முகநூல் குழுவான 'மத்யமர்'-ன் முதலாம் ஆண்டு விழா 

முகநூல் ஏனைய சமூகவலைத்தளங்கள் என்றாலே பொழுதுபோக்குக்குத்தான் என்ற எண்ணத்தை மாற்றி காட்டியிருக்கிறது மத்யமர் எனும் முகநூல் குழு.
மத்யமர் கதைகள் புத்தகம் வெளியீடு
மத்யமர் கதைகள் புத்தகம் வெளியீடு

முகநூல் ஏனைய சமூகவலைத்தளங்கள் என்றாலே பொழுதுபோக்குக்குத்தான் என்ற எண்ணத்தை மாற்றி காட்டியிருக்கிறது மத்யமர் எனும் முகநூல் குழு.  அது என்ன சார் "மத்யமர்" பெயரே வித்யாசமாக இருக்கிறதே என அதன் நிறுவனத்தலைவர் ஷங்கர் ராஜரத்தினத்தை கேட்டோம்.. 

இது எழுத்தாளர் சுஜாதா பிரபலப்படுத்திய வார்த்தை. விளிம்பு நிலையில் உள்ள மனிதர்களுக்கு அரசியல் ஆதாயம் கருதியாவது ஒரு கவனம் சில சமயங்களில் கிடைத்துவிடுகிறது. வசதியானவர்களுக்கு பல விஷயங்களை அந்த வசதியும் செல்வாக்குமே சாதித்துக்கொடுத்துவிடுகிறது. 

இடைப்பட்ட மனிதர்களின் பிரச்னைகளை யாரும் செவி சாய்த்துக்கூட கேட்பதில்லை, காரணம் அவர்கள் வீதிக்கு வரத்தயங்குபவர்கள், அமைதியாக எல்லா சுமைகளையும் "நமக்கு விதிச்சது அவ்வளவுதான்" என  புலம்பிக்கொண்டே கனவுகளோடு மட்டும் வாழ்ந்துவிட்டு போய்விடுகிறார்கள். 

அதே சமயம் சமூக நெறிகளுக்கு உட்பட்டு ஓரளவு நேர்மையுடன் வாழும் வர்க்கம் இவர்கள்தான். மத்யமர் என்ற பெயரில் இவர்களை ஒருங்கிணைத்து இந்த அமைப்பு நடுத்தர வர்க்கத்தின் குரலாய் ஒலிக்கவேண்டும் என்பதே எங்களது நோக்கம் என்கிறார்.
 
ஒரே வருட காலத்தில் சுமார் இருபதினாயிரம் உறுப்பினர்களை கொண்ட குழுவாக வளர்ந்ததோடு மட்டுமல்லாமல் இணையத்தில் எல்லோராலும் அதிகம் கவனிக்கப்படும் குழுவாக தன்னை மேம்படுத்திக்கொண்டிருக்கிறது. பிரபல எழுத்தாளர்கள், அரசியல்வாதிகள், மருத்துவர்கள், பல்வேறு துறையை சார்ந்த  நிபுணர்கள், திரைப்பட பிரபலங்கள் முதல் ஆட்டோ ஓட்டுனர்கள், சில்லறை வியாபாரிகள் உள்ளிட்ட சாமான்யர்கள் என்ற பலதரப்பு மக்களும் இதில் தீவிர உறுப்பினர்கள்.

மற்றொரு குறிப்பிடத்தக்க அம்சம் என்னவென்றால் இதில் அறுபது சதவிகிதம் உறுப்பினர்கள் பெண்கள். தொடங்கிய நாள் முதலே,  இந்த தளம் கண்ணியம் மிகுந்த இடமாக இருக்கவேண்டும் என்பதில் உறுதியாக இருந்தோம். பொதுவாகவே பெண்கள் அதிகம் ஈடுபாட்டுடன் இருக்கும் இடத்தில் கண்ணியம் இயற்கையாகவே அது அமைந்துவிடும் என்ற நம்பிக்கை அதற்கு முக்கிய காரணம் என்கிறார் அதன் நிர்வாக குழு உறுப்பினர் சுவாமிநாதன். 

இங்கு பெண்கள் தங்களுடைய  தனிப்பட்ட பிரச்னைகளுக்கு கூட  தீர்வுகளை விவாதிக்கும் நோக்கில், பதிவிடுவதை பாதுகாப்பாக உணர்கிறார்கள். உதாரணமாக, தமிழகத்தில் சில மாதங்களுக்கு முன்  அதிர்ச்சியூட்டும் விதமாக ஒரு சிறுமி பாலியல் பலாத்கார செய்தி வந்த சூழலில் "பாலியல் தொந்தரவுகள்" என ஒரு தலைப்பு கொடுத்தபோது தயக்கமின்றி அலுவலகம் முதல் தங்கள் குடும்ப உறவுகள் வரை அவர்களுக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவங்களை கூட ஒரு எச்சரிக்கையாகவும் விழிப்புணர்வோடும் மிக நேர்த்தியாக எழுதினார்கள்.  

தினந்தோறும்  நூற்றுக்கணக்கான ஆக்கப்பூர்வமான பதிவுகளை சரிபார்த்து அதற்கு வரும் பின்னூட்டங்களை ஒருங்கிணைக்கும் பெரும் பொறுப்பினை பெண்களே தன்னலமற்று நடுநிலையோடு  செய்து வருகின்றனர்.
  
ஞாயிறு தோறும் சுவாரஸ்யமான ஒரு தலைப்பினை கொடுத்து உறுப்பினர்களை அதைப் பற்றி எழுத சொல்லி இன்று மத்யமர் ஒரு எழுத்து பாசறையாகவே மாறிவிட்டது என்கிறார் டாக்டர் ரோஹிணி கிருஷ்ணா. இதில் எழுத தொடங்கியவர்களில் சிலர் இன்று பல வெகுஜன மற்றும் தரமான இலக்கிய பத்திரிகைகள் நடத்தும்  சிறுகதை போட்டிகளில் பரிசுகளை வென்று வருகிறார்கள்.   

இதைத் தவிர இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை வெளிச்சம் என்றொரு நேரடி காணொளி நிகழ்ச்சியை முகநூல் மூலமே வெற்றிகரமாக நடத்துகிறார்கள். அரசியல், மருத்துவம், பங்குவர்த்தகம், காப்பீடு உள்ளிட்ட துறையை சார்ந்த நிபுணர்களை உறுப்பினர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்க சொல்லி அறிவுக்கு வலு சேர்க்கிறார்கள். ஆயிரக்கணக்கில் ஒரே நேரத்தில் முகநூலில் பார்க்கும் இந்த நிகழ்ச்சி  நல்ல வரவேற்பினை பெற்றுவருகிறது என்கிறார் நிர்வாக குழு உறுப்பினர் கீர்த்திவாசன்.

மத்யமர் தன் முதலாம் ஆண்டு விழாவை பிப்ரவரி மாதம் சென்னையில் தி.நகர் இன்போசிஸ் அரங்கில் ஒரு நாள் முழுவதும் கொண்டாடியது. வெளிநாடுகள், வெளி மாநிலங்கள் மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதியிலிருந்தும் ஐநூறுக்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் ஒரு திருமண வைபவத்தை போலவே  வந்து கலந்து கொண்டார்கள். சக்கர நாற்காலி, உதவி செய்ய பணிப்பெண் என உடல் உபாதைகளையும் பொருட்படுத்தாது எண்பது வயதிற்கும் மேற்பட்டவர்களும் கூட நெகிழ்ச்சியோடு கலந்துகொண்டார்கள்.

குழு உறுப்பினர்களின் உதவியோடு கஜா புயலின் போது பாதிக்கப்பட்ட மக்களுக்கு கணிசமான பொருளுதவியும் களப்பணியும் செய்ததை பற்றி மத்யமர் ஆஸ்தான வரை கலைஞர் ரேவதி பாலாஜி நினைவு கூர்ந்தார். அது கொடுத்த ஊக்கமே மத்யமர் அறக்கட்டளையின் தோற்றம் என்றும் இதைக்கொண்டு மாநகராட்சி பள்ளிக் குழந்தைகளின் கல்வியில் உதவி  மற்றும் ஏழைக்குழந்தைகளின் வளர்ச்சியிலும் மத்யமர்களின் எதிர்கால பங்கினை பற்றியும் விவரித்தார் நிர்வாகக்குழு உறுப்பினர் மீனாக்ஷி ஒலகநாதன்.

மத்யமரில் வெளிவந்த சிறுகதைகளில் சிறந்த சிலவற்றை தொகுத்து மத்யமர் பதிப்பகத்தின் மூலம் ஒரு புத்தகத்தொகுப்பை வெளியிட்டிருக்கிறார்கள். எழுத்தாளர் பாஸ்கரன் ஜெயராமன் அதனை வெளியிட திரையிசை பிரபலம் அபஸ்வரம் ராம்ஜி அதன் முதல் பிரதியை பெற்றுக்கொண்டார்.

மத்யமர் பதிப்பகம், மத்யமர் அறக்கட்டளை, மத்யமர் இணையதள டி.வி., மத்யமர்.காம் ஆகியவை இந்த ஆண்டில் பெரும் எழுச்சியோடு செயல்படும் என்று நிறுவனர் ஷங்கர் தன் உரையில் குறிப்பிட்டார்.

உறுப்பினர்களின் கேள்வி பதில் நிகழ்ச்சியும், உரையாடல்களும், பல்வேறு கலைநிகழ்ச்சிகளோடு அறுசுவை உணவும் மத்யமரின்  முதலாம் ஆண்டு விழாவில் அனைவருக்கும் பெரும் நிறைவைக்கொடுத்தாலும் அது மேலும் அதிக எதிர்பார்ப்பை தோற்றுவித்திருக்கிறது என்பதே நிஜம்..
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com