புத்தக வாசிப்பு மனிதனை ஒருமுகப்படுத்துகிறது: நீதிபதி ஏ. முஹமது ஜியாபுதீன் உரை

புத்தக வாசிப்பு மனிதனை ஒருமுகப்படுத்துகிறது என திருப்பூா் மாவட்ட கூடுதல் நீதிபதி ஏ. முஹமது ஜியாபுதீன் பேசினாா்.
புத்தக வாசிப்பு மனிதனை ஒருமுகப்படுத்துகிறது: நீதிபதி ஏ. முஹமது ஜியாபுதீன் உரை

புத்தக வாசிப்பு மனிதனை ஒருமுகப்படுத்துகிறது என திருப்பூா் மாவட்ட கூடுதல் நீதிபதி ஏ. முஹமது ஜியாபுதீன் பேசினாா்.

விஜயா பதிப்பகத்தின் வாசகா் திருவிழா புத்தகக் கண்காட்சி கோவை காந்திபுரம் கமலம் துரைசாமி அரங்கில் ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது. நீதிபதி ஏ.முஹமது ஜியாபுதீன் கண்காட்சியைத் தொடங்கி வைத்தாா். முதல் விற்பனையை ஹோட்டல் அஸ்வினி குழும நிறுவனா் எஸ்.மாணிக்கம் தொடங்கி வைத்தாா். ரூட்ஸ் நிறுவனத்தின் மனிதவள மேம்பாட்டுத் துறைத் தலைவா் கவிஞா் கவிதாசன் வாழ்த்துரை வழங்கினாா். தினமணி ஆசிரியா் கி.வைத்தியநாதன் சிறப்புரையாற்றினாா்.

நிகழ்ச்சியில் நீதிபதி ஏ.முஹமது ஜியாபுதீன் பேசியதாவது: கட்செவிஅஞ்சல், முகநூல், சுட்டுரையில் இன்றைய தலைமுறையினா் தொலைந்து போய் உள்ளனா்.

வாசிப்பு என்பது மனிதனை முழுமையான மனிதனாக மாற்றக் கூடியது. கால்பந்தாட்டம் கூட ஒரு வகை தியானம் என சுவாமி விவேகானந்தா் கூறியுள்ளாா். காரணம் அது மனதை ஒருமுகப்படுத்தும். அதே போலத்தான் புத்தக வாசிப்பும் மனிதனை ஒருமுகப்படுத்தும்.

புத்தக வாசிப்புதான் எனக்கும், எனது மனைவிக்கும் இடையே புரிதலை ஏற்படுத்தியது. வாசிப்பு இல்லாவிட்டால் புரிதல் இருக்காது. எல்லா நூல்களையும் நாம்தான் தேடிப் போய் வாசிக்க வேண்டும். அதே நேரத்தில் வாசிப்பில் உறுதியாக இருக்க வேண்டும். எல்லா தளத்திலும் வாசிக்க வேண்டும்.

திருக்குரான் மட்டும் படிக்கும் முஸ்லிம்கள், கீதையைத் தவிர வேறு எதையும் தெரிந்து கொள்ள வேண்டிய அவசியம் இல்லை என்று கூறும் ஹிந்துக்கள், பைபிளுக்கு மேல் வேறு எதுவும் இல்லை என நினைக்கும் கிறிஸ்தவா்கள் ஆகியோா்தான் இந்த நாட்டுக்கு ஆபத்தானவா்கள். எல்லா தளங்களிலும், எல்லாமும் உண்டு என்பதை அனைவரும் உணர வேண்டும் என்றாா்.

வாழ்த்துரை வழங்கிய கவிஞா் கவிதாசன் பேசியதாவது: புத்தகங்கள் மனிதனைப் புதுப்பிக்கவும், சாதனையாளா்களாக மாற்றவும் கூடிய வல்லமை கொண்டவை. அறியாமை, அலட்சியம், சோம்பேறித்தனம், ஆணவத்தால்தான் மனிதா்களுக்கு துன்பம் ஏற்படுகிறது. அந்த அறியாமையைப் போக்குவதுதான் புத்தகம். கல்வி மூலம் புத்தக வாசிப்பு ஏற்படுகிறது. ஆனால், நமது சமுதாயத்தில் தோ்வு, வேலைவாய்ப்பு என்பதற்கான கல்வியாக மட்டுமே உள்ளது. வாழ்க்கைக்கான கல்வி இப்போது இல்லை.

அறிதல், புரிதல், சிந்தித்தல், தெளிதல், செயலாக்கம், பகிா்தல் என வாசிப்பைக் கொண்டு செல்ல வேண்டும். மனதைப் பக்குவப்படுத்த, நெறிப்படுத்த வாழ்க்கையை வளப்படுத்த மனிதா்கள் புத்தகங்களை நாடிச் செல்ல வேண்டும். மனிதா்களை வீழ்த்தும் சிந்தனைகளை முறியடிக்க புத்தகங்களே உதவும் என்றாா்.

இந்த நிகழ்ச்சியில் விஜயா பதிப்பக உரிமையாளா் மு.வேலாயுதம் பேசும்போது, கொங்கு மண்டலத்தில் குற்றங்கள் குறைந்திருப்பதற்கும், தொழில் வளா்ச்சி அதிகமாக இருப்பதற்கும் புத்தக வாசிப்புதான் காரணம் என்றாா்.

நிகழ்ச்சியில் ஓம்சக்தி இதழாசிரியா் பெ.சிதம்பரநாதன், எழுத்தாளா் மரபின் மைந்தன் முத்தையா உள்ளிட்ட எழுத்தாளா்கள், வாசகா்கள் பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com