அதிகரிக்கும் கரோனா நோயாளிகள் - திணறுகிறது தமிழர்கள் நிறைந்த தாராவி
அதிகரிக்கும் கரோனா நோயாளிகள் - திணறுகிறது தமிழர்கள் நிறைந்த தாராவி

அதிகரிக்கும் கரோனா - திணறுகிறது தமிழர்கள் நிறைந்த தாராவி

கரோனா நோய்த் தொற்றால் மிகப் பெரும் ஆபத்தை எதிர்கொண்டிருக்கிறது மும்பை தாராவி குடிசைப் பகுதி...

தாராவி - ஆசியாவின் மிகப் பெரிய குடிசைப் பகுதி; தமிழகத்துக்கு வெளியே மிக அதிக அளவில் நெரிசலாகத் தமிழர்கள் வசிக்கும் பகுதி. குடிசைப் பகுதி என்றால் எல்லாமே குடிசைகள் அல்ல, குடிசைகளுடன் தகரம் வேய்ந்த சிறு கட்டடங்கள், சின்னச்சின்ன கான்கிரீட் கட்டடங்கள் எல்லாமே இருக்கின்றன.

இந்தப் பகுதியில் ஏறத்தாழ பத்து லட்சம் பேர் வசிக்கிறார்கள். இவர்களில் பெரும்பாலானவர்கள் தொழிற்சாலைத் தொழிலாளர்கள், வேலைக்காரப் பெண்கள், ஆண்களும் பெண்களும் என வீட்டு வேலை செய்வோர், அனைத்து வகையான வாகன ஓட்டுநர்கள் என அனைத்து வகையான அடித்தட்டு மக்களும் இங்கே வசிக்கிறார்கள். 

கரோனா பரவலைத் தடுக்கும் தீவிர நடவடிக்கையின் ஒரு பகுதியாக முற்றும் முழுதான குடிசைப் பகுதிகளில் வசிக்கும் சுமார் 1.25 லட்சம் பேரைக் கண்காணிக்க ட்ரோன் கேமராக்கள் பயன்படுத்தப்படுகின்றன. வீட்டுக்குள்ளிருந்து வெளியே வந்தாலே காவல்துறைக்குத் தெரிந்துவிடும்.

இரண்டரை சதுர கிலோ மீட்டர் பரப்பிலுள்ள தாராவி பகுதியில் மிகவும் குறைவான எண்ணிக்கையிலேயே பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ள நிலையில், தற்போது மகாராஷ்டிர அரசும் மும்பை பெருமாநகராட்சியும் எடுத்துவரும் நடவடிக்கைகளால் அவ்வளவு எளிதில் கரோனா பரவலைத் தடுத்துவிட முடியாது என்று அஞ்சப்படுகிறது.

அரசு அலுவலர்களால் மிஷன் தாராவி எனப் பெயர் சூட்டப்பட்டுள்ள இந்த நடவடிக்கையில் நல்ல பலன் விளையும் என்ற நம்பிக்கை இங்கு வசிப்போருக்கே இருப்பதாகத் தெரியவில்லை.

குறுகலான தெருக்கள், நெருக்கமான வீடுகள், மிக மோசமான சுகாதார நிலைமை எல்லாமும் கரோனா பரவலுக்கு மிக வசதியாக இருக்கின்றன. 

தாராவியின் மிகப் பெரிய சவால்,  ஒரு சிறிய அறையில் 10 முதல் 15 பேர் வரையிலும்கூட வசிக்கிறார்கள் என்பதே. இவர்களுக்கு நடுவே எவ்வாறு சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க முடியும் என்கிறார்கள் அரசு அலுவலர்கள்.

தாராவியின் முக்கியமான பகுதியில் ஏப்ரல் தொடக்கத்தில் முதன்முதலாக ஒருவருக்கு கரோனா தொற்று கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், தாராவியின் தொற்று மிகுதியுமுள்ள 5 இடங்களில் கடுமையான ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டுவருகிறது.

இந்தப் பகுதிகளுக்குள் யாருமோ அனுமதிக்கப்படுவதில்லை, மளிகைக் கடைகள் உள்பட அனைத்துக் கடைகளும் மூடப்பட்டுள்ளன. மக்கள் சட்டத்தை மதித்து நடந்துகொள்கிறார்களா  என்பதைக் கண்காணிக்க ட்ரோன்களைக் காவல்துறையினர் பயன்படுத்துகின்றனர்.

அரசு நடத்தும் பள்ளியொன்று, ஒரு விளையாட்டு வளாகம், செயல்படாமல் இருந்த முன்னாள் மருத்துவமனை ஆகியவை கரோனா தொற்றாளர்களைத் தனித்து வைப்பதற்கான பகுதிகளாகப் பயன்படுத்தப்படுகின்றன.

கடந்த வாரத்தில் மட்டும் சுமார் 40 ஆயிரம் பேருக்கு வெப்பமானியின் மூலம் சோதனை செய்துபார்க்கப்பட்டது.

மேலும், தாராவியிலுள்ள 225 பொதுக் கழிப்பிடங்களும் ஒவ்வொரு நாளும் கிருமிநாசினி தெளித்து சுத்தப்படுத்தப்படுகின்றன. 

தாராவியில் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டோருக்கு, முன்தடுப்பு ஏற்பாடாக மலேரியா சிகிச்சைக்கான மாத்திரையான ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மாத்திரைகளை வழங்குவது பற்றிக்கூட அலுவலர்கள் சிந்தித்து வருகின்றனர். 

தாராவியில் உள்ளபடியே மக்கள் இப்போது பெரும் பீதியிலும் மனக் கலக்கத்திலும் இருக்கின்றனர். மத்திய அரசின் அனுமதி கிடைக்கப்பெற்றால் உடனடியாக குளோரோகுயின் மாத்திரைகள் விநியோகம் தொடங்கப்படலாம்.

நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து இங்கே வந்து தங்கியிருக்கும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள், வாரக்கணக்கில் வேலை எதுவும் இல்லாததால் உணவுக்கே திண்டாடத் தொடங்கிவிட்டனர். இவர்களுக்கு உதவும் வகையில் உணவு, மருந்துப் பொருள்களைக் கொடுக்கும் பணியில் தன்னார்வலர்களுடன் இணைந்து அலுவலர்கள் செயல்பட்டு வருகின்றனர்.

மிக எளிதாகவும் வேகமாகவும் பரவிவிடும் என்ற அச்சத்தின்  காரணமாக கரோனா அறிகுறிகள் இல்லாதவர்களுக்குக்கூட பரிசோதனைகளைச் செய்யலாம் என்று தாராவியிலுள்ள அலுவலர்கள் யோசனை தெரிவித்தபோதிலும் மத்திய அரசு நிராகரித்துவிட்டது.

மத்திய அரசின் வழிகாட்டு நெறிப்படி, மிகுந்த ஆபத்தான நிலை என்றாலோ, தொற்று உள்ளவர்களுடன் நேரடித் தொடர்பில் இருந்திருந்தால் மட்டும்தான் அறிகுறிகள் இல்லாதவர்களுக்குப் பரிசோதனை செய்ய முடியும். 

கடந்த மூன்று வாரங்களாக ஒரு பிரச்சினையுமில்லை, ஆனால், திடீரென வறட்டு இருமலும் காய்ச்சலும் வந்தது, தொற்று இருப்பதாகக் கூறுகிறார்கள், குறையவே இல்லை என்கிறார், 9 நாள்களாக மருத்துவமனையிலிருக்கும் ஒருவர். இவர் இத்தனை நாள்களாகக் குடும்பத்தினருடனும் அக்கம்பக்கத்திலிருப்பவர்களுடன் பழகிக்கொண்டுதான் இருந்திருக்கிறார். அவர்களுக்கு எல்லாம் என்னவாகுமோ என்று அச்சப்படுகிறார் இவர்.

ஏற்கெனவே, இங்குள்ள மருத்துவமனைகள் நிரம்பிவிட்ட நிலையில்  மேலும் மேலும் கரோனா நோய்த் தொற்றுள்ளவர்கள் கண்டுபிடிக்கப்பட்டு வருவது அதிர்ச்சியளிப்பதாக இருக்கிறது.

தாராவியில் வியாழக்கிழமை மேலும் 25 பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 214 ஆக அதிகரித்திருக்கிறது. இந்தப் பகுதியில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 13 ஆக உயர்ந்திருக்கிறது.

ஏற்கெனவே, நோயாளிகளின் குடும்பத்தினர், பழகியவர்கள் என முன்னெச்சரிக்கையாக 600-க்கும் மேற்பட்டோர் தனித்தனி மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

தாராவியில் ஒவ்வொரு நாளும் கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டிருக்கும் நிலையில் இந்தச் சூழ்நிலையை எவ்வாறு எதிர்கொண்டு வெல்லப் போகிறோம் எனத் தெரியாமல் தாராவி மக்கள் மட்டுமல்ல, மருத்துவ, மாநகராட்சி, அரசு அலுவலர்களும் திணறிக் கொண்டிருக்கின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com