கோவையில் 5 பேர் குணமடைந்தனர்: ஆட்சியர் கு. ராசாமணி 

இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்த கோவை கல்லூரி மாணவி உள்பட 5 பேர் குணமடைந்து வீட்டுக்கு அனுப்பிவைக்கப்பட்டதாக ஆட்சியர் கு.ராசாமணி தெரிவித்தார்.
கோவையில் 5 பேர் குணமடைந்தனர்: ஆட்சியர் கு. ராசாமணி 

கோவை: கோவை இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்த கல்லூரி மாணவி உள்பட 5 பேர் குணமடைந்து வீட்டுக்கு அனுப்பிவைக்கப்பட்டதாக ஆட்சியர் கு. ராசாமணி தெரிவித்தார்.

கோவை, இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் கரோனா வைரஸ் நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்ட கோவையைச் சேர்ந்த 58 பேர் உட்பட மொத்தம் 66 பேர்  சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இந்நிலையில் கோவை இ.எஸ்.ஐ. மருத்துமனையில் ஆட்சியர் கு. ராசாமணி திங்கள்கிழமை ஆய்வு மேற்கொண்டார். 

பிறகு அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: 

"இ.எஸ்.ஐ. மருத்துவமனையை பிரத்யேக கரோனா சிகிச்சை மருத்துவமனையாக அறிவிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கோவை, திருப்பூர், நீலகிரி மாவட்டங்களைச் சேர்ந்த 66 பேர் கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்தனர். கோவையில் முதன் முதலாக கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்ட ஸ்பெயின் நாட்டிலிருந்து வந்த கோவை கல்லூரி மாணவி, ஈரோடு ரயில்வே மருத்துவமனையில் இருந்து பணியிட மாறுதல் பெற்று வந்த பெண் மருத்துவர், இவரது 10 மாத ஆண் குழந்தை, வீட்டு பணிப்பெண், திருப்பூரைச் சேர்ந்த தொழிலதிபர் ஆகிய 5 பேரும் அனுமதிக்கப்பட்டு 14 நாள்களை கடந்துவிட்டன. இவர்களுக்கு அதன்பின் மேற்கொள்ளப்பட்ட அனைத்துவித பரிசோதனையிலும் கரோனா நோய்த் தொற்று இல்லாதது உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் முற்றிலும் குணமடைந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து 5 பேரும் திங்கள்கிழமை வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மேலும் 28 நாள்கள் வரை வீட்டை விட்டு வெளியேறாமல் தனிமைப்படுத்தி இருக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

தொடர்ந்து ஏதாவது அறிகுறிகள் இருந்தால் உடனடியாக மருத்துவர்களுக்கும், மாவட்ட நிர்வாகத்துக்கும் தகவல் அளிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. கோவையில் இதுவரை 300 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் 228 பேருக்கு நோய்த் தொற்று இல்லை என்று தெரியவந்துள்ளது. அதில் 64 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  

கோவையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 13 ஆயிரம் படுக்கை வசதிகள் ஏற்பாடு செய்யும் அளவிற்கு கட்டடங்களுகம், வளாகங்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. மேலும் கோவை அரசு மருத்துவமனையில் மட்டும் 140 வென்டிலேட்டர் தயார் நிலையில் உள்ளன. கூடுதலாக வென்டிலேட்டர் உள்ளிட்ட மருத்துவ உபகரணங்கள் இன்னும் ஓரிரு நாள்களில் வழங்கப்படும் என்று முதல்வர் தெரிவித்துள்ளார்" என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com