புதுவைக்கு சுற்றுலா பயணிகள் வர நடவடிக்கை தேவை: முதல்வர் நாராயணசாமி கோரிக்கை

எதிர்வரும் ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் புதுவைக்கு சுற்றுலா பயணிகள் வர மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கடிதம் எழுதியுள்ளதாக புதுவை முதல்வர் வே.நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
புதுவை முதல்வர் நாராயணசாமி
புதுவை முதல்வர் நாராயணசாமி

புதுச்சேரி: எதிர்வரும் ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் புதுவைக்கு சுற்றுலா பயணிகள் வர மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கடிதம் எழுதியுள்ளதாக புதுவை முதல்வர் வே.நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

இது குறித்து புதுச்சேரியில் அவர் செய்தியாளர்களிடம் புதன்கிழமை கூறியதாவது:

கரோனாவால் ஒருபுறம் மாநிலத்தின் பொருளாதாரம் பாதித்துள்ளது. மறுபுறம் மத்திய அரசிடம் இருந்து பட்ஜெட்டுக்கு ஒப்புதல் கிடைக்கவில்லை. அதற்காக மத்திய அரசை தொடர்பு கொண்டு ஒப்புதல் பெறுவதற்கான நடவடிக்கை எடுத்து வருகிறோம். வெளிமாநிலத்தில் இருப்போர் புதுவைக்கு வர தடை விதிக்கப்பட்டுள்ளதால், வெளிமாநில வியாபாரம் புதுச்சேரியில் இல்லை.

இதனால் கடை வியாபாரம் பாதிக்கப்பட்டுள்ளது. வியாபாரத்தை பெருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வியாபாரிகள் கோரிக்கை வைத்துள்ளனர். இது தொடர்பாக மத்திய அரசுக்கு கடிதம் எழுதி உள்ளேன். புதுவை மாநிலம் சுற்றுலா தளமாக உள்ளது. இங்கு சுற்றுலா பயணிகள் வந்தால் தான் வியாபாரத்தையும் வருமானத்தையும் பெருக்க முடியும்.

எனவே, மத்திய அரசானது ஆகஸ்ட்1-ஆம் தேதி முதல் புதுச்சேரிக்கு சுற்றுலா பயணிகள் வருவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளேன். உலகில் உள்ள பல நாடுகள் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டாலும் கூட, படிப்படியாக இப்போது சுற்றுலா பயணிகளை வரவேற்க காத்து கொண்டிருக்கின்றன.
அந்த நாடுகளுக்கு இப்போது சுற்றுலா பயணிகள் வந்து கொண்டிருக்கின்றனர். கரோனா தொற்றை காரணம் காட்டி, சுற்றுலாவின் வளர்ச்சியை நாம் தடுத்து நிறுத்த முடியாது. சுற்றுலா பயணிகள் மட்டுமல்ல வெளிமாநிலத்தை சேர்ந்தவர்கள் புதுவைக்கு வரும்போது வியாபாரம் பெருகும், அரசுக்கு வருவாய் பெருகும், உள்ளூர்வாசிகளுக்கு வேலைவாய்ப்பும் கிடைக்கும்.

தற்போது ஹோட்டல்களின் அறைகள் காலியாக இருக்கின்றன. அந்த நிலை மாறும். எனவே, புதுச்சேரிக்கு சுற்றுலா பயணிகள் வருவதை ஊக்குவிக்கும் வகைகளில் திட்டங்களை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று நான் கோரிக்கை வைத்துள்ளேன். இது சம்மந்தமாக மத்திய சுற்றுலா துறை அமைச்சருக்கும் கடிதம் எழுதி ஆவணச் செய்ய வேண்டும் என்று நான் கூறியுள்ளேன். பக்கத்து மாநிலமான தமிழகத்தில் கூட படிப்படியாக தளர்வுகளை அமல்படுத்தி உள்ளனர். இந்தியாவின் மொத்த கரோனா பாதிப்பில் மகாராஷ்டிரம், தமிழகம் 50 சதவீதம் பாதிக்கப்பட்டுள்ளது. அதற்கு அடுத்தபடியாக தில்லி உள்ளது.

ஆனால், புதுவையை பொருத்தவரையில் கரோனா தொற்று பாதிப்பை தடுத்து நிறுத்தியுள்ளோம். இருப்பினும், மாநில மக்கள் இன்னும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று நடவடிக்கை எடுத்து வருகிறாம் என்றார் முதல்வர் நாராயணசாமி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com