கோமாவில் வட கொரிய அதிபர் கிம்? உண்மை அறியத் துடிக்கும் சீனா, அமெரிக்கா

வட கொரிய அதி உயர் தலைவரான கிம் ஜோங் உன் இறந்துவிட்டதாக ஒருபுறமும், அவர் கோமாவில் இருப்பதாகவும் ஒருபுறமும் ஓய்வில்தான் இருக்கிறார் என்று இன்னொரு புறமும் தகவல்கள்  தலைவிரித்தாடிக் கொண்டிருக்கின்றன.
கோமாவில் வட கொரிய அதிபர் கிம்? உண்மை அறியத் துடிக்கும் சீனா, அமெரிக்கா

வட கொரிய அதி உயர் தலைவரான கிம் ஜோங் உன் இறந்துவிட்டதாக ஒருபுறமும், அவர் கோமாவில் இருப்பதாகவும் ஒருபுறமும் ஓய்வில்தான் இருக்கிறார் என்று இன்னொரு புறமும் உறுதித் தன்மையற்ற தகவல்கள்  தலைவிரித்தாடிக் கொண்டிருக்கின்றன.

அவரைப் பற்றிய உண்மையை அறிந்துகொள்வதில் வேறெந்த நாடுகளையும்விட சீனாவும் அமெரிக்காவும்தான் மிகுந்த ஆர்வம் கொண்டிருக்கின்றன.

வட கொரிய நிலைமைகளை மிக உன்னிப்பாக அமெரிக்கா கவனித்துக் கொண்டிருக்கும் நிலையில், எப்படியாவது உண்மையை அறிந்துகொண்டுவிட முடியாதா என்ற ஆவலில் மருத்துவக் குழுவொன்றை வட கொரியாவுக்கு அனுப்பியிருக்கிறது சீனா.

36 வயதான அதிபர் கிம், இரு வாரங்களுக்கும் மேலாகப் பொது நிகழ்ச்சிகளில் எங்கேயும் தோன்றவில்லை என்பதைத் தொடர்ந்து, மிக வேகமாக அவரைப் பற்றிய வதந்திகள் பரவிக் கொண்டிருக்கின்றன.

வட கொரியத் தலைவர் இறந்துவிட்டதாக "மிக உறுதியான வட்டாரங்கள்" தமக்குத் தெரிவித்ததாக சீனப் பத்திரிகையாளர் ஷிஜியான் ஷிங்சௌ குறிப்பிடுகிறார்.

சீன வெளியுறவு அமைச்சர்களில் ஒருவருடைய உறவினரான இந்தப் பெண்ணுக்கு சமூக ஊடகமான வெய்போவில் ஒன்றரை கோடிக்கும் அதிகமாகப் பின்தொடர்வோர் இருக்கின்றனர். 

இதனிடையே, இதய அறுவைச் சிகிச்சைக்குப் பின் அவர் கோமா நிலையில் இருப்பதாக ஜப்பானிய வார இதழொன்று தெரிவித்துள்ளது.

நகரைவிட்டு வெளியே சென்றிருந்தபோது அவருக்கு நெஞ்சு வலி வந்ததாகவும் உடனடியாக அவருடைய பாதுகாவலர்கள் அவரை மருத்துவமனையில் கொண்டு சேர்த்ததாகவும் ஷுகான் கென்டாய் என்ற அந்த இதழ் குறிப்பிடுகிறது.

தாமதமாக மேற்கொள்ளப்பட்ட சிகிச்சைக்குப் பின் மிகவும் உடல் நலம் குன்றியிருப்பதாகவும் என்றும் தெரிவித்துள்ளது.

அறுவைச் சிகிச்சை செய்த டாக்டரின் கைகள் நடுங்கியதால் இதய அறுவைச் சிகிச்சையில் தவறு நேர்ந்துவிட்டதாக பெய்ஜிங்கிலிருந்து வெளியான மற்றொரு தகவல் தெரிவிக்கிறது.  

கடைசியாக, ஏப்ரல் 11 ஆம் தேதி நடந்த, கரோனா அச்சுறுத்தல் தொடர்பான ஆளும் தொழிலாளர் கட்சியின் கூட்டத்தில்தான் கிம் கலந்துகொண்டார். அதன் பிறகு எங்கேயும் தென்படவில்லை.

ஏப்ரல் 12 ஆம் தேதி இதய அறுவைச் சிகிச்சை நடந்ததாக தென் கொரியாவிலிருந்து வெளிவரும் டெய்லி நார்த் கொரியா தெரிவித்துள்ளது.

இதன் காரணமாகவே கிம்மால் மறைந்த அவருடைய தாத்தாவும் வட கொரியாவின் நிறுவனருமான சிம் இல் சுங்கின் பிறந்த நாள் விழா கொண்டாட்டங்களில் பங்கேற்க முடியவில்லை எனக் கூறப்படுகிறது.

கரோனா நோய்த் தொற்றால் அவருடைய ஆலோசகர்கள் பாதிக்கப்பட்ட நிலையில், தலைநகர் யாங்யாங்கைவிட்டு, அவருடைய ஓய்வுக்கால நகரான வொன்சானுக்குச் சென்று கிம் தங்கியிருப்பதாகவும் சில வட்டாரங்களில் வதந்திகள் உலவுகின்றன.

வொன்சான் ஓய்விடத்துக்கு அருகே கிம்மின் தனிப்பட்ட ரயில் நிறுத்திவைக்கப்பட்டிருக்கும் செயற்கைக்கோள் படங்களை வட கொரிய விஷயங்களில் ஆர்வம் கொண்டுள்ள 38 நார்த் என்ற அமைப்பு வெளியிட்டுள்ளது.

கிம் ஜோங் உன் உடல்நிலை தொடர்பான செய்திகளைக் கூர்ந்து கவனித்துவருவதாக அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ராபர்ட் ஓ பிரையன் தெரிவித்துள்ளார்.

வட கொரியாவில் வழக்கத்துக்கு மாறான எதுவும் நடைபெறவில்லை என்று அருகிலுள்ள தென் கொரியா தெரிவித்த நிலையில், பின்னர், கிம்மின் உடல் நலக் குறைவு பற்றிய செய்திகள் "தவறானவை" என்று நினைப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்திருக்கிறார்.

2011 ஆம் ஆண்டு தொடக்கம் வட கொரியாவைத் தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் கிம் ஒருவேளை உடல்நிலை காரணமாக ஓரங்கட்டப்பட்டால், அல்லது அவர் இறந்துவிட்டிருந்தால் அடுத்து என்ன நடக்கும் என்பது பற்றித் தெளிவாக எதுவும் தெரியவில்லை.

அடுத்தது யார் என்பது பற்றியெல்லாம் இதுவரையிலும் வட கொரியத் தரப்பில் எதுவும் உருப்படியாகத் தெரிவிக்கப்படவில்லை.

கிம்மின் சகோதரி கிம் யோ ஜோங், அடுத்து தலைமைப் பொறுப்பேற்கும் வாய்ப்பு இருக்கிறது, என்றாலும் அதிகாரத்துக்காகப் பெரும் போட்டி நிலவும். உயர் பொறுப்பில் வெற்றிடம் நேரிட்டால் அதிகாரத்தைக் கைப்பற்ற வட கொரிய ராணுவத்திலுள்ள எதிரெதிர் அணிகள் மோதிக் கொண்டு மிக மோசமான உள்நாட்டுச் சண்டை மூள நேரிடலாம் என்று அரசியல் பார்வையாளர்கள் குறிப்பிடுகின்றனர்.

கிம்மிற்கு உடல்நலப் பிரச்சினைகள் இருக்கின்றன, ஆனால், மிக மோசமடையக் கூடிய அளவில், பொது இடங்களுக்கு வர முடியாத அளவுக்கு  அல்ல என்று அமெரிக்க உளவுத் துறைக்கு நெருக்கமான அலுவலர் ஒருவர் குறிப்பிடுகிறார்.

கிம் ஜோங் உன்னின் தந்தை கிம் ஜோங் இல், அவருடைய தாத்தா கிம் இல் சுங் ஆகிய இருவருமே மாரடைப்பால்தான் இறந்தனர் என்பது குறிப்பிடத் தக்கது.

அமெரிக்காவுக்கு மிகப் பெரிய சவாலாகத் திகழும் வட கொரியாவின் அதிபர் கிம் ஜோங் உன், பொது வெளியில் தோன்றாதிருப்பது பல்வேறு வதந்திகளையும் ஊகங்களையும் பரப்பிக் கொண்டிருக்கிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com