உண்ண உணவில்லை, குடிக்க நீரில்லை: 60 மணி நேரம் ரயிலில் சென்ற புலம்பெயர் தொழிலாளி பலி

மும்பையிலிருந்து 60 மணி நேரத்துக்கும் மேல் பயணம் செய்து சிறப்பு ரயிலில் ஊர் திரும்பிக்கொண்டிருந்த புலம்பெயர் தொழிலாளர் ஒருவர், உண்ண உணவோ, குடிக்கத் தண்ணீரோ இல்லாத நிலையில் உயிரிழந்தார் என அவருடைய உறவி
உண்ண உணவில்லை, குடிக்க நீரில்லை: 60 மணி நேரம் ரயிலில் சென்ற புலம்பெயர் தொழிலாளி பலி

மும்பையிலிருந்து 60 மணி நேரத்துக்கும் மேல் பயணம் செய்து சிறப்பு ரயிலில் ஊர் திரும்பிக்கொண்டிருந்த புலம்பெயர் தொழிலாளர் ஒருவர், உண்ண உணவோ, குடிக்கத் தண்ணீரோ இல்லாத நிலையில் உயிரிழந்தார் என அவருடைய உறவினர் குற்றம் சாட்டியுள்ளனர்.

உத்தரப் பிரதேசத்தில் ஜான்பூர் மாவட்டத்திலுள்ள சொந்த ஊரான மச்லிஷ்ஷகர் செல்வதற்காகக் கட்டடத் தொழிலாளியான ஜோஹன் யாதவ் மும்பையில் ரயிலேறினார். அவருடன் உறவினரான ரவீஷ் யாதவும் சென்றார்.  

புலம்பெயர் தொழிலாளர்களுக்கான இந்த சிறப்பு ரயில், மும்பை லோகமான்ய திலக் ரயில் நிலையத்திலிருந்து மே 20 ஆம் தேதி இரவு 7 மணிக்குப் புறப்பட்டு, வாராணசி கன்டோன்மென்ட் ரயில் நிலையத்தை மே 23 ஆம் தேதி காலை 7.30 மணிக்குச் சென்றடைந்தது.

ரயிலில் சாப்பிடவோ, குடிக்கவோ எதுவுமே தரப்படவில்லை. வாராணசி ரயில் நிலையத்தைச் சென்றடைய அரை மணி நேரத்துக்கு முன், மிகவும் பசிக்கிறது என்றும் உடம்பெல்லாம் வலிக்கிறது என்றும் குறிப்பிட்ட என்னுடைய மாமா ஜோஹன் யாதவ், திடீரென மயங்கிவிழுந்தார், சில நிமிஷங்களிலேயே அவருடைய உயிர் பிரிந்துவிட்டது என்று குறிப்பிடுகிறார் உறவினர் ரவீஷ்.

ரயிலிலேயே உணவுப் பொட்டலங்களும் தண்ணீர் போத்தல்களும் தருவார்கள் என்று தெரிவித்ததால், நாங்கள் கையில் எதுவும் கொண்டுவரவில்லை.. அவர்களும் எதுவுமே தரவில்லை. அந்தப் பெட்டியில் மற்ற பயணிகளும்கூட உணவும் தண்ணீரும் இல்லாமல்தான் அவதிப்பட்டனர். அந்த ரயிலிலேயே முற்றிலுமாகத் தண்ணீர் இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.

ஆனால், இதை மறுத்த வாராணசி கோட்ட கூடுதல் ரயில்வே மேலாளர் ரவி பிரகாஷ் சதுர்வேதி, வாராணசி வரும் முன்னரே அவர் இறந்துவிட்டார் என்றும் அவருக்கு இதய நோய் இருந்ததாகவும் அதனால் இறந்திருக்கலாம் என்று அவரின் உறவினர்கள் தெரிவித்தனர் என்றும் தெரிவித்தார்.

ஆமாம், என்னுடைய மாமா, இதய நோயாளிதான். ஆனால், 60 மணி நேரத்துக்கும் மேலாகப் பட்டினியாகக் கிடந்ததால்தான் அவர் இறந்தார் என்று ரவீஷ் குற்றம் சாட்டினார்.

ரவீஷும் ஜோகனும் தலா ரூ. 940 பணம் செலுத்திதான் டிக்கெட் வாங்கியதாகவும் புலம்பெயர் தொழிலாளர்களிடம் கட்டணம் பெறுவதில்லை என்று அரசு கூறுவது முற்றிலும் பொய்யானது என்றும் அவர் குறிப்பிட்டார்.

ரயிலில் ஏறும்போதே என்னுடைய மாமா மிகவும் பசியில் இருந்தார். எங்களிடம் சிறிது பணம் இருந்தாலும் வழியில் எங்கும் எதுவும் வாங்க முடியவில்லை என்றும் ரவீஷ் தெரிவித்தார்.

மும்பையில் புறப்பட்டு 18 மணி நேரத்துக்குப் பிறகு மத்தியப் பிரதேசத்திலுள்ள கட்னிக்கு ரயில் வந்துசேர்ந்தது. மூன்று மணி நேரத்துக்கும் அதிகமாக அங்கே ரயில் நின்றிருந்தாலும் உண்ணவோ, குடிக்கவோ எதுவும் கிடைக்கவில்லை.

அடுத்த வந்த பல ரயில் நிலையங்களில் தண்ணீரும் உணவும் வழங்குமாறு ரயில்வே பாதுகாப்புப் படையினரிடம் கேட்டோம். லத்தியைச் சுழற்றிக்கொண்டு ரயிலைவிட்டு இறங்கவே அவர்கள் விடவில்லை என்றும் ரவீஷ் யாதவ் குற்றம் சாட்டினார்.

ரயில் பயணத்தின்போது புலம் பெயர் தொழிலாளர் ஒருவர், பசி, தாகத்தால் உயிரிழக்க நேரிட்டிருப்பது பலரையும் அதிர்ச்சியடைச் செய்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com