
கேரளாவில் வழக்கமாக தென் மேற்குப் பருவ மழைக் காலத்தில் பெய்யும் மழை அளவைக் காட்டிலும் மிக மிகக் கூடுதலாகப் பெய்துள்ளது. இந்த வருடம், சென்ற ஜூன் 1-ம் தேதியிலிருந்து ஆகஸ்ட் 15-ம் தேதி வரை மட்டும், வழக்கத்தை விட 30% அதிக மழையை கேரளா பெற்றுள்ளது. இந்த காலத்தில் இயல்பான மழை அளவு 1606.5 மிமீ மட்டுமே. ஆனால் தற்போது 2086.8 மிமீ மழை பெய்துள்ளது. 1924-ம் ஆண்டிற்குப் பிறகு இப்போதுதான் இந்த அளவிற்கு கடுமையான மழையையும் வெள்ளத்தையும் கேரளா சந்தித்துள்ளது. சுமார் 14 மாவட்டங்களில் உள்ள 2000க்கும் அதிகமான கிராமங்களை மழை, வெள்ளம் உருத்தெரியாமல் புரட்டிப் போட்டுள்ளது. வயநாடு பகுதியில் 54 மணி நேரத்தில் 800 மி.மீ. மழை பதிவாகியிருப்பது வரலாற்றில் பதிவு செய்யப்பட வேண்டிய நிகழ்வாக மாறியிருக்கிறது.
மழை மற்றும் வெள்ளத்தால் இதுவரை 324 பேர் பலியான நிலையில், ஆயிரக்கணக்கானோர் உணவு உறைவிடம் இன்றி தவிக்கின்றனர். கிட்டத்தட்ட 2.23 லட்சம் மக்கள் 1500 மேற்பட்ட நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். கடந்த 94 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பெய்து வரும் கன மழையால் கேரளாவில் 14 மாவட்டங்களில் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கிப் போய் உள்ளது. இந்த வெள்ளத்தால் கேரள மாநிலம் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அங்குள்ள அனைத்து கிராமங்களும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன. இயற்கையின் இந்த கோர தாண்டவத்தால் கேரள வெள்ளக்காடாக காட்சியளிகிறது. கன மழை, நிலச்சரிவு, வெள்ளம் ஆகிய மும்முனைத் தாக்குதலை சமாளிக்க முடியாமல் மக்கள் தவித்து வருகின்றனர்.
80 அணைகள் திறந்துவிடப்பட்ட நிலையில், நிலமை மேலும் மோசம் அடைந்தது. கிட்டத்தட்ட 20000 மேற்பட்ட வீடுகள் தரைமட்டமாகின. உயிர் பிழைத்த மக்கள் தங்கள் வீடுகளின் மொட்டை மாடிகளில் இருந்து உதவி கேட்டு குரல் எழுப்புகின்றனர். இந்நிலையில், இந்தியாவின் பல்வேறு மாநிலங்களின் சார்பில் அந்தந்த முதல்வர்கள் நிவாரண உதவித் தொகைகளை அறிவித்துள்ளனர்.
தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் அதிகபட்சமாக ரூ.25 கோடி கேரளாவுக்கு நிவாரண உதவித் தொகையாக வெள்ளிக்கிழமை அறிவித்துள்ளார். மேலும் ரூ.2.50 கோடி மதிப்பிலான குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரங்களையும் அனுப்புமாறு உத்தரவிட்டுள்ளார்.
அதுபோல ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, பஞ்சாப் முதல்வர் அமரிந்தர் சிங், தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் ஆகியோர் கேரளாவுக்கு நிவாரண உதவித் தொகையாக தலா ரூ.10 கோடி வழங்கி அறிவித்துள்ளனர்.
மேற்சொன்னவை ஊடகங்கள் மூலமாகவும் சமூக வலைத்தளங்களிலும் வெளியான செய்திகள். ஆனால் பாதிப்புக்கள் இதையெல்லாம் விட மிக அதிகம் என்பதுதான் உண்மை. தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையிலும், பெருக்கெடுத்து ஓடிக் கொண்டிருக்கும் வெள்ள நீர் இன்னும் வடியாததாலும், மக்கள் தங்கள் வாழ்வாதாரங்களை விட்டுவிட்டு உயிர் பிழைக்க முகாம்களை நாடி வருகிறார்கள். இந்நிலையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கேரள முதல்வரின் இடர்பாடு நிவாரண நிதி மூலம் உதவி தொகையை நாமும் அனுப்பலாம்.
A/C NO: 67319948232
BANK: STATE BANK OF INDIA
BRANCH: CITY BRANCH, THIRUVANANTHAPURAM
IFS CODE: SBIN0070028
உதவி தொகையை இணையதளத்தின் மூலமாகவும் அனுப்பலாம். இணையதள முகவரி,
https://donation.cmdrf.kerala.gov.in
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.