திருச்சியில் வெளிநாடுகளிலிருந்து வருவோர் கட்டணமின்றி தங்க ஏற்பாடு

வெளிநாட்டிலிருந்து தாயகம் வருவோருக்கு, இலவசமாக, தனிமைப் படுத்தும் முகாம்களில் தங்கியிருக்க  ஏற்பாடு செய்துள்ளது. எனவே அரசு முகாம்களில் தயக்கமின்றி  தங்கி ஓய்வெடுத்து செல்லலாம்  என மாவட்ட நிர்வாகம்  
திருச்சியில் வெளிநாடுகளிலிருந்து வருவோர் கட்டணமின்றி தங்க ஏற்பாடு


திருச்சி: வெளிநாட்டிலிருந்து தாயகம் வருவோருக்கு, இலவசமாக, தனிமைப் படுத்தும் முகாம்களில் தங்கியிருக்க ஏற்பாடு செய்துள்ளது. எனவே அரசு முகாம்களில் தயக்கமின்றி தங்கி ஓய்வெடுத்து செல்லலாம் என மாவட்ட நிர்வாகம்  மீண்டும் அறிவுறுத்தியுள்ளது.

வெளிநாட்டிலிருந்து வரும் பயணிகள் அவரவர் சொந்த ஊருக்கு செல்வதில் பல்வேறு சிக்கல்களை சந்தித்து வருவதாகவும், குறிப்பாக தமிழகம் வந்த பின்னர், விமான நிலையங்களிலிருந்து சொந்த ஊர் செல்வது, மற்றும் தனிமைப்படுத்தும் முகாம்களுக்கு செல்வதில் கூடுதல் கட்டணங்களை, மாவட்ட நிர்வாகங்கள் கறாராக வசூலிப்பதாக புகார்கள் எழுந்தன.

இது தொடர்பாக, கடந்த இரு நாள்களுக்கு முன்பு, பல்வேறு நாடுகளிலிருந்தும் திருச்சி விமான நிலையத்துக்கு வந்த பயணிகளுக்கும், பேருந்து ஊழியர்கள் மற்றும் வருவாய் துறை அலுவலர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இது குறித்த காணொலி சமூக வலைதளங்களில் பரவியதுடன், நாளிதழ்களிலும் செய்திகள் பிரசுரமாயின. இதனைத் தொடர்ந்து, ஞாயிற்றுக்கிழமை காலை, மாலத்தீவிலிருந்து வந்த பயணிகளில் சிலரும் இதேபோல, அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இது குறித்து,  அரசுப் போக்குவரத்துக் கழகத்தினர் கூறுகையில், விமான நிலையத்திலிருந்து சொந்த ஊருக்கு அரசு பேருந்துகளில் செல்வோர், பேருந்துகளை இயக்குவதற்கு ஆகும் செலவை, அந்த பேருந்தில் செல்வோர் பங்கிட்டுக் கொள்வதன் மூலம் ஒரு நபருக்கான தொகை கணக்கிடப்படுகின்றது. விருப்பமுள்ளோர் பேருந்துகளில் செல்லலாம் அல்லது தனியாக வாகனம் அமைத்தும் செல்லலாம். யாரையும் கட்டாயப்படுத்தி கட்டணங்கள் வசூலிக்கவில்லை என்றனர்.  

தனிமைப் படுத்தும் முகாம்களில் தங்குவது குறித்து மாவட்ட நிர்வாகத்தினர் கூறுகையில், பயணிகள் தாயகம் வருவதற்கு முன்பதிவு செய்து, உரிய அனுமதி கோரும் போதே, விதிமுறைகள் குறித்து தெளிவாக தெரிவித்துள்ளதாக கூறியுள்ளனர். மேலும் அவை குறித்த விவரங்களை வெளியிட்டுள்ளனர்.  

முகாமில் தங்குவதற்கான விதிமுறைகள் :

*  வெளிநாட்டிலிருந்து வரும் பயணிகள் அனைவருக்கும் உடலின் வெப்பநிலை சோதிக்கப்படும். தொடர்ந்து சோதனைக்கான மாதிரிகளும் சேகரிக்கப்படும்.

* வெப்பநிலை சோதனையில் காய்ச்சல் மற்றும் தொடர்புடைய வேறு அறிகுறிகள் தென்பட்டால், உடனடியாக அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு, தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்கப்படும்.

* உடல் நிலை சீராக இருக்கும் பட்சத்தில், திருச்சி மாவட்டத்தினர் திருச்சியிலும், பிற மாவட்டத்தினர் அந்தந்த மாவட்டங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டு குறைந்த பட்சம் ஒரு வாரமாவது தனிமைப்படுத்தப்படுவர்.

* திருச்சி மாவட்டத்தினருக்கு இரு வாய்ப்புகள் அவரவர் விருப்பத்துடன் வழங்கப்பட்டுள்ளது. அதாவது, தனிமைப் படுத்துதலின் போது, மாவட்ட நிர்வாகத்தால் அமைக்கப்பட்டுள்ள முகாம்களில் இலவசமாக தங்குவது அல்லது அவரவர் விருப்பத்துடன் தங்களது சொந்த செலவில், தனியார் விடுதிகளில் தங்கிக்கொள்வது என்பதாகும்.

* மாவட்ட நிர்வாகத்தினர் அமைத்துள்ள முகாம்களில் தங்க விரும்புவோர், சேதுராப்பட்டியில் அமைந்துள்ள அரசு பொறியியல் கல்லூரி வளாகத்தில் இலவசமாக தங்கிக்கொள்ளலாம்.

* தனியார் விடுதிகளில் தங்குவோர் சொந்த செலவில் நிர்ணயிக்கப்பட்டுள்ள விலைப்பட்டியிலில் தங்களுக்கு தேவையானதை தேர்வு செய்து அவற்றில் தங்கிக்கொள்ளலாம். அவர்களை அரசு அலுவலர் கண்காணித்து வருவார்.

* ஒரு வாரம் தனிமைப்படுத்தல் முடிந்ததும் மீண்டும் சோதனை மேற்கொள்ளப்படும் அதில் பாதிப்பு உறுதி செய்யப்படவில்லையெனில், தேவையான அறிவுரைகள் வழங்கப்பட்டு அவரவர் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்படுவர்.

* சோதனையில் தொற்று உறுதி செய்யப்பட்டால், அரசு மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள கரோனா சிறப்பு வார்டில் சேர்க்கப்பட்டு சிகிச்சை மேற்கொள்ளப்படும்.

தனிமைப் படுத்தும் முகாம்களில் பயணிகளுக்கு வழங்கப்படும் வசதிகள் :

தனித்தனியாக படுக்கை விரிப்புகள், போர்வைகள், துண்டு, சோப்பு, பற்பசை, பிரஷ், எண்ணெய், மூன்று வேளையும் உணவு வகைகள், இருவேளையும், தேனீர், குடிநீர் உள்ளிட்டவை வழங்கப்படுகின்றன. மேலும் குளிக்கவும், துணிகளை துவைக்கவும், அவற்றை காயவைக்கவும் வசதிகள் செய்து தரப்பட்டுள்ளன. கைகளை கழுவ திரவ சோப்புகள், கிருமி நாசினிகளும் வழங்கப்படுகின்றன. பயணிகள் பயன்படுத்தும் கழிவறைகள் அவ்வப்போது தூய்மை படுத்தி, கிருமி நாசினிகளும் தெளிக்கப்படுகின்றன. எனவே பயணிகள் தயக்கமின்றி திருச்சி சேதுராப்பட்டியில் உள்ள தனிமைப் படுத்தும் முகாம்களில் தங்கிச் செல்லலாம் என தெரிவித்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com