கடும் மூச்சுத் திணறல்: போரிஸ் ஜான்சன் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதி

பிரிட்டிஷ் பிரதமர் போரிஸ் ஜான்சனுக்குக் கடுமையான மூச்சுத் திணறல் ஏற்பட்டதால் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சையளிக்கப்பட்டுவருகிறது.
கடும் மூச்சுத் திணறல்: போரிஸ் ஜான்சன் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதி

பிரிட்டிஷ் பிரதமர் போரிஸ் ஜான்சனுக்குக் கடுமையான மூச்சுத் திணறல் ஏற்பட்டதால் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சையளிக்கப்பட்டுவருகிறது.

லண்டனிலுள்ள செயின்ட் தாமஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவருடைய உடல் நிலை சீர்குலைந்ததையடுத்து, திங்கள்கிழமை இரவு  அவரை தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு டாக்டர்கள் மாற்றினர்.

ஏற்கெனவே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஜான்சன், திங்கள்கிழமை காலையில் நன்றாகவே இருந்தார். பிற்பகலுக்குப் பிறகு உடல்நிலை சீர்குலையத் தொடங்கியது.

அவர் மூச்சுவிட மிகவும் சிரமப்பட்டதைத் தொடர்ந்து, திங்கள்கிழமை இரவு  7 மணிவாக்கில் அவர் தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டார். அவருடைய உடல்நிலையை  டாக்டர்கள் தீவிரமாகக் கண்காணித்து வருகின்றனர்.

போரிஸ் ஜான்சனுக்கு 55 வயது. இதுவரையிலும் அவருக்கு சுவாசிப்பதற்கு வென்டிலேட்டர் உதவி தேவைப்படவில்லை. இப்போதும் நல்ல சுய நினைவுடன்தான் இருக்கிறார். 

எனினும், ஒருவேளை நிலைமை மோசமடைந்தால் தேவைப்படலாம் என்பதற்காக அவருடைய படுக்கைக்கு அருகிலேயே  வென்டிலேட்டரையும் டாக்டர்கள் வைத்திருக்கின்றனர்.

பிரதமருக்கு 4 லிட்டர் ஆக்ஸிஜன் தேவைப்படுகிறது, பொதுவாக 15 லிட்டர் ஆக்ஸிஜன் தேவை  என்கிற நிலையில்தான் தீவிர சிகிச்சைப் பிரிவு கவனிப்பு தேவை. மற்ற நோயாளிகளை விட பிரதமர் போரிஸ் ஜான்சன் நன்றாகவே இருக்கிறார் என மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.

பிரதமர் போரிஸின் உடல்நிலை பற்றி இன்று காலையில் மருத்துவமனை எவ்வித அறிவிப்பும்  வெளியிடவில்லை. தேவைப்பட்டால் பிரதமரின் அலுவலகத்திலிருந்து தகவல்கள் வெளியிடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது. 

திங்கள்கிழமை இரவு தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்படும் முன்னர்  தன்னுடைய அலுவல்ரீதியான பொறுப்புகளை அவருக்கு அடுத்த நிலையில் இருப்பவரான வெளியுறவுத் துறை அமைச்சர் டொமினிக் ராபுக்கு போரிஸ் ஜான்சன் மாற்றித் தந்துவிட்டார்.

போரிஸ் ஜான்சன் உடல் நலம் பெறும்வரை அரசுப் பணிகளைக் கவனித்துக் கொள்ளும் ராப், கரோனா வைரஸுக்கு எதிரான நடவடிக்கைகளையும் கவனித்துக் கொள்வார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com