புதுக்கோட்டை இளைஞருக்கு  கரோனா தொற்று உறுதி

புதுக்கோட்டை மாவட்டத்தில் இதுவரை கரோனா தொற்று ஒன்றுகூட உறுதி செய்யப்படாமல் இருந்து வந்த நிலையில், முதன்முதலாக இளைஞருக்கு ஒருவருக்கு தொற்று இருப்பது இன்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
1 min read

புதுக்கோட்டை:  புதுக்கோட்டை மாவட்டத்தில் இதுவரை கரோனா தொற்று ஒன்றுகூட உறுதி செய்யப்படாமல் இருந்து வந்த நிலையில், முதன்முதலாக இளைஞருக்கு ஒருவருக்கு தொற்று இருப்பது இன்று (திங்கள்கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களிலும் கரோனா வைரஸ் பாதித்தோர் எண்ணிக்கை உயர்ந்து வரும் நிலையில், புதுக்கோட்டை மாவட்டம் பூஜ்ஜிய நிலையிலேயே இருந்து வந்ததை மாவட்ட மக்கள் மகிழ்ச்சியுடன் பார்த்து வந்தனர்.

இந்நிலையில் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் சார்பில் நகரிலுள்ள ராணியார் மருத்துவமனையிலும், அறந்தாங்கி அரசு மருத்துவமனையிலும் தனிமைப்படுத்தப்பட்ட சிறப்பு வார்டுகள் அமைக்கப்பட்டன.

இந்த வார்டுகளில் அவ்வப்போது கரோனா அறிகுறிகளுடன் அனுமதிக்கப்படுவோரின் திசு மாதிரிகள் எடுக்கப்பட்டு திருச்சி, திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரிகளிலுள்ள பரிசோதனை மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு வந்தன.

அதேபோல, வெளிநாடுகளில் இருந்து ஊருக்குத் திரும்பியோர் மற்றும் தில்லியில் மாநாட்டுக்குச் சென்று வந்தோரின் குடும்பத்தினருக்கும் பரிசோதனை செய்து பார்த்துவிட சுகாதாரத் துறை முடிவு செய்தது.

இதன்படி அந்தந்த அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் திசு சேகரிப்புக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. அந்த வகையில் மாவட்டம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமை வரை சுமார் ஆயிரம் பேருக்கு மாதிரிகள் எடுக்கப்பட்டு அவர்களுக்கு கரோனா தொற்று இல்லையென முடிவுகள் வந்தன.

இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை மிரட்டுநிலையைச் சேர்ந்த 23 வயது இளைஞர் ஒருவரும், பெருங்குடியைச் சேர்ந்த 27 வயது இளைஞர் ஒருவரும் தனிமைப்படுத்தப்பட்ட கரோனா சிறப்பு வார்டில் அனுமதிக்கப்பட்டனர்.

இவர்களின் திசுக்கள் மாதிரி எடுக்கப்பட்டு திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன. இவர்களில் பெருங்குடி இளைஞருக்கு கரோனா தொற்று இல்லையென பரிசோதனை முடிவு வந்தது. ஆனால், மிரட்டுநிலையைச் சேர்ந்த இளைஞருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவரது தந்தை தில்லியில் நடைபெற்ற மாநாட்டுக்குச் சென்று வந்தவர். அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் சந்தேகத்தின் பேரில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு கரோனா இல்லையென பரிசோதனை முடிவு வெளிவந்ததை அடுத்து அவர் விடுவிக்கப்பட்டார்.

அதேபோல குடும்பத்திலுள்ள பிறகுக்கும் கரோனா தொற்று இல்லாத நிலையில், தற்போது அவரது மகனுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அந்த இளைஞர் திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தப்பட்ட சிறப்பு வார்டுக்கு திங்கள்கிழமை பகலிலேயே அனுப்பி வைக்கப்பட்டதாக சுகாதாரத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com