வெல்ல முடியாத நோய்த் தொற்றல்ல கரோனா: வேலூரில் குணமடைந்த இருவரின் அனுபவம்

தேவையற்ற அச்சத்தை தவிர்ப்பதும், மருத்துவர்கள் வழிமுறைகளைப்  பின்பற்றுவதன் மூலமாக கரோனா நோயை வெல்ல முடியும் என்று வேலூரில் கரோனா நோய் தொற்றில் இருந்து மீண்ட இருவர் தெரிவித்துள்ளனர்.
வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கரோனா சிகிச்சை முடிந்து வீடு திரும்பியவர்கள்
வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கரோனா சிகிச்சை முடிந்து வீடு திரும்பியவர்கள்
Published on
Updated on
2 min read


வேலூர் : தேவையற்ற அச்சத்தை தவிர்ப்பதும், மருத்துவர்கள் வழிமுறைகளைப்  பின்பற்றுவதன் மூலமாக கரோனா நோயை வெல்ல முடியும் என்று வேலூரில் கரோனா நோய் தொற்றில் இருந்து மீண்ட இருவர் தெரிவித்துள்ளனர்.

வேலூர் மாவட்டத்தில் இதுவரை 22 பேர் கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டு அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, சிஎம்சி மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தனர்.

இவர்களில் தில்லியில் நடைபெற்ற மாநாட்டுக்குச் சென்று வந்த 6 பேருக்கு கரோனா நோய் தொற்று உறுதி செய்யப்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கடந்த 20 நாள்களாக சிகிச்சை பெற்று வந்தனர்.

இதில் வேலூர் கருகம்பத்தூர், கஸ்பா, சின்னஅல்லாபுரம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த மூவர் முழுமையாகக் குணமடைந்ததை அடுத்து அவர்கள் சனிக்கிழமை மதியம் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

தற்போது வீடுகளில் 14 நாள்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ள அவர்களில் இருவரும் தங்களது சிகிச்சை அனுபவம் குறித்து தெரிவித்துள்ளனர்.

கஸ்பா பகுதியில் முட்டை வியாபாரம் செய்து வரும் 41 வயது நபர் கூறியது:

தில்லியில் நடைபெற்ற மாநாட்டுக்குச் சென்றுவிட்டு கடந்த மார்ச் 24 ஆம் தேதி வேலூருக்கு வந்தோம். பின்னர், 30 ஆம் தேதி அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்றதில் எனக்கு கரோனா நோய் தொற்று இருப்பது உறுதியானது. எனினும், அப்போது எனது உடலில் சளி, இருமல், காய்ச்சல், மூச்சு திணறல் போன்ற எந்த அறிகுறிகளும் காணப்படவில்லை.

தொடர்ந்து நாள்தோறும் காலை, இரவுவேளையில் மாத்திரைகள் மட்டுமே அளிக்கப்பட்டன. ஊசிகள் ஏதும் போடவில்லை. அத்துடன், மூன்று வேளையும் சிறப்பான சைவ உணவுகள் வழங்கப்பட்டன. மருத்துவர்களும், செவிலியர்களும் நல்லமுறையில் எங்களைக் கவனித்துக் கொண்டனர்.

தொடர்ந்து வாரத்துக்கு ஒருமுறை என 3 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதில் கடைசி 2 பரிசோதனை முடிவுகளில் கரோனா இல்லை என்பது உறுதி செய்யப்பட்டதை அடுத்து சனிக்கிழமை வீட்டுக்கு அனுப்பி வைத்தனர்.

அந்தவகையில், மருத்துவமனையில் கிடைத்த அனுபவத்தின் அடிப்படையில் சொல்லப்போனால் மக்கள் கரோனா நோய்த் தொற்று குறித்து தேவையற்ற அச்சம் கொள்ள வேண்டியதில்லை. பாதிப்பு ஏற்பட்டவர்கள் மருத்துவர்கள் கூறும் வழிமுறைகளை முறையாக பின்பற்றினாலே கரோனாவில் இருந்து எளிதில் விடுபடலாம் என்றார்.

இதேபோல், சின்னஅல்லாபுரம் பகுதியைச் சேர்ந்த வாசனை பொருள்கள் வியாபாரியான 25 வயது நபர் கூறியது: தில்லி மாநாட்டுக்குச் சென்று வந்த நிலையில், மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்று பரிசோதனை செய்தபோது, எனக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதியானது.

தொடர்ந்து, மருத்துவர்கள் கூறும் வழிமுறைகளை முறையாகப் பின்பற்றி மாத்திரைகளையும் அவர்கள் அளித்த உணவுகளையும் எடுத்துக் கொண்டோம். இதன் மூலம் 20 நாள்களில் கரோனாவில் இருந்து விடுபட்டுள்ளேன். தொடர்ந்து 14 நாள்கள் வீட்டைவிட்டு வெளியில் செல்லக்கூடாது என்றும் அதிகாரிகள் கட்டளையிட்டுள்ளனர்.

இதன்படி, தற்போது வீட்டிலேயே இருந்து வருகிறேன். கரோனா நோய் தொற்று குறித்து மக்களிடையே தேவையற்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. அதனைக்  கைவிட்டு அரசும், மருத்துவர்களும் கூறும் வழிமுறைகளைப் பின்பற்றினாலே கரோனா நோய்த் தொற்று வராமல் தடுக்கவும், வந்தாலும் விரைவில் குணமடையவும் முடியும் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com