கரோனாவால் உயிரிழந்த செவிலியருக்கு அறுவைச் சிகிச்சையில் பெண் குழந்தை; இறப்பும் பிறப்பும் ஒருசேர நிகழ்ந்த துயரம்!

பிரிட்டனில் கரோனாவால் பாதிக்கப்பட்ட செவிலியரான ஒரு நிறைமாத கர்ப்பிணி, அறுவைச் சிகிச்சை மூலம் ஒரு குழந்தை பெற்றுத் தந்துவிட்டு உயிரிழந்தார்.
கோப்புப் படம்
கோப்புப் படம்
Updated on
1 min read

பிரிட்டனில் கரோனாவால் பாதிக்கப்பட்ட செவிலியரான ஒரு நிறைமாத கர்ப்பிணி, அறுவைச் சிகிச்சை மூலம் ஒரு குழந்தையைப் பெற்றுத் தந்துவிட்டு உயிரிழந்தார்.

இறந்த செவிலியருக்கு வயது 28 தான். பிரிட்டன் நல்வாழ்வுத் துறையில் செவிலியராக சேவையாற்றி வந்த இவர் நிறைமாத கர்ப்பிணியும்கூட. 

மருத்துவப் பணியாற்றி வந்த இவர், கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில்  அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

இவருடைய உடல்நிலை ஓரளவு நன்றாக இருப்பதைப் போலத் தோன்றியதால் எப்படியும் தேறிவிடுவார் என்று டாக்டர்கள் பெரிதும் நம்பிக்கையுடன் இருந்தனர்.

ஆனால், கடந்த ஞாயிற்றுக்கிழமை திடீரென அவருடைய உடல்நிலை மிகவும் மோசமடையத் தொடங்கியது. 

இயல்பாகக் குழந்தையைப் பெற்றெடுக்க இனி வாய்ப்பில்லை, அந்த செவிலியரின் நிலையும் சீர்குலைந்து கொண்டிருக்கிறது என்ற நிலையில் உடனடியாக அறுவைச் சிகிச்சை செய்து குழந்தையைக் காப்பாற்றிவிடுவதென டாக்டர்கள் முடிவெடுத்தனர்.

உடனடியாக அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டது. செவிலியர் பெற்றெடுத்தது ஒரு பெண் குழந்தை. பின்னர் சிறிது நேரத்தில் செவிலியரின் உயிர் பிரிந்துவிட்டதாகக் கூறப்படுகிறது.

செவிலியரின் உயிர் எப்போது பிரிந்தது, அறுவைச் சிகிச்சையின்போதே பிரிந்துவிட்டதா, தன்னுடைய பிஞ்சு மகளை அந்தச் செவிலியரால் பார்க்க முடிந்ததா, பார்க்கக் கூடிய நிலையில் அவர் இருந்தாரா, என்பது பற்றிய விவரங்கள் எதுவும் தெரிவிக்கப்படவில்லை.

பிறந்த குழந்தைக்கு கரோனா தொற்று இருக்கிறதா என்பது பற்றியும் உறுதி செய்யப்படவில்லை.

"அந்தத் தாய் மிகவும் கரிசனமான செவிலியர் என்றும் நாங்கள் எதற்காக நிற்கிறோம் என்பதன்  அடையாளமாகத் திகழ்ந்தவர்" என்றும் அவருடன் பணிபுரிந்தவர்கள் நெகிழ்ந்தனர்.

"மிகப் பெரும் பங்களிப்பைத் தந்த அற்புதமான இளம்பெண் அவர்"  என்று மருத்துவமனைத் தலைவர் புகழ்ந்துள்ளார்.

செவிலியரின் குழந்தையை "மிகவும் இருண்ட நேரத்தில் தோன்றிய ஒளிக்கீற்று அந்தக் குழந்தை" என அனைவரும் வர்ணித்தனர்.

பிரிட்டனில் கரோனா நோய்த் தொற்றுக்கான போராட்டத்தில் இதுவரையிலும் சுமார் 30 செவிலியர்கள் உயிரிழந்துள்ளனர்.

அனைவருக்கும் போதுமான அளவுக்குத் தற்காப்பு அணிகலன்கள் தேவை என்று மருத்துவப் பணியாளர்கள் வலியுறுத்தி வருகின்றனர். முகக் கவசங்கள், மருத்துவ அங்கிகளைக்கூட பகிர்ந்துகொள்ள வேண்டிய நிலையிலிருக்கிறார்கள்.

மருத்துவப் பணியாலர்கள் ஒவ்வொருவரின் மரணம் பற்றியும் விரிவாக விசாரித்தறியப்படும் என்று நல்வாழ்வுத் துறை அமைச்சர் மேட் ஹன்காக் உறுதியளித்துள்ளார்.

கரோனா நோய்த் தொற்றின் தாக்குதலைத் தாங்க முடியாமல் ஆயிரக்கணக்கானோரைப் பலி கொடுத்துக்கொண்டு போராடிக் கொண்டிருக்கிறது பிரிட்டன்.

சமாளிக்க முடியாத அளவுக்கு அதிகளவிலானவர்கள் தொற்றால் பாதிக்கப்பட்டு வருவதாலும் தொடரும் உயிரிழப்புகளாலும் திணறுகிறது பிரிட்டன்.

உயிருடன் இருப்பவர்களுக்குச் செயற்கை சுவாச சாதனங்கள், மருந்துகள் பற்றாக்குறை, மருத்துவப் பணியாளர்களுக்கு முகக் கவசங்கள், தற்காப்பு அணிகலன்கள் பற்றாக்குறை,  இறந்தவர்களுக்கு சவப்பெட்டிகள், சவக் குழிகள் பற்றாக்குறை என மக்கள் படாதபாடு பட்டுக்கொண்டிருக்கின்றனர் பிரிட்டிஷ் மக்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com