளர்களின் எண்ணிக்கை போதாமல் தென் மாவட்டங்களில் இருந்தும் துப்புரவுப் பணியாளர்கள் வரவழைக்கப்பட்டனர். தென் மாவட்டங்கள் மட்டுமல்ல வட இந்திய துப்புரவுத் தொழிலாளர்களும் இந்தப் பணியில் ஈடுபடுத்தப் பட்டனர். இவர்களுக்கு வழக்கத்தைக் காட்டிலும் கூடுதலாக ஊதியம் வழங்கப் படும் எனும் உறுதி மொழியின் பேரில் அழைத்து வரப்பட்டார்கள். ஆனால் நடந்ததென்னவோ வழக்கம் போல வாக்களித்தபடி போதுமான ஊதியம் வழங்கப் படவில்லை. ஊதியம் மட்டுமல்ல கழிவுகளை சுத்தம் செய்யவும், அப்புறப்படுத்தவும் போதிய உபகரணங்கள் கூட அளிக்கப்படாமல் வெறும் கைகளால் வேலை செய்யும்படி அவர்கள் நிர்பந்திக்கப்பட்டார்கள் என அப்போதைய பத்திரிகைச் செய்திகள் பல செய்திகளை வெளியிட்டன. அப்படி நிர்பந்திக்கப்பட்டவர்களில் சிலரிடையே போதிய முன்னெச்சரிக்கையுடனான பாதுகாப்பு உபகரணங்கள் இன்றி விச வாயு தாக்கி உயிரிழப்பும் ஏற்பட்டது.
அப்போதே ‘பத்திரிகையாளர் ஜெயராணி’ விகடனில் இந்தப் பிரச்சினையின் ஆழம் பற்றியும் அழைத்து வரப்பட்ட துப்புரவுப் பணியாளர்கள் சென்னையில் நடத்தப்பட்ட விதம் குறித்தும் அப்பட்டமாகப் பதிவு செய்திருந்தார். துப்புரவுப் பணியாளர்களைப் பொறுத்தவரை எங்கும், எப்போதும் நிலவும் மாற்றமில்லா ஒரு நிலை, அந்தப் பணியில் ஈடுபடுத்தப் படுவோர் பெரும்பாலும் அந்த மக்களின் வார்த்தைகளிலேயே குறிப்பிட வேண்டுமெனில் ஆதி திராவிடர், அருந்ததியர், குறவர், சக்கிலியர் உள்ளிட்ட பிரிவினர் தான். ஏன் மக்களில் வேறெந்தப் பிரிவினரும் இப்படி ஒரு வேலையைச் செய்ய முன் வரவில்லை? என்பதைத் தாண்டி ஏன் இவர்கள் மட்டும் இப்படி ஒரு பாதுகாப்பற்ற ஒரு பணியில் தலைமுறை தலைமுறைகளாக ஈடுபடுத்தப் பட வேண்டும் எனும் காத்திரமான கேள்வி இம்மக்களின் மனதில் ஆறாத ரணமாகப் பொங்கிப் புரையோடிப் போயிருக்கிறது.
உண்மையில் அரசு இவர்களது நலனுக்காக என்று பல்வேறு திட்டங்களை அறிவித்திருந்தாலும், அந்தத் திட்டங்களின் பலன் முழுமையாக அவர்களைச் சென்றடைந்ததா? என்பது கேள்விக் குறி. இம்மக்களுக்காகப் பேச அவர்களுக்குள்ளும் அரசியல் தலைவர்கள் பலர் இருக்கிறார்கள். ஆனால் அவர்களுக்கு அரசியல் லாபங்கள் தாண்டித் தான் பிரச்சினைகள் கண்ணில் படக் கூடும். தனி நபர் சமூக ஆர்வலர்கள் தாங்களாக முன் வந்து துப்புரவுத் தொழிலாளர்களின் ஆண்டாண்டு காலமான வாழ்வாதாரப் பிரச்சினை குறித்துப் பேசும் போது அதற்கான வலு கூடித் தான் போகிறது.
இதோ திவ்யா எனும் இளம்பெண் மலம் அள்ளும் துப்புரவுத் தொழிலாளிகளின் பிரச்சினைகளை முன் வைத்து ‘கக்கூஸ்’ என்ற பெயரில் ஆவணப் படம் எடுத்திருக்கிறார். கடந்த ஞாயிறன்று இந்த ஆவணப் படம் திரையிடப்பட்டது.
இப்படி ஒரு தலைப்பில் ஆவணப் படம் எடுக்கத் தோன்றியது எப்படி? என்ற கேள்விக்கு திவ்யா அளித்த பதில்... ‘ஒருமுறை மலம் அள்ளும் துப்புரவுப் பணியாளர்கள் சிலர் தங்களது பணியின் போது விச வாயு தாக்கி இறந்த நிலையில் கதறி அழும் அவர்களது இளம் மனைவிகளைக் காணும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. அந்த துயரத்தை அப்படியே போகட்டும் என விட்டு விட்டு என்னால் வேறு வேலையில் கவனம் செலுத்த இயலவில்லை. அவர்களது பல்லாண்டு காலப் பிரச்சினையை இந்த அரசு தீர்க்க வேண்டும், மக்களின் மனதில் சக மனிதர்களை இப்படி ஒரு கீழான வேலைக்கு உட்படுத்துவதின் பெயரிலான குற்ற உணர்வைத் தட்டி எழுப்ப வேண்டும் என்பதே இந்த ஆவணப் படத்தின் நோக்கம்’ எனத் தெரிவித்திருக்கிறார்.
உச்சநீதிமன்றம் மனிதக் கைகளால் மலம் அள்ளத் தடை விதித்திருக்கிறது. ஆனாலும் இப்போதும் நாம் கண்கூடாகக் காண்கிறோம், எத்தனையோ துப்புரவுத் தொழிலாளர்களை அவர்களது வறுமையைப் பயன்படுத்தி கைகளால் மலம் அள்ள வைத்துக் கொண்டு தான் இருக்கிறது இந்த சமூகம். இதில் மிகவும் கவலைக்கிடமான விசயம். இந்தத் தொழிலாளர்களுக்கு போதிய துப்புரவு உபகரணங்களைக் கூட இந்த அரசு வழங்குவதில்லை. சமூகமும் அதைப் பற்றிக் கவலைப் படுவதில்லை.
பல்வேறு நோய்களுக்கு மூலகாரணமான மனிதக் கழிவுகளை வெற்றுக் கைகளால், வேறு எந்த முன் எச்சரிக்கை உபகரணங்களும் இன்றி சுத்தம் செய்து விட்டு குறைந்த ஆயுளில் உயிரிழக்கும் எண்ணற்ற துப்புரவுத் தொழிலாளிகளின் ஆழ்மன விசாரம் தான் இந்த ஆவணப் படம். இதைப் பார்த்த பின்பாவது இந்தச் சமூகம் தங்கள் சக மனிதனை இப்படியான ஆபத்தான வேலைகளுக்கு ஒதுக்காமல் அவர்களது நலன் குறித்தும் அக்கறை காட்ட வேண்டும் எனும் விழிப்புணர்வுக்கானதே இந்தப் படம்.
கக்கூஸ் ஆவணப் படத்தின் டிரெய்லர்...
‘மனிதக் கழிவை மனிதர் அகற்றும் இழிவை அழித்தொழிக்க’
- என்ற வரிகளோடு தொடங்கும் இப்படத்தின் டிரெய்லரில் வசனங்கள் ஒவ்வொன்றும் பொளேர் ரகம். பாதிக்கப்பட்டவர்களின் உள்ளக் குமுறல்களான இந்தக் கேள்விகள் அனைத்தும் இந்த சமுதாயத்தை நோக்கியே கேட்கப் படுகிறது.
‘தமிழ்நாட்ல மாடுங்களுக்கு கூட விடுதலை கிடைச்சிருச்சு, எங்களைப்போல அருந்ததியர் சமூகத்துல பிறந்த மனுசனுக்குத் தான் இன்னும் விடுதலையே கிடைக்கல’
‘இந்த மாதிரி குப்பை அள்ளுறதைப்பார்த்துட்டு என் மகன் என்னைத் தொடாதம்மா, கையைக் கழுவிட்டு என்னைத் தூக்கும்மான்னு சொல்றான். கேட்கும் போது கஷ்டமா இருக்கு’
‘ இதுக்குன்னே எங்கள போட்டுட்டாங்க...’
‘லெட்டின் பாத்ரூம் கழுவற வேலையைப் பார்த்தீங்கன்னா செத்துறலாம்’
‘ரொம்பக் கஷ்டம்ங்க சாமி, இந்த வேலையச் செய்றத விட பிச்சையெடுத்து சாப்பிடலாமான்னு இருக்கு’
‘சக்கிலியன்னா மனுஷன் கிடையாதா?’
‘எங்களுடைய வறுமையை இந்த சமுதாயம் பயன்படுத்திக் கொள்கிறது.’
’இதுக்கெல்லாம் மரியாதை இல்லை மேடம், தேடவும் முடியாது, கேட்கவும் முடியாது காலம் பூரா கஷ்டப் பட்டு சீக்கிரம் சாக வேண்டியது தான், அவ்ளோ தான்’
ஒருமுறை இந்த டிரெய்லரைப் பார்க்க நேர்ந்தவர்களுக்கு, இம்மக்களின் மீதான மரியாதை கூடி அவர்களை சக மனிதர்களாகப் பாவித்து, அவர்களுக்கான சமூக நீதி கிடைக்கச் செய்தால் அதுவே இந்த ஆவணப் படத்துக்கான வெற்றி எனலாம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.