மகாபலிபுரத்தில் பிரதமர் மோடி எழுதிய கவிதையின் தமிழாக்கம்

அளப்பரிய, முடிவற்ற,ஒப்பில்லாத, வர்ணனைகளைக்
Prime Minister Narendra Modi
Prime Minister Narendra Modi
Updated on
1 min read

அலைகடலே!
அடியேனின் வணக்கம்

அளப்பரிய, முடிவற்ற,
ஒப்பில்லாத, வர்ணனைகளைக்

கடந்த, நீலக்கடலே 
உலகிற்கு உயிரளிக்கும் நீ
பொறுமையின் இலக்கணம்
ஆழத்தின் உறைவிடம்

அலைகடலே!
அடியேனின் வணக்கம்.

வெளித்தோற்றத்திற்கு
கோபமாய், வீரத்துடன்
பேரிரைச்சலோடு எழும் அலைகள்
- உன் வலியா? வேதனையா?
துயரமா? எதன் வெளிப்பாடு?
இருந்தபோதிலும் உன்னை
கலக்கமின்றி, தடுமாற்றமின்றி
உறுதியுடன் நிற்கச் செய்கிறது
உன் ஆழக்ம்.

அலைகடலே!
அடியேனின் வணக்கம்.

உன்னிடம் உள்ளது
எல்லையில்லாத வலிமை,
முடிவில்லாத சக்தி ஆனாலும்
பணிதலின் பெருமையை
நிமிடந்தோறும் நவில்கிறாய் - நீ
கரையைக் கடக்காமல்
கண்ணியத்தை இழக்காமல்.

அலைகடலே!
அடியேனின் வணக்கம்

கல்வித் தந்தையாய்
ஞான குருவாய்

வாழ்க்கைப் பாடத்தை
போதிக்கிறாய் நீ
புகழுக்கு ஏங்காத,
புகலிடத்தை நாடாத
பலனை எதிர்நோக்காத
உன் பயணம் தரும் பாடங்கள் ஏராளம்

அலைகடலே!
அடியேனின் வணக்கம்

நிற்காமல், சளைக்காமல்
வீசும் உன் பேரலைகள்
‘முன்னேறுவதே வாழ்க்கை’ என்ற
உபதேச மந்திரத்தை உணர்த்தும்
முடிவில்லாத பயணம்
முழுமையான உன் போதனை

அலைகடலே!
அடியேனின் வணக்கம்

விழும் அலைகளிலிருந்து
மீண்டும் எழும் அலைகள்
மறைந்து
மீண்டும் துவங்கும் உதயம்
பிறப்பு - இறப்பு என்பது தொடர் வட்டம்
உனக்குள் மடிந்து - பின்
உயிர்த்தெழும் அலைகள்
மறுபிறப்பின்
உணர்வூட்டம்

அலைகடலே
அடியேனின் வணக்கம்

பழம்பெரும் உறவான
சூரியனால் புடமிட்ட
தன்னையழித்து,
விண்ணைத் தொட்டு
கதிரவனை முத்தமிட்டு
மழையாய்ப் பொழிந்து

நீர்நிலைகளாய், சோலைகளாய்
மகிழ்ச்சி மணம் பரப்பி
படைப்பை அலங்கரித்து - எல்லோருக்கும்
வாழ்வளிக்கும் நீர் நீ.

அலைகடலே!
அடியேனின் வணக்கம்

வாழ்வின் பேரழகு நீ -
விஷத்தை அடக்கிய
நீலகண்டன் போல் - நீயும்
எது வந்தாலும் ஏற்றுக் கொண்டு
புது வாழ்வைப் 
பிறர்க்களித்து
சொல்கிறாய்
சிறந்த வாழ்வின் 
மறைபொருளை

அலைகடலே 
அடியேனின் வணக்கம்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com