

அடிக்கடி ரயிலில் பிரயாணங்கள் மேற்கொள்பவர்களுக்கு ரயிலில் வழங்கப் படும் உணவு வகைகள் மிகப்பெரிய பிரச்சினையாக இருந்து வருகின்றன. ரயில்வே கேண்ட்டீன் உணவுகளின் தரத்தையும், உணவு தயாரிப்பில் கேண்டீன் உரிமையாளர்கள் மற்றும் பணியாளர்கள் பின்பற்றும் சுகாதாரக் குறைவான முறைகளையும் காட்சிப்படுத்தி இயக்குனர் சங்கரின் ‘அந்நியன்’ திரைப்படத்தில் காட்சிகள் வைக்கும் அளவுக்கு ரயில்வே கேண்ட்டீன் மற்றும் ரயில் பிரயாணிகள் இடையிலான பந்தம் எப்போதும் ஏழாம் பொருத்தம்.
இந்தியாவைப் பொறுத்தவரை ரயிலில் பிரயாணிப்பவர்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வரும் நிலையில், இன்று புது டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்த ரயில்வே மத்திய அமைச்சர் சுரேஷ் பிரபு, ரயில்வே கேண்ட்டீன்களில் தயாராகும் உணவுகளின் தரம் மட்டுமல்ல அவை சமைக்கப்படும் முறைகளையும் கூட புதுமையாகவும், பாரம்பரிய முறைப்படியும் இருக்கும் படியாக மாற்றியமைக்கும் முயற்சிகளை ரயில்வே நிர்வாகம் செயல்படுத்த இருப்பதாக அறிவித்திருக்கிறார்.
மாநிலங்களவை கேள்வி நேரத்தின் போது ரயில்வே கேண்ட்டீன் உணவுகளின் தரம் மற்றும் அவை பரிமாறப்படும் முறைகள் குறித்து விவாதிக்கப்பட்டதாகவும், ரயில் பயணிகளின் ஆரோக்கியத்தை கணக்கில் கொண்டு இனி ரயில்வே கேண்ட்டீன் உணவு வகைகளைத் தயாரிக்க ‘அடிப்படை சமையலறைகள்’ உருவாக்கப்பட்டு ரயில் உணவுகளின் தரமும், சுவையும் உறுதி செய்யப்படும் என்று தெரிவித்தார்.
தரமான உணவு ஏஜன்ஸிகள் மூலம் அடிப்படை சமையலறைகளில் தயாரிக்கப்படும் உணவு வகைகள் மிகவும் சுகாதாரமான முறையில் பேக் செய்யப்பட்டு பயணிகளைச் சென்றடையும் படியாக நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
இந்தியாவில் பல்வேறு விதமான உணவுப் பழக்க வழக்கங்கள் பின்பற்றப்படுகின்றன. அந்த வகையில் அந்தந்த மாநில பயணிகளின் விருப்பப்படி அவரவர் பாரம்பரிய உணவு வகைகள் ரயில்வே கேண்டீன்களில் கிடைக்கும் படியாகச் செய்வதும் தங்களது நோக்கம் எனவும் அவர் தெரிவித்தார்.
மேலும் இத்தனை சிரத்தை எடுத்து சமைத்துப் பரிமாறப்படும் உணவு வகைகளில் பயணிகளுக்கு ஏதாவது செளகரியக் குறைவுகளோ, திருப்தியின்மையோ இருந்தால் உடனடியாக ரயில்வே நிர்வாகத்திற்கு தெரிவிக்க உதவும் வகையில் ஹாட்லைன் வசதிகளும் செய்யப்படவிருப்பதாகவும் அமைச்சர் தெரிவித்திருக்கிறார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.